எரிசக்தி அமைச்சகம்
"இந்தியாவில் மின்சார சந்தையின் மேம்பாட்டிற்காக" மின் அமைச்சகத்தால் அமைக்கப்பட்டக் குழு, முக்கிய பிரச்சனைகளை தீர்க்க விரிவான தீர்வுகளை முன்மொழிகிறது
Posted On:
14 MAY 2023 4:21PM by PIB Chennai
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய மாற்றத்தில் இந்தியாவின் மின்சாரச் சந்தைகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகவிருக்கின்றன. மத்திய மின்சார அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகளின் பிரதிநிதித்துவத்துடன், மின்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு அலோக் குமார் தலைமையில், “இந்தியாவில் மின்சார சந்தையின் வளர்ச்சிக்காக” ஒரு குழுவை அமைத்தது.
குழு அறிக்கையை மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர்.கே.சிங்கிடம் சமர்ப்பித்தது. எதிர்கால இந்திய மின்சார சந்தையின் மறுவடிவமைப்புக்கான திட்ட வரைபடம் மற்றும் குறிப்பிட்ட பரிந்துரைகளை குழு வலியுறுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங், குழுவின் பணிகளைப் பாராட்டும்போது, முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு முக்கியமானவை என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்கும் என்றும் கூறினார். மாற்றங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறந்த கட்ட ஒருங்கிணைப்பை செயல்படுத்தி, தூய்மையான, பசுமையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய இந்தியாவின் ஆற்றல் மாற்றம், புதிய எரிசக்தி ஒழுங்குமுறையின் கீழ் செயல்படும் செயல்பாட்டு மற்றும் மின்சார சந்தை மேம்பாடுகளை செயல்படுத்துவதன் அவசியத்தை மேலும் எடுத்துக்காட்டுகிறது என்று திரு சிங் கூறினார்.
மற்ற நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை சார்ந்து இருக்காமல் நமது சொந்த தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். "இந்தியா சரியான நேரத்தில் தலையீடு செய்வதில் முன்னணியில் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் எரிசக்தி நெருக்கடியின் போது மின்சார விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது, அதே நேரத்தில் பல வளர்ந்த நாடுகளின் மின்சார சந்தைகளில் மின்சாரத்தின் விலை பல மடங்கு அதிகரித்தன" என்று திரு சிங் மேலும் கூறினார். திறன் ஒப்பந்தங்களை வடிவமைக்கும் போது மிகவும் திறமையான மின் உற்பத்தித் திறனைக் கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
2022-23 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய தரவுகளின்படி, இந்திய மின்சார சந்தையில் மொத்த வர்த்தக அளவு 1,02,276 மில்லியன் யூனிட் ஆகும், இது 16,24,465 மில்லியன் யூனிட் என்ற அனைத்து மூலங்களிலிருந்தும் உருவாக்கப்பட்ட மின்சாரத்தின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே குறிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் மின்சாரத்திற்கான உச்ச தேவை 215.8 ஜிகாவாட்டாக இருந்தது, மேலும் இது 2029-30 ஆம் ஆண்டில் 335 ஜிகாவாட்டாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரச் சந்தை சீர்திருத்தங்களுக்கான மின்சக்தி அமைச்சகத்தின் முன்முயற்சிகள், இந்தியாவில் மின்சார சந்தையை மேம்படுத்துவதற்கான குழுவின் முன்மொழியப்பட்ட தலையீடுகளுடன் இணைந்து, இந்தியாவின் மின்சார சந்தைகளை மாற்றியமைத்து, நாட்டின் எரிசக்தி இலக்குகளை நிலையான முறையில் அடைய உதவும்.
***
AD/PKV/DL
(Release ID: 1924086)
Visitor Counter : 227