வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த 6-வது இந்தியா-கனடா அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் கூட்டறிக்கை

Posted On: 10 MAY 2023 9:00AM by PIB Chennai

இந்தியா-கனடா இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான 6-வது அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கனடாவின் ஒட்டாவா நகரில் மே 8ம் தேதி 2023-ல் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலன், ஜவுளி, உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், கனடாவின் சர்வதேச வர்த்தகம், ஏற்றுமதி, சிறுதொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் மேரி என்ஜி ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இந்தியா-கனடா இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் பலமாக இருப்பதாகவும், ஆழமான நல்லுறவு மற்றும் பொருளாதார நட்புறவை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் இரு அமைச்சர்களும் தெரிவித்தனர்.

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் இந்த ஆண்டு நடத்தப்பட்டு வரும் பல்வேறு கூட்டங்களின் முக்கிய விவாதங்கள் குறித்து ஆலோசித்தனர். இதையடுத்து, இரு அமைச்சர்கள் சார்பிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியாவின் இன்றியமையாத பங்களிப்பு குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ள  கனடா அமைச்சர், இந்தியாவின் ஜி20 கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திவரும் இந்திய அரசுக்கும், தொழில் அமைப்புகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன், ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பணிக்குழுக் கூட்டங்களில் இந்தியா முன்னிறுத்தும் கருத்துக்களுக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கனடா அமைச்சர் மேரி குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலம் மற்றும் உக்ரைன் போர் சூழலிலும் இருத்தரப்பு வர்த்தகம் மேம்பட்டு இருப்பதாகக் இரு அமைச்சர்களும் கூறியுள்ளனர். இந்தியா – கனடா இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2022ம் ஆண்டு 12 பில்லியன் டாலரை எட்டியிருப்பதாகவும், இது அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் 57 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இருநாடுகளுக்கு இடையேயான முதலீட்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருப்பதாகவும், பொருளாதார மற்றும் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதையும் இரு அமைச்சர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வேளாண் பொருட்கள், ரசாயனம், பசுமைத் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, வாகனம், பசுமை எரிசக்தி, மின்னணுப் பொருட்கள், உலோகங்கள் மற்றும் கனிமங்கள் ஆகிய துறையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். வர்த்தகத்தில் தீர்வுகாண வேண்டிய விசயங்களில் இருதரப்பிலும் தொடர்ச்சியான ஆலோசனைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இரு நாட்டு அமைச்சர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை மேம்படுத்துவதுடன், பொருளாதார ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என இருநாட்டு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர். இந்தியா-கனடா இடையேயான விரிவான பொருளாதார நட்புறவு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இரு அமைச்சர்களும் மீண்டும் தொடங்கியுள்ளனர். மேலும், இந்தியாவும், கனடாவும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளன.

கொவிட் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்படும் ஆபத்து தொடர்வது குறித்து அக்கரை தெரிவித்துள்ள அமைச்சர்கள் விநியோகச் சங்கிலி முன்னேற்றுவதற்காக சர்வதேச விதிகளுக்குட்பட்டு இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்தும் விவாதித்ததாகவும் கூறியுள்ளனர்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும், மகளிர் தொழில் முனைவோரையும் உருவாக்குவதற்கான நிகழ்ச்சிகளை நடத்தி இந்தியா-கனடா இடையேயான வர்த்தக நல்லுறவை மேம்படுத்துவது அவசியம் எனவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அழைப்பை ஏற்று கனடா வர்த்தக்குழு வரும் அக்டோபர் மாதம் இந்தியா செல்லவுள்ளதை ஆவலுடன் எதிர்நோக்குவதாக அந்நாட்டு அமைச்சர் மேரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசியக் கல்விக் கொள்ளை 2020ன் அடிப்படையில் கனடா பல்கலைக்கழங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா-கனடா இடையேயான விமானச் சேவையை நீட்டிப்பதற்கு இரு நாடுகளும் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்திருப்பது, இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதுடன் வர்த்தக விமானங்களும் இயக்கப்படும் என தெரிவித்தனர்.

***

(Release ID: 1922964)

AD/ES/RK/RR



(Release ID: 1923047) Visitor Counter : 184