பிரதமர் அலுவலகம்
கேரளாவின் திருச்சூரில் உள்ள ஸ்ரீ சீதாராம சுவாமி கோவில் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
“இந்தியா அடையாளச் சின்னங்களின் மூலம் வெளிப்பட்டாலும், அதன் அறிவாலும் சிந்தனையாலும் வாழ்கிறது. இந்தியா அழிவில்லாத நித்தியதத் தேடலில் வாழ்ந்து வருகிறது"
"நமது கோவில்களும் நமது புனித யாத்திரைகளும் பல நூற்றாண்டுகளாக நமது சமூகத்தின் மதிப்புகள் மற்றும் செழுமையின் அடையாளங்களாக உள்ளன"
Posted On:
25 APR 2023 9:31PM by PIB Chennai
திருச்சூரில் உள்ள ஸ்ரீ சீதாராம சுவாமி ஆலய நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு அனைவருக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
ஆன்மீகம், தத்துவம் மற்றும் திருவிழாக்களுடன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கலைகள் திருச்சூரில் செழித்து வளரும் நிலையில் இந்த நகரம் கேரளாவின் கலாச்சார தலைநகராக கூறப்படுவதைக் குறிப்பிட்டு பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். திருச்சூர் தனது பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாக அவர் கூறினார். ஸ்ரீ சீதாராம சுவாமி ஆலயம் இந்த நோக்கத்தில் துடிப்புமிக்க மையமாக செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கோவிலை விரிவுபடுத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், ஸ்ரீ சீதாராமர், ஐயப்பன் மற்றும் சிவபெருமானுக்கு தங்க முலாம் பூசப்பட்ட கர்ப்பகிரகம் அர்ப்பணிக்கப்படுவதைக் குறிப்பிட்டார். மேலும், 55 அடி உயர ஹனுமன் சிலை நிறுவப்பட்டதைப் பாராட்டிய அவர், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
கல்யாண் குடும்பத்தினர் மற்றும் திரு டி எஸ் கல்யாண்ராமன் ஆகியோரின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், கோயில் தொடர்பாக அவர்களுடன் நடந்த முந்தைய சந்திப்புகள் மற்றும் ஆலோசனைகளைப் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வில், சிறந்த ஆன்மீக உணர்வை தாம் அனுபவிப்பதாகக் கூறி பிரதமர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
திருச்சூர் நகரம் மற்றும் ஸ்ரீ சீதாராம ஸ்வாமி கோயில் ஆகியவை நம்பிக்கையின் உச்சம் மட்டுமல்ல என்று கூறிய அவர், அவை இந்தியாவின் உணர்வு மற்றும் ஆன்மாவின் பிரதிபலிப்பாகத் திகழ்கின்றன என்று குறிப்பிட்டார். இடைக்காலத்தில் நடந்த படையெடுப்புகளை பிரதமர் சுட்டிக் காட்டினார். படையெடுப்பாளர்கள் கோவில்களை அழித்த நிலையில், சின்னங்களின் மூலம் இந்தியா வெளிப்பட்டாலும், தனது அறிவாலும் சிந்தனையாலும் அது தொடர்ந்து வாழ்கிறது என்பதை அவர்கள் மறந்துவிட்டதாகப் பிரதமர் கூறினார். இந்தியா அழிவில்லாத நித்தியத்திற்கான தேடலில் வாழ்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஆன்மா ஸ்ரீ சீதாராம சுவாமி மற்றும் பகவான் ஐயப்பன் வடிவில் அழிவின்மையைப் பறைசாற்றி வருகிறது என அவர் கூறினார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற சிந்தனை பல்லாயிரம் ஆண்டுகால அழியாச் சிந்தனை என்பதை பழங்காலத்திலிருந்தே நமது கோயில்கள் நமக்குத் தெரியப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். தற்போது விடுதலை அடைந்து அமிர்த காலத்தில் உள்ள நாட்டில், நமது பாரம்பரியத்தை பெருமைப்படுத்துவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற சிந்தனையை முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் தெரிவித்தார்.
நமது கோவில்களும் நமது புனித யாத்திரைகளும் பல நூற்றாண்டுகளாக நமது சமுதாயத்தின் விழுமியங்கள், மதிப்புகள் மற்றும் செழுமையின் அடையாளங்களாக உள்ளன என அவர் கூறினார். ஸ்ரீ சீதாராம சுவாமி கோயில் பழங்கால இந்தியாவின் மகத்துவத்தையும் சிறப்பையும் பாதுகாத்து வருகிறது என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இக்கோவிலின் மூலம் நடத்தப்படும் பல விதமான மக்கள் நலப் பணிகளை எடுத்துரைத்த பிரதமர், சமுதாயத்திலிருந்து பெற்ற வளங்களை சேவையாக திருப்பிக் கொடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது என்று குறிப்பிட்டார். சிறு தானிய இயக்கம், ஸ்வச்தா அபியான் எனப்படும் தூய்மை இயக்கம், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதல் போன்றவற்றையும் தமது பணிகளில் இணைத்துக் கொண்டு நாட்டின் முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செயல்படுத்துமாறு ஆலய நிர்வாகத்தை அவர் அவர் வலியுறுத்தினார். நாட்டின் இலக்குகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீ சீதாராம சுவாமியின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
------------------
(Release ID – 1919652)
AP/PLM/KRS
(Release ID: 1919760)
Visitor Counter : 164
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam