தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் & காமிக்ஸ் (ஏவிஜிசி) வரைவுக் கொள்கைகள் குறித்த தேசிய பயிலரங்கிற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு
Posted On:
18 APR 2023 2:32PM by PIB Chennai
அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் & காமிக்ஸ் (ஏவிஜிசி) வரைவுக் கொள்கைகள் குறித்த தேசிய பயிலரங்கிற்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனை மற்றும் பயிலரங்கில் தொழில்துறை, கல்வித்துறை மற்றும் அரசு தரப்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிலரங்கை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளரும், ஏவிஜிசி பணிக்குழு தலைவருமான திரு அபூர்வா சந்திரா தொடங்கிவைத்தார். ஏவிஜிசி துறையை இந்தியாவில் வலுப்படுத்த அமைச்சகம் மேற்கொண்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்து அவர் விளக்கினார்.

அண்மைக்காலங்களில் ஏவிஜிசி துறை முன்னெப்போதும் காணாத அளவுக்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். வரும் 10 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். குழந்தைகளுக்கு சரியான தருணத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறிய அவர், இதன் மூலம் அவர்களது படைப்பாற்றல் திறன் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.
இத்துறையில் வருங்கால வாய்ப்புகள் குறித்து விளக்கிய திரு சந்திரா, 2000-வது ஆண்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை எவ்வாறு இருந்ததோ அதுபோல ஏவிஜிசி இப்போது உள்ளது என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ந்தது போல ஏவிஜிசி துறைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் திரு அதுல்குமார் திவாரி, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் திரு பிரித்துல் குமார் உள்ளிட்டோர் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டனர்.
***
AP/PKV/AG/KRS
(Release ID: 1917646)