குடியரசுத் தலைவர் செயலகம்
தேசிய பஞ்சாயத்து விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்
Posted On:
17 APR 2023 1:44PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் இன்று தேசிய பஞ்சாயத்து விருதுகளை வழங்கி பஞ்சாயத்துகள் ஊக்கப்படுத்துதல் குறித்த தேசிய மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த பல ஆண்டுகளாக நகர்ப்புறம் விரைவாக வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், பெரும்பாலான மக்கள் இன்றும் கிராமங்களில் வசித்து வருவதாக கூறினார். நகரங்களில் வசிப்பவருக்கும், கிராமங்களுடன் தொடர்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கிராமங்களின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கிராம வளர்ச்சிக்கான மாதிரி குறித்தும் அதை அமல்படுத்துவது குறித்தும், கிராமத்தில் வசிப்பவர்கள் முடிவு செய்ய இயலும் என்றும் அவர் கூறினார். அரசின் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை மட்டும் அமல்படுத்தாமல் புதிய தலைவர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் இடமாக பஞ்சாயத்துகள் திகழ்கின்றன என்று அவர் தெரிவித்தார். ஒரு பஞ்சாயத்தில் உள்ள சிறந்த நடைமுறைகளை இதர பஞ்சாயத்துகளில் அமல்படுத்தும் போது, நமது கிராமங்களை விரைவாக வளர்ச்சியடையச் செய்து செழுமைப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
சமூகத்தில் அனைத்து பிரிவினரும் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பஞ்சாயத்துப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
உள்ளூர் கிராமப்புற பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 31.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளில் 46 சதவீதம் பேர் மகளிர் என்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். கிராமப் பஞ்சாயத்துப் பணிகளில் மகளிர் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கான முயற்சிகளில் அவர்களது குடும்பத்தினர் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
***
AP/IR/RJ/KRS
(Release ID: 1917304)
Visitor Counter : 190