வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரான்ஸ் வெளிநாட்டு வர்த்தக அமைச்சருடன் திரு பியூஷ் கோயல் சந்திப்பு

Posted On: 12 APR 2023 8:45AM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர், திரு பியூஷ் கோயல், தமது பயணத்தின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் திரு. ஆலிவர் பெக்ட்-ஐ நேற்று சந்தித்தார்.

இரு அமைச்சர்களும் தங்கள் நாடுகளின் பொருளாதார நிலை குறித்து விவாதித்தனர்.  ஐரோப்பிய மண்டலத்தில் பிரான்ஸ் மிகக் குறைந்த பணவீக்க விகிதமான 5.2% ஐக் கொண்டுள்ளது என்றும், இது மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சராசரியில் பாதி என்றும், திரு. பெக்ட்  கூறினார். வேலையின்மை 7% ஆக உள்ளது என்றும், 2022-ல் ஜிடிபி வளர்ச்சி 2.6% ஆக இருந்தது என்றும், இந்த ஆண்டு அது 0.6-1% என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்தியப் பொருளாதாரம் நிலையாக உள்ளது என்று திரு கோயல் குறிப்பிட்டார். இந்தியா இரட்டை இலக்க பணவீக்கத்தில் இருந்து இப்போது 6 - 6.5% ஆக குறைந்துள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8% ஆக  உள்ளது என  அவர் தெரிவித்தார்.

வர்த்தகம் வளர்ந்து வருவதாகவும், இன்னும்  வளர்ச்சியடைய வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ரஃபேல்  விமானங்களை வாங்கியது, அண்மையில் ஏர்பஸ் விமானத்திற்கு ஆர்டர் கொடுத்தது ஆகியவை இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மைக்கு கூடுதல் மதிப்பு சேர்த்துள்ளது என திரு கோயல் குறிப்பிட்டார்.  2021-22ல் இருதரப்பு வர்த்தகம் 15.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்றும், இது  கடந்த பத்து ஆண்டில்  இரட்டிப்பு அளவு என்றும் திரு பெக்ட் கூறினார். இந்தியாவில் முன்னணி வெளிநாட்டு முதலீட்டாளராக இருக்கும் பிரான்சில் இருந்து 10 பில்லியன் டாலர்கள் அந்நிய வெளிநாட்டு முதலீடு சென்றுள்ளது. பிரான்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன என்று அவர் கூறினார்.

இதே போல இந்திய நிறுவனங்கள் பிரான்சில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன, தற்போது சுமார் 300 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். மொழி எல்லைகளைத் தாண்டி வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த முடியும் என்று திரு கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

சந்தை அணுகல் தொடர்பான பிரச்சினைகள், இதர முன்னுரிமை பிரச்சனைகள் குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா 2000 வணிக விமானங்களை வாங்க விரும்புவதாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவில் வணிக விமானங்களை தயாரிப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாகவும் திரு கோயல் மேலும் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பில் பரஸ்பர ஆர்வமுள்ள  விஷயங்கள் குறித்தும் அமைச்சர்கள் விவாதித்தனர்.

இந்தியாவில் பிரெஞ்சு நிறுவனங்களின் நேரடி முதலீடுகள் குறித்து திரு. பெக்ட் குறிப்பிட்டார், மேலும் உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் பரஸ்பர வாய்ப்புகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். கொச்சி, நாக்பூர் மற்றும் அகமதாபாத்தில்  அரசின் திட்டங்களுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்துள்ளதை அவர் எடுத்துரைத்தார்.

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஜி20 வர்த்தக அமைச்சர்கள்  மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரான்ஸ் அமைச்சருக்கு திரு கோயல், அழைப்பு விடுத்தார்.

***

(Release ID: 1915759)

PKV/AG/RR


(Release ID: 1915796) Visitor Counter : 233