பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் பிரதமர் பங்கேற்றார்
“சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் தியானம் செய்தது மிகச் சிறந்த அனுபவமாகும். இப்போது நான் ஊக்கமும் ஆற்றலும் பெற்றதாக உணர்கிறேன்”
“ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வுடன் ராமகிருஷ்ணா மடம் செயல்படுகிறது”
“எங்கள் அரசு சுவாமி விவேகானந்தரின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது”
“சுவாமி விவேகானந்தரின் தொலைநோக்குப் பார்வையை இந்தியா நிறைவேற்றி வருவதை அவர் பெருமையுடன் கவனிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்“
“ஒவ்வொரு இந்தியரும் இது நமக்கான நேரம் என்று உணர்கின்றனர்”
“ஐந்து உறுதி மொழிகளை செயல்படுத்துவதன் மூலம் பெரும் சாதனைகளைப் படைக்க அமிர்தகாலத்தைப் பயன்படுத்தலாம்”
Posted On:
08 APR 2023 6:35PM by PIB Chennai
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் பிரதமர் கலந்துகொண்டார். அங்கு பிரதமர் சுவாமி விவேகானந்தரின் அறையில் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், வழிபாடு நடத்தியதுடன், தியானமும் மேற்கொண்டார். பிரதமர் புனித மூவர் குறித்த நூலையும் வெளியிட்டார்.
ராமகிருஷ்ணா மடம் சுவாமி ராமகிருஷ்ணானந்தாவால் 1897-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. ராமகிருஷ்ணா மடமும், ராமகிருஷ்ணா மிஷனும் ஆன்மீக அமைப்புகளாக மனித குலத்திற்கு பல்வேறு விதத்தில் சேவை புரிந்து வருவதுடன் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சென்னையில் ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். தமது வாழ்க்கையில் ராமகிருஷ்ணா மடத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாக அவர் கூறினார். தமிழர்கள், தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரம், உற்சாகம் மிக்க சென்னை ஆகியவற்றின் மீது தாம் கொண்டிருக்கும் அன்பையும், பரிவையும் வெளிப்படுத்திய பிரதமர், மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்ட பயணத்திற்கு பின்னர், நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர் பற்றிக் குறிப்பிட்டார். அவர் தங்கியிருந்த சென்னை விவேகானந்தர் இல்லத்தில் உள்ள அவரது அறையைப் பார்வையிட்டதுடன் அங்கு தியானம் செய்தது தமக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது என்று கூறினார். தாம் இப்போது ஊக்கமும் ஆற்றலும் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், தொழில்நுட்பம் மூலம் தொன்மையான சிந்தனைகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சென்றிருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.
“புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற” என்ற திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டிய பிரதமர், இந்த உலகிலும், கடவுள்கள் உலகிலும் அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை என்றார். தமிழ்நாட்டில் ராமகிருஷ்ணா மடத்தின் சேவைகள் பற்றி விளக்கிய பிரதமர், கல்வி, நூலகங்கள், தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு, சுகாதார சேவை, செவிலியர் சேவை, ஊரக மேம்பாடு ஆகிய உதாரணங்களை முன்வைத்தார். ராமகிருஷ்ண மடத்தின் சேவைகள் பற்றி குறிப்பிட்ட அவர், சுவாமி விவோகனந்தர் தமிழ்நாட்டிற்கு வந்ததன் தாக்கமே இது என்று குறிப்பிட்டார். கன்னியாகுமரியில் புகழ் பெற்ற பாறையில் தவம் மேற்கொண்ட பின்னர் விவேகானந்தர் தமது வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொண்டதாகவும், அதன் தாக்கம் சிகாக்கோவில் எதிரொலித்ததாகவும் அவர் தெரிவித்தார். விவேகானந்தர் முதலில் இந்த தமிழ்நாட்டு புண்ணிய பூமியில் நடந்தே பயணம் மேற்கொண்டார் என்று கூறிய அவர், ராமநாதபுரம் மன்னர் அவரை மரியாதையுடன் வரவேற்றதை சுட்டிக்காட்டினார். நோபல் பரிசு வென்ற பிரெஞ்ச் எழுத்தாளர் ரொமைன் ரோலர் இது ஒரு விழா போல நடந்தது என்றும் 17 வெற்றி வளைவுகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஒரு வார காலத்திற்கு ஸ்தம்பித்தது என்றும் எழுதியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
சுவாமி விவேகானந்தர் வங்காளத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே அவருக்கு தமிழ்நாட்டில் ஒரு நாயகனுக்கான வரவேற்பு அளிக்கப்பட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் இந்தியா குறித்து மக்கள் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கருத்தைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். ராமகிருஷ்ணா மடம் இதே உணர்வுடன் செயல்பட்டு பல்வேறு நிறுவனங்களை இந்தியா முழுவதும் உருவாக்கி மக்களுக்கு தன்னலம் இன்றி தொண்டாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். காசி தமிழ்ச் சங்கமத்தின் வெற்றி குறித்து குறிப்பிட்ட பிரதமர், சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமமும் நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டினார். இந்தியாவின் ஒற்றுமைக்கான இத்தகைய அனைத்து முயற்சிகளும் பெறும் வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்தினார்.
சுவாமி விவேகானந்தரின் தத்துவங்களால் நமது அரசு ஈர்க்கப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். தனியுரிமைகள் உடைக்கப்பட்டு, சமத்துவம் உறுதி செய்யப்படும்போது அங்கு சமுதாயம் முன்னேறும் என்ற சுவாமி விவேகானந்தரின் தொலைநோக்கை அரசு தனது மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். முன்பெல்லாம் அடிப்படை வசதிகளே உரிமைகளாக கருதப்பட்டன என்று கூறிய அவர், சிலருக்கோ அல்லது சிறு குழுக்களுக்கு மட்டுமே அந்த வசதிகள் கிடைத்தன என்று தெரிவித்தார். ஆனால் இப்போது ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியின் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக கூறினார். மிக வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றான முத்ரா திட்டம் இன்று தனது எட்டாவது ஆண்டைக் கொண்டாடுகிறது என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறு தொழில் முனைவோர் இந்த மாநிலத்தை திட்டத்தின் முன்னோடி மாநிலமாக மாற்றி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். சுமார் 38 கோடி உத்தரவாதமற்ற கடன்கள் சிறு தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், இதில் பெரும் பகுதியினர் பெண்களாகவும், விளிம்பு நிலை பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர் என்று தெரிவித்தார். முன்பு தொழிலுக்கு வங்கிக் கடன் பெறுவது உரிமையாக இருந்தது என்றும் இப்போது அது எளிதாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வீடு, மின்சாரம், எல்பிஜி இணைப்புகள், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஒவ்வொரு குடும்பத்தையும் இப்போது சென்றடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்தியா குறித்து மிகச் சிறந்த பார்வை சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு உண்டு. இன்று அவருடைய நோக்கம் முழுமை பெறுவதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை அவர் பெருமையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறேன். நம்மிடமும், நமது நாட்டின் மீதும் நம்பிக்கைக் கொள்வதும் தான் அவருடைய முக்கிய நோக்கமாகும். ஒவ்வொரு இந்தியரும் இந்தத் தருணம் நமக்கானது தான் என்று உணரும் நிலையிலும், இந்த காலகட்டம் இந்தியாவிற்கு சாதகமான நூற்றாண்டு என்பது பல்வேறு நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது. மிகுந்த நம்பிக்கையுடனும், ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் நிலையிலிருந்து நாம் உலகத்தோடு இணைந்து செல்கிறோம்.
சுவாமி விவேகானந்தரின் போதனைகளை நினைவுகூர்ந்த பிரதமர், பெண்களுக்கு சரியான அடித்தளம் அமையுமானால் நாம் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டிய நிலை இல்லை. பெண்கள் சமூக கட்டமைப்பில் தலைமை ஏற்று அவர்களாகவே, அவர்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வர். இன்றைய இந்தியா பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. அது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாகட்டும், விளையாட்டுத் துறை ஆகட்டும், ஆயுதப்படையாகட்டும், உயர்கல்வியாகட்டும், பெண்கள் தடைகளைத் தகர்த்து சாதனைகள் புரிந்து வருகிறார்கள். சுவாமி விவேகானந்தர் விளையாட்டு மற்றும் உடல் தகுதி மூலமாகவே ஒருவருடைய பண்புகள் மேம்பாடு அடையும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். விளையாட்டுத் துறை என்பது பாடத்திட்டம் அல்லாத ஒரு செயல்பாடு என்ற நிலையிலிருந்து தற்போது பணிசார்ந்த தேர்வாக இருக்கின்றது. யோகா மற்றும் ஃபிட் இந்தியா போன்றவைகள் மிகப் பெரிய இயக்கமாக தற்போது மாறியுள்ளது. கல்வித்துறையில் தேசிய கல்விக் கொள்கை மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இந்தியாவுக்கு கொண்டுவர முடிகிறது. அதிகாரமளிப்பதற்கு கல்வி மற்றும் தொழில்நுட்ப, அறிவியல்பூர்வமான கல்வியின் தேவையும் அவசியம் என்று சுவாமி விவேகானந்தர் நம்பிக்கை கொண்டிருந்தார். இன்று திறன் மேம்பாட்டிற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. உலகளவில் மிகவும் சிறந்த வலிமையான தொழில்நுட்ப, அறிவியல் பூர்வமான சூழ்நிலை தற்போது நிலவுகிறது.
ஐந்து உட்கருத்துக்களை உட்கிரகித்து வாழ்க்கையை முழுமையாக வாழ்வது மிகவும் ஆற்றல் மிக்கது என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை நினைவுகூர்ந்த பிரதமர், சுதந்திரமடைந்து 75 வது ஆண்டை கொண்டாடி வரும் இந்த வேளையில் விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலத்திற்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான நோக்கம், செயல்பாடு மற்றும் பயணத்தை நோக்கி நமது தேசம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த அமிர்த காலத்தில் மிகப்பெரிய அளவில் சாதனைகளைப் புரிவதற்கு 'பஞ்சபிரான்' (ஐந்து உட்கருத்துகளை) பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் கூறினார். அதாவது வளர்ந்த இந்தியாவின் பெரிய தீர்மானங்கள் மற்றும் உறுதியுடன் முன்னேறி, அடிமைத்தனத்தின் அனைத்து தடயங்களையும் அழித்து, நமது பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொண்டு, நமது ஒற்றுமையின் வலிமை மற்றும் குடிமக்களின் கடமைகள் போன்றவைகள் அதிமுக்கியமாகும். இறுதியாக அனைவரும் ஒருங்கிணைந்து தனித்துவத்துடன் இந்த ஐந்து கொள்கைகளைப் பின்பற்ற உறுதி ஏற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் இந்த உறுதிப்பாட்டை கொண்டிருந்தால் நம்மால் வளர்ந்த, தற்சார்பு மிக்க மற்றும் முழுமையான இந்தியாவை உருவாக்க முடியும் என்று திரு. மோடி கூறினார்.
தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, இராமகிருஷ்ணா மடத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு. எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 1914961)
Visitor Counter : 275
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam