சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக சுகாதார தினத்தையொட்டி புதுதில்லியில் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி
Posted On:
07 APR 2023 10:19AM by PIB Chennai
உலக சுகாதார தினத்தையொட்டி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதுதில்லியில் வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். 'அனைவருக்கும் ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொற்றா நோய்களை (NCDs) தடுப்பது, மனநலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்டவையே இந்த வாக்கத்தானின் நோக்கமாகும். இந்த வாக்கத்தான் விஜய் சௌக்கில் தொடங்கி கடமைப் பாதை, இந்தியா கேட் வழியாக நிர்மான் பவனை சென்றடைந்தது. 350-க்கும் மேற்பட்டோர் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மனநோய் மற்றும் புற்றுநோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகள்/நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
பிரதமரின் ஆரோக்கியமான இந்தியா குறித்த பார்வையை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “வசுதைவ குடும்பகம் என்பது இந்தியாவின் தத்துவமாக இருந்து வருகிறது. இங்கு நாம் சுயநலமாக இல்லாமல் அனைவரின் முன்னேற்றத்தையும் பற்றி சிந்திக்கிறோம். கொரோனா நெருக்கடியின் போது, எந்தவொரு வணிக லாபத்தையும் கருத்தில் கொள்ளாமல், தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கியபோது இந்தத் தத்துவம் உற்றுநோக்கப்பட்டது” என்று கூறினார்.
-----
VJ/CR/KPG
(Release ID: 1914662)
Visitor Counter : 174