நிதி அமைச்சகம்

கடந்த 7 ஆண்டுகளில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் 1,80,630-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு ரூ.40,700 கோடிக்கும் மேல் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது

ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது: நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்

ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் தொழில்முனைவோர் அவர்களுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகிறது: நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசான்ராவ் காரத்

Posted On: 05 APR 2023 7:30AM by PIB Chennai

பொருளாதார ரீதியில் அதிகாரமளித்தல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை கவனத்தில் கொண்டு தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் ஏப்ரல் 5, 2016 அன்று தொடங்கப்பட்டது.

ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் சந்திக்கும் பல்வேறு சவால்களை கருத்தில் கொண்டு அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வகையில் உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறைகள் மற்றும் வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில் ஊக்குவிக்கும் வகையில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.

அப்போது நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 1.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் ஷெட்யூல்டு, பழங்குடியின தொழில்முனைவோருக்கு ரூ.40,600 கோடிக்கும் அதிகமாக கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு பெருமையும், திருப்தியும் அளிக்கிறது என்று கூறினார்.

 ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் 7-ம் ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிரிடையே தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் ஒரு முக்கிய மைல்கல் என்பதை நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

 ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம், சேவை கிடைக்கப்பெறாத, பின்தங்கிய தொழில்முனைவோருக்கு  உகந்தவகையில், கடன் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பல்வேறு தரப்பினரை சென்றடைந்துள்ளதாக திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். இந்தத் திட்டம் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு அவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான ஆதரவை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் 7-வது ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய, மத்திய நிதி இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசன்ராவ் காரத், நிதி சேர்க்கைக்கான தேசிய இயக்கத்தின் மூன்றாவது தூணாக ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் விளங்குவதோடு, "நிதியற்றவர்களுக்கு நிதியளிப்பு" வழங்கும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளதாகக் கூறினார். ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில் முனைவோர்களுக்கு வணிக வங்கிகளின் கிளைகளில் இருந்து தடையற்ற கடன் கிடைப்பதை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழில்முனைவோர், அவர்களது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் 1.8 லட்சத்திற்கும் மேலான தொழில்முனைவோர் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர் என்றும் டாக்டர் காரத் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் டாக்டர் காரத் கூறினார்.

 

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் ஏழாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் போது, ​​இந்தத் திட்டத்தின் அம்சங்கள் மற்றும் சாதனைகளைப் பார்ப்போம்.

ஸ்டாண்ட்-அப் இந்தியாவின் நோக்கம்:

  • மகளிர், ஷெட்யூல்டு, பழங்குடியினர் பிரிவினரிடையே தொழில் முனைவை ஊக்குவித்தல்;
  • பசுமை நிறுவனங்களுக்கு உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறை மற்றும் வேளாண்மை தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு கடன்களை வழங்குதல்
  • பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் ஒரு வங்கிக் கிளையில் குறைந்தபட்சம் ஒரு ஷெட்யூல்டு, பழங்குடியினர், மகளிர் தொழில்முனைவோருக்கு  ரூ.10 லட்சம் முதல் ரூ.100 லட்சம் வரையிலான வங்கிக் கடன்களை வழங்குதல்

ஏன் ஸ்டாண்ட்-அப் இந்தியா?

ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம், ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில்முனைவோர்கள் புதிய தொழிலை தொடங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வணிகத்தில் வெற்றி பெறுவதற்கு அவ்வப்போது தேவைப்படும் கடன்கள் மற்றும் பிற ஆதரவு இந்தத் திட்டத்தில் அடங்கும். எனவே இந்தத் திட்டம் வர்த்தகம் புரிவதில்  குறிப்பிட்ட இலக்குப் பிரிவினருக்கு உகந்த சூழலை எளிதாக்கவும் தொடர்ந்து கடன் வழங்கவும் ஏதுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறது. ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் பசுமை நிறுவனத்தை அமைப்பதற்காக கடன்களை வழங்குவதில் அனைத்து வங்கிக் கிளைகளையும் ஊக்குவிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்:

  • நேரடியாக கிளைகளில் அல்லது
  • ஸ்டாண்ட்-அப் இந்தியா இணைய தளம் மூலம் (www.standupmitra.in) அல்லது
  • முன்னோடி மாவட்ட மேலாளர் மூலம்

கடன் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் யார்?

  • ஷெட்யூல்டு, பழங்குடியின வகுப்பினர் அல்லது மகளிர் தொழில்முனைவோர், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்
  • பசுமை நிறுவனத் திட்டங்களுக்கு மட்டுமே கடன்கள் கிடைக்கும்
  • பசுமைத் திட்டம் என்பது உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறை மற்றும் வேளாண் தொடர்புடைய செயல்பாடுகளில் பயனாளியின் முதல் முயற்சியைக் குறிப்பதாகும்
  • தனிநபர் அல்லாத நிறுவனங்களில், 51% பங்குகள் மற்றும் கட்டுப்படுத்தும் உரிமைகள் ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில்முனைவோரிடம் இருக்க வேண்டும்
  • கடன் வாங்குவோர் எந்த வங்கியிலும், நிதி நிறுவனத்திலும் பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலாத நிலையில் இருக்கக்கூடாது
  • தகுதியான மத்திய, மாநிலத் திட்டங்களுடன் இணைந்து வழங்கக்கூடிய 15 சதவீதம் வரை, லாப அளவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எந்தவொரு நிலையிலும், கடன் வாங்குவோர் திட்டச் செலவில் குறைந்தபட்சம் 10 சதவீதம் சொந்த பங்களிப்பாகக் வழங்க வேண்டும்.

கையடக்க ஆதரவு:

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்திற்காக இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி உருவாக்கியுள்ள www.standupmitra.in  என்ற ஆன்லைன் இணையதளம், கடன் வாங்குபவர்களை வங்கிகளுடன் கடனுக்காக இணைப்பது மட்டுமின்றி, எதிர்கால தொழில்முனைவோருக்கு தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கான அவர்களின் முயற்சிக்கு வழிகாட்டுதலை அளிக்கிறது. அதாவது பயிற்சியில் தொடங்கி வங்கி தேவைகளுக்கு ஏற்ப கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை நிரப்புவது வரை இந்த வழிகாட்டுதல்கள் இருக்கும். 8,000-க்கும் மேற்பட்ட வழிகாட்டும் முகமைகளின் கட்டமைப்பின் மூலம், எதிர்காலத்தில் கடன் வாங்குபவர்களை குறிப்பிட்ட நிபுணத்துவம் கொண்ட பல்வேறு முகமைகளுடன் இணைப்பதற்கான படிப்படியான வழிகாட்டுதலை இந்த இணையதளம் எளிதாக்குகிறது. அதாவது, திறன் மையங்கள், தொழில் முனைவோருக்கான ஆதரவு மற்றும் மேம்பாட்டு திட்ட மையங்கள், மாவட்டத் தொழில் மையம் ஆகியவற்றின் முகவரி மற்றும் தொடர்பு எண் மூலம் பயனாளிகள் வழிகாட்டுதல்களை பெறலாம்.

21.03.2023 வரை இந்த திட்டத்தின் சாதனைகள்

  • ஸ்டாண்ட் - அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் 21.03.2023 வரை 1,80,636 கணக்குகளுக்கு ரூ.40,710 கோடி அளவிற்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
  • ஸ்டாண்ட் - அப் இந்தியா திட்டத்தின் கீழ் 21.03.2023 வரை பயனடைந்த ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் பயனாளிகள் விவரம்:

ஷெட்யூல்டு பிரிவினரின் 26,889 கணக்குகளுக்கு ரூ.5,625.50 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் பிரிவினரின் 8,960 கணக்குகளுக்கு ரூ.1932.50 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மகளிரில் 1,44,787 கணக்குகளுக்கு ரூ.33,152.43 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1,80,636 கணக்குகளுக்கு ரூ.40,710.43 கோடி அளவிற்கு கடன் வழங்க ஒப்புதல்  வழங்கப்பட்டுள்ளது.

***

(Release ID: 1913705)

AP/IR/AG/RR



(Release ID: 1913758) Visitor Counter : 292