உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

போதைப் பொருள் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற தென்மண்டல மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை வகித்தார்

Posted On: 24 MAR 2023 4:33PM by PIB Chennai

போதைப் பொருள் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பெங்களூருவில்  இன்று (2023, மார்ச் 24) நடைபெற்ற தென்மண்டல மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை வகித்தார். இதில் 5 தென் மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டின் போது மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் ரூ.1235 கோடி மதிப்பில்  9298 கிலோ போதைப் பொருட்கள்  அழிக்கப்பட்டன. ஷிவமோகா பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மையத்தை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இம்மாநாட்டின் போது கையெழுத்தானது.

 மாநாட்டில் உரையாற்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, போதைப் பொருட்களுக்கு எதிரான  சமரசம் அற்ற உறுதியான கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் கூறினார். விடுதலைப் பெருவிழாவின் 75-வது ஆண்டை முன்னிட்டு 2022 ஜூன் 1-ந் தேதி தொடங்கி, 75 நாட்களில் 75,000 கிலோ போதை பொருட்களை அழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆனால் இலக்கை தாண்டி இதுவரை 5,94,620 கிலோ போதைப் பொருட்கள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் 1,29,363 கிலோ போதைப் பொருட்கள் தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பின் மூலமாக அழிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

போதைப் பொருட்கள் தடுப்பு என்பது அரசின் நடவடிக்கை மட்டும் அல்ல என்று கூறிய அவர், மக்களும் அதற்கு எதிராக போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகள் இதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.  போதைப் பொருட்களை ஒழிக்க 4 முக்கிய அம்சங்களில் அரசு கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார். போதைப் பொருட்களை கண்டுபிடிப்பது, விநியோக கும்பலின் கட்டமைப்பை  தகர்த்தல், குற்றவாளிகளை கைது செய்தல், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் ஆகியவை அந்த 4 முக்கிய அம்சங்கள் என அவர் தெரிவித்தார்.

இது தவிர கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் கடல்வழித்தடங்களில் கண்காணிப்பை அதிகரித்தல் ஆகியவையும் போதைப் பொருள் கடத்தலை தடுக்க அவசியமான நடவடிக்கைகள் என்று அவர் கூறினார். தென்பகுதி கடல் வழித்தடங்களில் கடுமையான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

போதைப் பொருட்களுக்கு எதிரான முழுமையான அணுகுமுறையை அரசு கையாண்டு வருவதாகவும், பல்வேறு துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு செயல்பாடு  ஆகியவற்றின் மூலம் போதைப் பொருட்கள் இல்லாத இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் போது  போதைப் பொருள் தடுப்பு அமைப்பான என்சிபி-யின் புதிய 5 மண்டல அலுவலகங்களையும் சென்னையில் அந்த அமைப்பின் துணைத் தலைமை இயக்குனர் தலைமையில் செயல்படும் பிராந்திய அலுவலகத்தையும் திரு அமித் ஷா திறந்து வைத்தார்.

***

SM/PLM/AG/KRS(Release ID: 1910437) Visitor Counter : 347