மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்

கோடை காலம் மற்றும் அதன் தீவிரத்தைக் குறைப்பதற்கான தயார்நிலை நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

Posted On: 14 MAR 2023 7:07PM by PIB Chennai

வரவிருக்கும் கோடை காலம் மற்றும் அதன் தீவிரத்தைக் குறைப்பதற்கான தயார்நிலை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா தலைமையில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள்/ துறைகளின் செயலாளர்கள், வெப்ப அலையால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தின் வெப்பநிலை மற்றும் உலகளாவிய வானிலை நிலவரத்தின் முக்கிய அம்சங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் எடுத்துரைத்தது.   இந்தியாவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட அதிகமான வெப்பம் பதிவாகக் கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது. தென் தீபகற்ப இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பு முதல் அதற்கு குறைவானது வரை இருக்கக்கூடும் என்றும்,  நாட்டின் இதர இடங்களின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது.

மார்ச் மாதத்தின் எஞ்சிய நாட்களில் குறிப்பிடத்தக்க அளவில் வெப்ப அலை ஏற்படாது என்று தெளிவுபடுத்திய இந்திய வானிலை ஆய்வு மையம், அதே வேளையில், மார்ச் மாத மத்தியில் இந்தோ- கங்கை சமவெளி மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தது.

 

வெப்பநிலை சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கு தத்தமது அமைச்சகங்கள்/ துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சம்பந்தப்பட்ட துறைகள்/ அமைச்சகங்களின் செயலாளர்கள் விளக்கினார்கள். 2023- ஆம் ஆண்டில், இயல்பை விட கூடுதலான வெப்பநிலை பதிவாகக் கூடும் என்பதால் அது சார்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்குமாறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் அமைச்சரவை செயலாளர்  கேட்டுக்கொண்டார். உரிய காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சகங்களும், துறைகளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

                                                                                                        ------ 

AD/RB/KPG



(Release ID: 1907124) Visitor Counter : 135