சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, பாட்டியாலாவில் உள்ள நீட் முதுநிலைத் தேர்வு மையத்தில் ஆய்வு

Posted On: 05 MAR 2023 12:49PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா பாட்டியாலாவில் உள்ள நீட் முதுநிலைத் தேர்வு மையத்திற்கு திடீரென வருகை தந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வு நடைமுறை குறித்து ஆய்வு செய்தார். பின்னர், தேர்வர்களின் பெற்றோரையும் சந்தித்து உரையாடினார். தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரிய (என்பிஇஎம்எஸ்) தேர்வு மையத்தை, தேர்வு நடந்து கொண்டிருக்கும் போதே மத்திய சுகாதார அமைச்சர் பார்வையிட்டது இதுவே முதல் முறையாகும்.

 

நீட் முதுநிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், தேர்வு மையத்தின் ஏற்பாடுகள் திருப்தியளிப்பதாகத் தெரிவித்தார். “பாட்டியாலா தேர்வு மையத்திற்கு நான் சென்றபோது மாணவர்களின் பெற்றோருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தேர்வில் வெற்றி பெற அனைவரையும் வாழ்த்துகிறேன்” என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

 

நீட் முதுநிலைத் தேர்வு 277 நகரங்களில் உள்ள 902 தேர்வு மையங்களில் 2,08,898 தேர்வர்களுக்கு நடத்தப்படுகிறது. முறைகேடுகளைத் தவிர்க்க பயோமெட்ரிக் சரிபார்ப்பு, சிசிடிவி கண்காணிப்பு, ஆவணச் சரிபார்ப்பு, மொபைல் ஃபோன் ஜாமர்கள் உட்பட அனைத்தும் தேர்வு மையங்களிலும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத் தலைவர் டாக்டர் அபிஜத் ஷெத், அகமதாபாத்தில் உள்ள மைய அமைப்பில் இருந்து தேர்வைக் கண்காணித்தார். 90 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரிய

துவாரகா அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தேர்வு மையங்களிலும் போதிய பாதுகாப்பு மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் முதுநிலைத் தேர்வு அனைத்து மையங்களிலும் காலை 09:00 மணிக்கு வெற்றிகரமாகத் தொடங்கி இன்று மதியம் 12:30 மணிக்கு நிறைவு பெற்றது.

 

***

AP/CR/DL



(Release ID: 1904380) Visitor Counter : 388