பிரதமர் அலுவலகம்

‘போர்க்கால முறையில் சுற்றுலாவை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரை

Posted On: 03 MAR 2023 1:37PM by PIB Chennai

வணக்கம்,

 

இன்றைய புதிய இந்தியா புதிய வேலை முறையுடன் முன்னேறி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளதுடன், நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். பழைய வேலை முறை தொடர்ந்திருந்தால், இதுபோன்ற பட்ஜெட்டை யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இன்று நாட்டின் சுற்றுலாத் துறையின் மாற்றத்திற்காக இந்த  இணையவழிக் கருத்தரங்கை நடத்துகிறோம்.

 

நண்பர்களே,

 

சுற்றுலாவைப் பற்றி நாம் பேசும்போது, ​​சிலர் இது ஒரு ஆடம்பரமான வார்த்தை என்றும் அது சமூகத்தின் உயர் வருமானம் உள்ளவர்களை மட்டுமே குறிக்கும் என்றும் நினைக்கின்றனர். ஆனால் நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக யாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் மேம்படும்போது பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் தாம் புனரமைக்கப்படுவதற்கு முன்பு ஆண்டுதோறும் சுமார் 70-80 லட்சம் மக்கள் வந்து செல்வார்கள். ஆனால், புனரமைக்கப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு வாரணாசிக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியது. உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமைச் சிலை கட்டப்பட்ட ஓராண்டுக்குள் சுமார் 27 லட்சம் பேர் அதனைப் பார்வையிட்டுள்ளனர்.

 

நண்பர்களே,

 

உலக அளவில் இந்தியா மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் இரண்டு லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இந்தியாவுக்கு வந்தனர். இந்த ஆண்டு ஜனவரியில் எட்டு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

 

நண்பர்களே,

 

நம் நாட்டில் தொழில்முறை சுற்றுலா வழிகாட்டிகள் இல்லை. வழிகாட்டிகளுக்கு உள்ளூர் கல்லூரிகளில் சான்றிதழ் படிப்பு இருக்க வேண்டும்.இதனால், திறமையான இளைஞர்கள் இந்தத் தொழிலிலுக்கு முன்வருவார்கள்.

 

அதேபோல, இப்போதெல்லாம், திருமணங்களும் முக்கிய வணிகமாகிவிட்டன. குஜராத் மக்கள் தமிழ்நாட்டை திருமணத் தலமாக கருதி, தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தும் சூழலை நாம் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்தால், அவர்கள் ஒரு திருமணத்தை அசாமிய பாரம்பரியத்திலும், மற்றொன்றை பஞ்சாபி பாரம்பரியத்திலும் நடத்த முடிவு செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட சுற்றுலாத் தலத்தைப் பற்றி ஐநா மற்றும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஆப்ஸ் (செயலி) இருக்க வேண்டும்

 

விவசாயம், ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு மற்றும் ஜவுளித் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருப்பதைப் போன்று சுற்றுலாத் துறையிலும் பெரிய வாய்ப்புகள் உள்ளன. இன்றைய கலந்துரையாடலில் நீங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.

 

 

இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது

 

***

AP/CR/DL



(Release ID: 1904379) Visitor Counter : 115