ஆயுஷ்

பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்

Posted On: 02 MAR 2023 2:55PM by PIB Chennai

பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் குவஹாத்தியில் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நாட்டில் கிடைக்கும் இயற்கை வளங்களின் மூலம் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை இந்தியா வலுப்படுத்தி வருகிறது என்று கூறினார். இதன் மூலம் மக்களுக்குத் தரமான சுகாதார சேவைகளை வழங்கி, உலகளாவிய சுகாதார சேவை இலக்குகளை எட்டும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஜாம்நகரில் இந்தியாவின் உதவியுடன் உலக சுகாதார அமைப்பு, பாரம்பரிய மருத்துவத்துக்கான உலகளாவிய மையத்தை அமைத்து வருவதை அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு இந்தியா உதவ முடியும் என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆயுஷ் துறை இணை அமைச்சர் திரு. மகேந்திரபாய் முஞ்ப்பாரா, ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி, ஆகிய மருத்துவ முறைகளில் தரத்தையும் சிறந்த கல்வியையும் உறுதி செய்ய இந்தியா மிகப் பெரிய முயற்சிகளை எடுத்துள்ளதாகக் கூறினார். பாரம்பரிய மருத்துவ முறைகளுடன் மேற்கத்திய மருத்துவ முறைகளை இணைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மருத்துவக் கொள்கையை இந்தியா உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கில் மியான்மர் சுகாதார அமைச்சர் திரு தெட் கயிங் வின், மாலத்தீவு துணை சுகாதார அமைச்சர் சஃபியா முகமது சயீது உள்ளிட்டோரும் பங்கேற்று உரையாற்றினர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 17 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர். 2 நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், பாரம்பரிய மருத்துவப் பொருட்கள் தொடர்பான ஒழுங்கு முறை செயல்திட்டத்தை வகுப்பது, உற்பத்தியாளர்கள் மற்றும் வாங்குவோர் மத்தியிலான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பது, பாரம்பரிய மருந்துகளை ஊக்குவிப்பதில் அரசு அமைப்புகளின் பங்கு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.  நான்கு நாட்கள் நடைபெறவுள்ள பாராம்பரிய மருத்துவப் பொருட்கள் கண்காட்சியும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி  செய்யும் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதி செய்வோர் ஆகியோர் தங்களது பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

 

***

AP/PLM/SG/KPG

 



(Release ID: 1903655) Visitor Counter : 147