பிரதமர் அலுவலகம்

‘கடைக்கோடியும் சென்றடைதல்’ பற்றிய நிதிநிலை அறிக்கை சம்பந்தமான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரை

“அமலாக்கம் மற்றும் உரிய காலத்தில் விநியோகிப்பதன் கண்ணோட்டத்தில் இந்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான கருத்துப் பரிமாற்றம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக பயன்படுத்தப்படுவதையும் இது உறுதி செய்கிறது”

“சிறந்த ஆளுகையில் நாம் அதிக கவனம் செலுத்தினால் கடைசி மைலை சென்றடையும் நமது இலக்கை மிக சுலபமாக அடைய முடியும்”

‘கடைக்கோடியும் சென்றடைதல்’ அணுகுமுறையும், முழுமையான நிலை என்ற கொள்கையும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது”

“அனைவரையும் சென்றடைவது என்பது நமது இலக்காக இருக்கும் போது ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழலுக்கு ஒருபோதும் வாய்ப்பு இருக்காது”

“ஊரகப் பகுதிகள் மற்றும் பழங்குடிப் பகுதிகளை சென்றடையும் தாரக மந்திரத்திற்கு இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது”

“பழங்குடி சமூகத்தின் மிகப்பெரிய திறனை முதன் முறையாக இந்த அளவுக்கு நாடு பயன்படுத்துகிறது”

“பழங்குடி சமூகத்தில் மிகவும் நலிவடைந்தவர்களுக்கான சிறப்பு இயக்கத்தின் கீழ் விரைவாக வசதிகளை அளிப்பதற்கு ஒட்டுமொத்த நாட்டின் அணுகுமுறை அவசியமாகிறது”

‘கடைக்கோடியும் சென்றடைதலில்’ முன்ன

Posted On: 27 FEB 2023 10:41AM by PIB Chennai

கடைக்கோடியும் சென்றடைதல்’ பற்றிய நிதிநிலை அறிக்கை சம்பந்தமான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாக அமல்படுத்துவதற்கு கருத்துக்களைப் பெறும் வகையில் நடைபெறும் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகள் தொடரில் இது நான்காவது ஆகும்.

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அரசு ஒரு படி முன்னேறி, நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு அது குறித்த கருத்துக்களை பங்குதாரர்களுடன் பரிமாறிக் கொள்ளும் புதிய நடைமுறையை கடந்த சில ஆண்டுகளாக தொடங்கியுள்ளது என்று கூறினார். “அமலாக்கம் மற்றும் உரிய காலத்தில் விநியோகிப்பதன் கண்ணோட்டத்தில் இந்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான கருத்துப் பரிமாற்றம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக பயன்படுத்தப்படுவதையும் இது உறுதி செய்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

வளர்ச்சிக்கு, நிதியுடன் அரசியல் உறுதிப்பாடும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். சிறந்த ஆளுகை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தொடர்ந்து கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், “சிறந்த ஆளுகையில் நாம் அதிக கவனம் செலுத்தினால் கடைநிலையை அடையும் நமது இலக்கை மிக சுலபமாக அடைய முடியும்” என்று கூறினார். தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களையும் சென்றடையும் சிறந்த ஆளுகையின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு இந்திரதனுஷ் இயக்கம் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசியை செலுத்துவதில் பின்பற்றப்பட்ட புதிய அணுகுமுறைகளை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

முழுமையான நிலை என்ற கொள்கைக்குப் பின்னணியில் உள்ள சிந்தனையை விளக்கிய பிரதமர், கடைநிலையை அடையும் அணுகுமுறையும், முழுமையான நிலை என்ற கொள்கையும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என்று கூறினார். முந்தைய காலத்தில் அடிப்படை வசதிகளை வேண்டி ஏழை மக்கள் அரசிற்கு பின்னால் சென்றிருந்த காலம் மாறி, தற்போது ஏழைகளின் இருப்பிடத்தை அரசு சென்றடைகிறது என்று அவர் தெரிவித்தார். “அனைத்துப் பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சென்றடைய வேண்டும் என்று நாம் முடிவு செய்யும் நாள்தான், உள்ளூர் அளவில் பணி கலாச்சாரத்தில் பெரும் மாற்றத்தை நாம் சந்திக்க முடியும். முழுமையான நிலை என்ற கொள்கையின் பின்னணியில் உள்ள உணர்வு இதுதான். அனைவரையும் சென்றடைவது என்பது நமது இலக்காக இருக்கும் போது ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழலுக்கு ஒருபோதும் வாய்ப்பு இருக்காது. கடைநிலையை அடையும் இலக்கை அப்போதுதான் நம்மால் முழுமையாக எட்ட முடியும்” என்று பிரதமர் மேலும் கூறினார்.

நடைபாதை வியாபாரிகளை வங்கியோடு முறையாக இணைக்க வகை செய்யும் பிரதமரின் ஸ்வநிதித் திட்டம், சீர்மரபினர், நாடோடிகள், குடிநிரந்தரமற்றோருக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம், ஊரகப் பகுதிகளில் 5 லட்சம் பொது சேவை மையங்கள் மற்றும் 10 கோடி பேருக்கு தொலை - மருத்துவ சேவை வசதி வழங்கப்பட்டிருப்பது கடைகோடியும் சென்றடைவதற்கான எடுத்துக்காட்டுகள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நலத்திட்ட உதவிகள், பழங்குடியினர் மற்றும் ஊரகப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு முற்றிலும் சென்றடையும் நோக்கத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டத்தை பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார். அம்ரித் சரோவர்-எதிர்காலத்திற்காக நீர் ஆதாரத்தை பாதுகாத்தல் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் நீர் ஆதார அமைப்புகள் அமைப்பதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் 30 ஆயிரம் திட்டப்பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டன. “இந்த இயக்கங்கள் மூலம் பல தசாப்தங்களாக பல்வேறு வசதிகளுக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்த தொலைதூரத்தில் வாழும் இந்தியர்களின் வாழ்வாதாரங்கள் மேன்மை அடைந்துள்ளன. நாம் இதோடு நின்றுவிடக் கூடாது. புதிய நீர் இணைப்புகள் உருவாக்குவது தொடர்பான நடைமுறை அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் நீர் ஆதாரம் தொடர்பான அமைப்புகளை எவ்விதம் வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்து சீராய்வு மேற்கொள்ளப் வேண்டும் என்றார்.

அனைவருக்கும் வீட்டுவசதி கிடைக்கும் வகையில் எவ்விதம்  தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து துறைசார்ந்த வல்லுநர்கள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றார். சூரியசக்தி கிடைப்பதற்காக எளிமையான முறைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் தொகுப்பு வீட்டு வசதி திட்டங்களை உருவாக்கவேண்டும் என்றும் கூறினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏழைகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்காக 80,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

“முதல் முறையாக நமது நாட்டின் பழங்குடி சமூகத்தின் பிரம்மாண்டமான வளம் பெருமளவிற்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பழங்குடியின மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் கூறினார். ஏக்லாவியா உறைவிடப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை அறியுமாறும், இந்தப் பள்ளிகளின் மாணவர்கள் பெரிய நகரங்களில் எவ்வாறு பிரபலம் அடைகிறார்கள் என்பதைக் காணுமாறும் கூடியிருந்தோரிடம் கேட்டுக்கொண்டார். இந்தப் பள்ளிகளில் கூடுதலாக அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களை உருவாக்குவதற்கும், புத்தொழில்களுடன் தொடர்புடைய அம்சங்களுக்காகப் பயிலரங்குகளை நடத்துவதற்கு வழிவகைகளைக் காணுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பழங்குடி சமூகங்களுக்கிடையே மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் முறையாக சிறப்பு இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். “நாட்டில் உள்ள 200-க்கும் அதிகமான மாவட்டங்களில் 22,000-க்கும் அதிகமான கிராமங்களில் நமது பழங்குடி நண்பர்களுக்கு அதிவேகமாக வசதிகளை நாம் வழங்கவிருக்கிறோம்” என்று அவர் கூறினார். இது தொடர்பாக பஸ்மாண்ட முஸ்லிம்கள் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். அரிவாள் வடிவ செல்களால் ஏற்படும் நோயிலிருந்து முற்றிலுமாக விடுபடவும் பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒட்டுமொத்த தேசம் என்ற அணுகுமுறை தேவைப்படுகிறது. எனவே சுகாதாரத்தோடு தொடர்புடைய அனைவரும் அதிவேகமாக பணியாற்ற வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கடைக்கோடி பகுதியையும் சென்றடைவது என்ற வகையில், முன்னேறவிரும்பும் மாவட்டத் திட்டம் வெற்றிகரமான முன்மாதிரியாக உருவாகியுள்ளது. இந்த அணுகுமுறையை மேலும் முன்கொண்டு செல்ல நாட்டின் 500 வட்டாரங்களில் முன்னேற விரும்பும் வட்டாரத் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. “முன்னேற விரும்பும் வட்டாரத் திட்டங்களைப் பொறுத்தவரை, முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்காகப் பணியாற்றிய அதே வழிமுறையுடன் ஒப்பீட்டு அளவுகளை மனதில் கொண்டு நாம் செயல்படவேண்டியுள்ளது” என்று கூறி பிரதமர் உரையை நிறைவுசெய்தார்.

***

(Release ID: 1902652)

AP/BR/GS/SMB/AG/JJ/KRS

 

 



(Release ID: 1902722) Visitor Counter : 149