குடியரசுத் தலைவர் செயலகம்

அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்

மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாடுபட வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்: குடியரசுத் தலைவர் முர்மு

Posted On: 21 FEB 2023 12:32PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று இட்டா நகரில் அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றினார்.

குடியரசுத் தலைவர் தமது உரையில், ஒழுங்கும், கண்ணியமும் நாடாளுமன்ற நடைமுறையின் சிறப்பு அம்சங்களாகும் என்று கூறினார். விவாதத்தின் கருப்பொருளும், இதர அம்சங்களும் உயரிய தரத்தில் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.  அதே சமயம்,  மக்கள் நலனுக்கான வளர்ச்சித் திட்டங்களில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது அவசியமாகும். அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவை, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயரிய தரத்தை பராமரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டப்பேரவையின் இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான உயரிய தரத்தை பராமரித்து வருவது பாராட்டத்தக்கது என அவர் கூறினார்.

 இன்றைய யுகத்தில் சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் ஆகியவை முக்கிய விஷயங்களாகும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இத்தகைய சிக்கல்களுக்கு விரைந்து தீர்வுகளை நாம் கண்டறிய வேண்டும். அருணாச்சலப் பிரதேசம் போன்ற புவியியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத்திற்கு இந்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.  இந்த விஷயத்தில் மாநிலத்தின் கொள்கை வகுப்பாளர்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.  பக்கே பிரகடனத்தின் வாயிலாக பருவநிலை மாற்றப் பிரச்சனைக்குத் தீர்வு காண அருணாச்சலப் பிரதேசம் உறுதிபூண்டுள்ளது.  மற்ற மாநிலங்களும் இதே போன்ற முறையைப் பின்பற்றி பருவநிலை மாற்ற பிரச்சனைக்குத்  தீர்வு காண முயல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் காகிதமற்ற டிஜிட்டல் பயணத்தில் இ-விதான் திட்டத்தை அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை செயல்படுத்தி வருவதற்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். 2022-ம் ஆண்டை மின் நிர்வாக ஆண்டாக மாநில அரசு அறிவித்ததையும், பல்வேறு மின் நிர்வாக திட்டங்களை தொடங்கியதையும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டங்கள் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு உதவுவதுடன் மட்டுமல்லாமல், சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்க பெரிதும் பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் இலவசமாக சட்டப்பேரவை நூலகத்தை அணுகலாம் என்ற நடைமுறை மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். உங்களது சட்டப்பேரவையை தெரிந்துகொள்ளுங்கள் என்ற முயற்சியின் கீழ், சட்டப்பேரவை இயங்குவது குறித்து தெரிந்துகொள்ள மாணவர்களை அழைப்பதை அவர் பாராட்டினார். இளம் தலைமையினர் இத்தகைய வசதிகளை பயன்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கும், மாநில நலனுக்கும் பங்களிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சுய நிர்வாக எழுச்சிமிகு முறை, கீழ்மட்டத்திலும் ஜனநாயகம் ஆகியவை நூற்றாண்டுகளாக அருணாச்சலப் பிரதேசத்தில் நடைமுறையில் இருப்பதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.  இந்த மாநில மக்கள் நவீன ஜனநாயக நடைமுறைகளில் தீவிரமாக பங்கேற்பதுடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையையும், அரசியல் உணர்வையும் அவர்கள் பிரதிபலித்து வருகிறார்கள் என்று அவர்  கூறினார்.  மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் மாநில வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பாடுபட வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்ப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். மாநிலத்தின் முன்னேற்றத்தில் உயர் கொள்கை வகுப்பாளர்களான சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என அவர் வலியுறுத்தினார்.

நமது நாட்டில் ஒட்டுமொத்த அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு  அதிகமாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியறுத்தினார். அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை உள்பட அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதுடன், மக்கள் பிரதிநிதிகள் நிறைந்த இதர அமைப்புகளிலும் இந்தநிலை ஏற்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

 அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவில் மிக முக்கியமான பகுதி என்பதுடன், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் பெரும் பங்குதாரர் ஆகும். சாலை, ரயில், விமானப் போக்குவரத்து அதிகமில்லாத காரணத்தால் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் வடகிழக்குப் பிராந்தியத்தில் நீண்ட நாட்களாக இல்லாத நிலை நிலவியது. ஆனால் தற்போது மத்திய அரசு வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் தற்போது முன்னேற்றம் பிரகாசமாக ஒளிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். செழுமையான இயற்கை வளங்கள், தரமான மனிதவளம் ஆகியவற்றுடன் அருணாச்சலப் பிரதேசம் முதலீட்டை ஈர்ப்பதற்குரிய இடமாக மாறி வருவதுடன், வர்த்தகம் மற்றும் தொழிலுக்கான மையமாகவும் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிராந்தியத்தின் மக்கள், தங்களது வேர்களில் இருந்து விடுபட்டுவிடாமல் வளர்ச்சிப்பாதையில் முன்னேறிச்செல்வதை, இந்தப்பிராந்தியத்தின் பாரம்பரியம்,கலாச்சாரம், விழுமியங்களை மேம்படுத்தி பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். அருணாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்றவகையில், மாநிலத்தின் மிகச்செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே நேரம் சமூக மாற்றத்திற்கு முக்கியமான பங்காற்ற வேண்டும் என்று  அவர் கேட்டுக்கொண்டார்.

***

(Release ID: 1900971)

AP/PKV/AG/KRS



(Release ID: 1901022) Visitor Counter : 134