பிரதமர் அலுவலகம்

ராஜஸ்தானின் டௌஸாவில் பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 12 FEB 2023 5:13PM by PIB Chennai

ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் அவர்களே, முதலமைச்சர் திரு அசோக் கெலாட் அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர்லால் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான நிதின் கட்கரி அவர்களே, கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, வி.கே.சிங் அவர்களே, இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே!

     தில்லி – மும்பை விரைவுப் பாதையின் முதலாவது கட்டத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இது நாட்டின் மிகப்பெரிய, அதிநவீன விரைவுப் பாதைகளில் ஒன்றாகும். வளர்ச்சியின் பாதையில் இந்தியா முன்னேறிச் செல்வதன் மற்றொரு மகத்தான எடுத்துக்காட்டாக இது உள்ளது. இத்தருணத்தில் டௌஸாவின் மக்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

சகோதர சகோதரிகளே,

     இத்தகைய நவீன சாலைகள், நவீன ரயில் நிலையங்கள், ரயில்வே பாதைகள், மெட்ரோ ரயில்கள், விமான நிலையங்கள் கட்டப்பட்டிருப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளிக்கின்றன.  அடிப்படைக் கட்டமைப்பில் செலவிடப்படும் நிதி யதார்த்தத்தில் பல வகையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை உலகின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பில் மத்திய அரசு பெருமளவு முதலீடுகளை செய்துள்ளது.  ராஜஸ்தானில் கூட கடந்த ஆண்டுகளில் ரூ.50,000 கோடிக்கும் அதிகமாக நெடுஞ்சாலைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆண்டின் பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடியை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.  2014-உடன் ஒப்பிடுகையில் இது ஐந்து மடங்கு அதிகமாகும்.  

நண்பர்களே,

     இந்த விரைவுப்பாதை நெடுக, கிராமப்புற சில்லரை அங்காடிகள் உள்ளன. இதனால் உள்ளூர் விவசாயிகள், நெசவாளர்கள், கைவினைக்கலைஞர்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை எளிதாக விற்பனை செய்ய முடியும்.  ராஜஸ்தான் தவிர, ஹரியானா, மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகியவற்றின் பல மாவட்டங்களும் தில்லி-மும்பை விரைவுப்பாதை மூலம் பெரிதும் பயனடையும்.

நண்பர்களே,

     இந்த விரைவுப்பாதை பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தால், ஊக்கம் பெற்றுள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவுசக்தி பெருந்திட்டத்தின்கீழ், இந்த விரைவுப்பாதையில் 5-ஜி இணைப்புக்குத் தேவைப்படும் கண்ணாடி இழை வடங்கள் பதிக்கப்படுகின்றன. சில இடங்களில் மின்சார வயரிங், சமையல் எரிவாயு குழாய்ப் பாதைகள் பொருத்தப்பட்டுள்ளன. உபரியாக உள்ள நிலம் சூரிய மின்சக்திக்கான உற்பத்தி மற்றும் தொகுப்புக்கு பயன்படுத்தப்படும். இந்த முயற்சிகள் அனைத்தும் எதிர்காலத்தில் கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்கும்.  நாட்டின் நேரத்தை மிச்சப்படுத்தும். 

***

 

SRI/SMB/UM/RR



(Release ID: 1899130) Visitor Counter : 108