பிரதமர் அலுவலகம்

இந்திய இயன்முறை மருத்துவர்கள் (பிசியோதெரபிஸ்ட்கள்) சங்கத்தின் 60-ஆவது வருடாந்தர மாநாட்டில் பிரதமர் காணொலி காட்சி மூலம் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 11 FEB 2023 10:30AM by PIB Chennai

இந்திய இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் 60-ஆவது வருடாந்திர மாநாடு அகமதாபாதில் நடைபெற்றது. இதில்  பிரதமர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது, காயமோ, வலியோ எதுவாக  இருந்தாலும், இளைஞரோ, முதியவரோ யாராக இருந்தாலும், அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் எப்போதுமே இயன்முறை மருத்துவர்களின்  பங்களிப்பு இன்றியமையாதது என்றார். இதனால் இக்கட்டான காலங்களில் மக்கள் நம்பிக்கையின் சின்னமாக இயன்முறை மருத்துவர்கள் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், அதேநேரத்தில் மீட்பின் சின்னமாகவும் உள்ளனர். ஏனெனில், விபத்து உள்ளிட்டவற்றை எதிர்கொள்வோர், உடல் அளவிலும், மனஅளவிலும்  பாதிப்பை எதிர்கொள்ளும்போது, அதில் இருந்து அவர்களை மீட்கும் வல்லமை கொண்டவர்களாகத் திகழ்கிறீர்கள் எனப் பாராட்டுத் தெரிவித்தார்.

ஏழை மக்களைப் பொருத்தவரை அவர்கள் தங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள மற்றவர்களின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்ததாலேயே,மத்திய அரசு குழாய் மூலம் குடிநீர், இல்லந்தோறும் கழிப்பிட வசதி, அனைவருக்கும் வங்கிக்கணக்கு உள்ளிட்டவற்றை  அறிமுகம் செய்து செயல்படுத்தி  வருவதாகவும் கூறினார்.  அதேபோல்,  ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்டத் திட்டங்களின் மூலம் வலிமையான சமூகப் பாதுகாப்பை உருவாக்கி வருகிறோம் என்றார்.

சிறந்த இயன்முறை மருத்துவர் என்பவர் ஒன்று அல்லது 2-வது முறையிலேயே நோயாளியின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.  மீண்டும் மீண்டும் நோயாளியின் இல்லத்திற்குச் செல்லக்கூடாது. அந்த  வகையில், உங்களது தொழிலிலே  தற்சார்பின் முக்கியத்துவத்தைப் போதிக்கிறது என்று குறிப்பிட்டார்.   இன்றைக்கு தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய நாடு முன்னேறி வருகிறது.  அதனால்தான் தூய்மை இந்தியா, பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்குக் கல்வி அளிப்போம்  உள்ளிட்டத் திட்டங்களின் வெற்றியில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என பிரதமர் தெரிவித்தார்.

இயன்முறை மருத்துவர்களின் தொழிலை, இன்னும் மரியாதை மிக்கதாக மாற்ற ஏதுவாக, சுகாதாரம் சார்ந்த தொழில்களுக்கான தேசிய ஆணைய மசோதாவைக் கொண்டுவந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர்,  இது, இந்திய சுகாதார முறையில், உங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் என்றும் கூறினார். 

ஃபிட் இந்தியா, கேலோ இந்தியா இயக்கங்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்வதாகக் கூறிய அவர், இது நேரடியாக இயன்முறை மருத்துவர்களுடன் தொடர்புடையவை என்பதால்தான் வளர்ச்சி சாத்தியமானது என்றும் குறிப்பட்டார். 

உடல்தகுதி என்பது மக்களின் உரிமையும்கூட என்பதால், ஃபிட் இந்தியா திட்டத்தை  மத்திய அரசு விரிவாக்கம் செய்திருப்பதாகவும் கூறினார்.

யோகப் பயிற்சியுடன் இயன்முறை பயிற்சியையும் செய்தால் அதன் பயன் அளப்பரியதாக இருக்கும்  என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

 டெலிமெடிசன்  போல, நீங்களும், வீடியோ மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்குவது, நோயாளிகளுக்கு சில வேளைகளையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை எதிர்கொண்டுள்ள துருக்கியே, சிரியா போன்ற நாடுகளில் இயன்முறை மருத்துவர்களின் பங்களிப்பு  முக்கியமானது என்றும், இதுபோன்றச் சூழல்களில்,  செல்போன்கள் மூலம்கூட நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே எனது இந்தக் கருத்து குறித்து இயன்முறை மருத்துவர்கள் சங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

***

SMB / ES / DL



(Release ID: 1898475) Visitor Counter : 145