சுற்றுலா அமைச்சகம்
இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ் முதலாவது சுற்றுலா பணிக்குழு கூட்டம் இன்று குஜராத்தின் கட்ச் பாலைவனப் பகுதியில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
Posted On:
10 FEB 2023 2:06PM by PIB Chennai
கடந்த 7-ம் தேதி முதல் குஜராத்தின் கட்ச் பாலைவனப் பகுதியில் நடைபெற்ற இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ் முதலாவது சுற்றுலா பணிக்குழு கூட்டம் இன்று நிறைவடைந்தது. இதில் இருதரப்பு நிகழ்வுகள், ஒரு தொடக்க அமர்வு, அடையாளம் காணப்பட்ட ஐந்து முன்னுரிமைகள் குறித்த இரண்டு நாள் பணிக்குழு கூட்டங்கள், தொடர் இருதரப்பு சந்திப்புகள், உல்லாசப் பயணங்கள் ஆகியவை அடங்கும்.
பணிக்குழு கூட்டத்திற்கு முன்னதாக 7 ஆம் தேதி மாலை, ‘சமூக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புக்கான கிராமப்புற சுற்றுலா’ என்ற தலைப்பிலான நிகழ்வு நடைபெற்றது. குழு விவாதத்தில் குழு உறுப்பினர்கள் விளக்கக்காட்சிகளை வழங்கினர். கிராமப்புற சுற்றுலாத் துறையில் சிறந்த நடைமுறைகள், வெற்றிக் கதைகள், வாய்ப்புகள் மற்றும் சிக்கல்களை முன்னிலைப்படுத்தி விவாதங்களை நடத்தினர்.
தொடக்க அமர்வில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல், சுற்றுலா, பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியப் பிரமுகர்கள் இந்திய சுற்றுலாத் தலங்கள், சுற்றுலாவை மேம்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் உள்ளூர் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் சுற்றுலாவின் தாக்கம் குறித்து தொடக்க அமர்வில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பணிக்குழுக் கூட்டத்தின் போது, பசுமை சுற்றுலா உட்பட ஐந்து முன்னுரிமைக் கருப்பொருள்கள் மீது விவாதங்கள் நடைபெற்றன. சுற்றுலாத் துறையில் போட்டித்தன்மை, உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த டிஜிட்டல்மயமாக்கலின் சக்தியைப் பயன்படுத்துதல் குறித்தும், சுற்றுலா துறையில் வேலைகள் மற்றும் தொழில் முனைவோர் திறன் கொண்ட இளைஞர்களை மேம்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுற்றுலா துறையில் புதுமை மற்றும் வேகத்தை அதிகப்படுத்த சுற்றுலா எம்எஸ்எம்இகள் / ஸ்டார்ட்அப்கள் / தனியார் துறையை வளர்ப்பது போன்ற அனைத்து ஜி20 உறுப்பினர்கள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் ஆலோசனைக்காக அமைக்கப்பட்ட 5 முக்கிய முன்னுரிமைப் பகுதிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பணிக்குழு கூட்டத்தின் கடைசி நாளில், ‘தொல்பொருள் சுற்றுலாவை மேம்படுத்துதல்: பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தை கண்டறிதல்’ என்ற தலைப்பில் பக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. தொல்லியல் தளங்களைப் பாதுகாப்பது மற்றும் அத்தகைய இடங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து குழு விவாதத்தில் பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். உள்ளூர் சமூகங்களின் வலுவூட்டல் மற்றும் நிலையான வாழ்வாதாரத்திற்காக தொல்பொருள் சுற்றுலாவை மேம்படுத்துவதன் நன்மைகளையும் அவர்கள் எடுத்துரைத்தனர். இறுதிக் கருத்துரையில், சுற்றுலாத்துறை செயலாளர் திரு அரவிந்த் சிங், தொல்பொருள் சுற்றுலா உள்ளூர் சமூகங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை நிலையான முறையில் வழங்க முடியும் என்றார்.
***
SMB/PKV/RJ/KPG
(Release ID: 1897960)
Visitor Counter : 267