பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக மாநிலம் துமாகூருவில் எச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தும் ‘துமாகூரு தொழில்துறை நகரத்திற்கு’ அடிக்கல் நாட்டியும் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 06 FEB 2023 7:05PM by PIB Chennai

கர்நாடகா என்பது துறவிகள் மற்றும் முனிவர்களின் பூமியாகும். இந்தியாவின் மகத்தான பாரம்பரியமான ஆன்மீகம், ஞானம், அறிவியல் ஆகியவற்றை கர்நாடகா எப்போதும் வலுப்படுத்தியுள்ளது. இதிலும் கூட, துமாகூரு தனித்துவ இடத்தைப் பெற்றுள்ளது. சித்த கங்கா மடம் இதில் மிகப் பெரிய பங்களிப்பை செய்துவருகிறது. “அன்னம்”, “கல்வி”, “உறைவிடம்” எனும் மூன்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ‘த்ரிவித தசோகா’ என்பதை   உருவாக்கி சிவகுமார சுவாமி அவர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை இன்று ஸ்ரீ சித்தலிங்க மகாசுவாமி,  முன்னெடுத்துச் செல்கிறார். குப்பியில் இடம் பெற்றுள்ள ஸ்ரீ சிதம்பர ஆசிரமத்திற்கும் பகவான் சன்ன பசவேஸ்வராவுக்கும் நான் தலை வணங்குகிறேன்.  (கன்னட மொழியிலான வாழ்த்துரை)

சகோதர சகோதரிகளே,

இந்த துறவிகளின் ஆசீர்வாதங்களோடு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன அல்லது அடிக்கல் நாட்டப்படுகின்றன. இதன் மூலம், கர்நாடக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. கிராமவாசிகளுக்கும் பெண்களுக்கும் வசதிகள் அளிக்கப்படுவதோடு  நாட்டின் ராணுவமும் வலுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி என்ற  சிந்தனைக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. துமாகூருவில், நாட்டின் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை இன்று தொடங்கப்பட்டுள்ளது. துமாகூரு தொழில்துறை நகரத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  இந்தப் பணிகளோடு  துமாகூரு மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன.  இதற்காக  உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

நண்பர்களே,

கர்நாடகா என்பது திறமையான இளைஞர்களின், புதிய கண்டுபிடிப்புகளின் பூமியாகும்.  ட்ரோன் உற்பத்தியிலிருந்து தேஜஸ் போர் விமானங்கள் உருவாக்குவது வரை உற்பத்தித் துறையில் கர்நாடகாவின் பலத்தை உலகம் கண்டு வருகிறது. இரட்டை என்ஜின் அரசு முதலீட்டாளர்களுக்கான முதலாவது தேர்வாக கர்நாடகாவை மாற்றியிருக்கிறது. இன்று தொடங்கப்பட்ட ஹெலிகாப்டர் தொழிற்சாலை இரட்டை என்ஜின் அரசு எவ்வாறு பணியாற்றுகிறது என்பதற்கான உதாரணமாகும். 

நண்பர்களே,

துமாகூரு தொழிற்சாலை நகரப்பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. உணவுப்பூங்கா மட்டும், ஹெலிகாப்டர்  தொழிற்சாலைக்குப் பின் இதுவும் துமாகூருவுக்கு  இன்னொரு முக்கியமான பரிசாகும்.  இந்தப் புதிய தொழிற்சாலை நகரம்,  கர்நாடகாவின் மிகப் பெரிய தொழில்துறை மையமாக மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவின் மையமாகவும் துமாகூருவை மேம்படுத்தும். இது, சென்னை – பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தின் பகுதியாக இருக்கும்.  தற்போது சென்னை – பெங்களூரு, பெங்களூரு – மும்பை, ஐதராபாத்– பெங்களூரு, தொழில்துறை வழித்தடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமரின், விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ், துமாகூரு தொழிற்சாலை நகரம் கட்டமைக்கப்படுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்பும், சுயவேலைவாய்ப்பும் உருவாகும்.

நண்பர்களே,

ஏழைகளுக்கு ஆதரவான, நடுத்தர வர்க்கத்திற்கு ஆதவான இந்த ஆண்டின் பட்ஜெட் பற்றி உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் எவ்வாறு ஒருங்கிணைவது என்பதை உறுதி செய்வதற்கு வலுவான வழிகாட்டுதல்களை இந்தப் பட்ஜெட் வழங்குகிறது. சுதந்திரத்தின் 100-வது ஆண்டினை கொண்டாடவிருக்கும் இந்தியாவின்  அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துவதாக  இந்த ஆண்டின் பட்ஜெட்  உள்ளது.  திறன் வாய்ந்த இந்தியா, வளமிக்க இந்தியா, தற்சார்பு இந்தியா, சக்திமிக்க இந்தியா,  துடிப்புள்ள இந்தியா என்ற திசை வழியில் மிகப் பெரும் முன்னெடுப்பாக இந்தப் பட்ஜெட் உள்ளது.

நண்பர்களே,

இரட்டை என்ஜின் அரசின்  உண்மையான முயற்சிகள் காரணமாக இந்திய மக்களின் நம்பிக்கை இன்று வெகுவாக உயர்ந்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரின் பாதுகாப்புக்காகவும், அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்காகவும், நாங்கள் அல்லும் பகலும் பாடுபடுகிறோம். உங்களின் தொடர்ச்சியான வாழ்த்துக்கள் எங்களுக்கு ஆற்றலையும், ஊக்கத்தையும் அளிக்கின்றன. பட்ஜெட்டுக்காகவும், துமாகூருவில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம், அடிக்கல் நாட்டுதல், ஆகிய விழாக்களுக்காகவும், மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

நன்றி

------

SMB/KPG/RR

 (Release ID: 1896737)


(Release ID: 1896885) Visitor Counter : 173