நிதி அமைச்சகம்

நிதியாண்டு 2023-24 இல் நிதி பற்றாக்குறை 5.9%ஆக இருக்கும்

Posted On: 01 FEB 2023 12:59PM by PIB Chennai

2025-26 ஆம் ஆண்டிற்குள் நிதி பற்றாக்குறையை 4.5% ஆகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று 2023- 24 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பட்ஜெட் மதிப்பீடு 2023-24 இல் நிதி பற்றாக்குறை, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9%ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 2023-24 ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறைக்கு ஆதரவளிப்பதற்காக ரூ. 11.8 லட்சம் கோடியை நிகர சந்தை கடன்களாகப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை சிறு சேமிப்பு மற்றும் இதர ஆதாரங்களில் இருந்து பெறப்படும். ரூ. 15.4 லட்சம் கோடி, ஒட்டுமொத்த சந்தை கடனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் மதிப்பீடுகளின்படி கடன்கள் தவிர்த்து மொத்த வரவு ரூ. 27.2 லட்சம் கோடியாகவும், மொத்த செலவினம் ரூ. 45 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். நிகர வரி வரவு ரூ. 23.3 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

நிதியாண்டு 2023-24 இல் வருவாய் பற்றாக்குறை 2.9%ஆக இருக்கும். 2022-23 ஆம் ஆண்டில் இந்த மதிப்பீடு 4.1%ஆக இருந்தது. கடந்த நிதியாண்டை விட ஒட்டு மொத்த வரி வருவாய் 10.4% வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் முறையே 10.5% மற்றும் 10.4% அதிகரிக்கக்கூடும்.

*****

 

(Release ID: 1895287)



(Release ID: 1895651) Visitor Counter : 478