நிதி அமைச்சகம்

நேரடி வரிவிதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் நோக்கமானது, நடைமுறைகளை எளிமையாக்குதல், தொழில்முனைவோருக்கான ஆர்வத்தை தூண்டுதல், பொதுமக்களுக்கு வரி நிவாரணம் வழங்குதல்:

Posted On: 01 FEB 2023 12:55PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2023-24-ல் அறிவிக்கப்பட்ட நேரடி வரிவிதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் நோக்கமானது, நடைமுறைகளை எளிமையாக்குதல், தொழில்முனைவோருக்கான ஆர்வத்தை தூண்டுதல், பொதுமக்களுக்கு வரி நிவாரணம் வழங்குதல் ஆகும். அதாவது வரிவிதிப்பு நடவடிக்கைகளை நிலையாக, தொடர்ச்சியாக, எளிமையாக மேற்கொள்வதை கருத்தில் கொண்டே நேரடி வரிவிதிப்புகள் தொடர்பாக நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகிறது.

அடுத்த தலைமுறைக்கான பொது வருமானவரி தாக்கலின் விண்ணப்பம் வெளிவரவிருப்பதாக தெரிவித்துள்ள  மத்திய நிதி அமைச்சர், வரி செலுத்துபவர்கள் தொடர்பான சேவைகள் சிறப்பான வகையிலும், அவர்களுக்கு ஏற்ற வகையில் செயல்பட்டு, அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக அமையும் என்றார். வரி செலுத்துபவர்களுக்கான வலைதளத்தில் ஒரே நாளில் 72 இலட்சம் வருமான வரி தாக்கல் விண்ணப்பங்களை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 6.5 கோடிகளுக்கும் மேலாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆண்டு வருமானம் ரூ.2 கோடி வரையிலான சிறு நிறுவனங்கள், ஆண்டு வருமானம் ரூ.50 இலட்சம் வரையிலான குறிப்பிட்ட தொழிலைச் சார்ந்தவர்கள் முன்னறிவிக்கப்பட்ட வரிவிதிப்பு தொடர்பான பலன்களை அனுபவிக்க முடியும் என்று திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வருமானவரி விதிப்பில் நன்மை கிடைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சிறு அளவிலான மேல்முறையீடுகளை தீர்வு காண்பதற்காக 100 இணை ஆணையர்கள் நியமிக்கப்படவிருப்பதாக திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வீட்டு வசதி, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகள்  போன்றவைகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் ஆளுமைகளுக்குட்பட்டு அமைக்கப்பட்ட வாரியங்கள், ஆணையங்கள் தொடர்பாக பெறப்படும் நிதி ஆதாரங்களுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1895284(Release ID: 1895445) Visitor Counter : 171