கலாசாரத்துறை அமைச்சகம்

நேரு அருங்காட்சியகம் மற்றும் நினைவு நூலக அமைப்பின் வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்


பண்டைய இந்தியா குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த நவீன இந்தியா குறித்த ஆராய்ச்சிகளை விரிவுபடுத்த வேண்டியது தற்போதைய தேவை : பிரதமர்

Posted On: 02 JAN 2023 6:40PM by PIB Chennai

நேரு அருங்காட்சியகம் மற்றும் நினைவு நூலக அமைப்பின் (சொசைட்டி) வருடாந்திர பொதுக்கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. புதுதில்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில்  இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர், நவீன இந்திய வரலாறு குறித்து, தனிநபர் குழுக்களும், நிறுவனங்களும் ஆராய்ச்சி மேற்கொள்ளவேண்டியது அவசியம்  என்றார். இதன் மூலம் இந்தியாவின் கடந்த கால வரலாறு குறித்த  விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் உள்ள கல்விசார் நிறுவனங்கள் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரும் தெரிந்து பயனடையும் வகையில், தங்களது மேம்படுத்தப்பட்ட  ஆராய்ச்சிகளை, ஆவணங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி சங்கராலயா அருங்காட்சியகத்தின் செயல்பாடுகள்  திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்த திரு நரேந்திர மோடி, தனிநபர்களை மையப்படுத்தாமல், தேசத்தை மையப்படுத்துவதே இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார். இந்த  சங்கராலயாவின் சாதனைகள் குறித்துப் பேசிய அவர், அனைத்து பிரதமர்களும் இந்திய மக்களுக்கு ஆற்றிய சேவையைத் தவறாமல் எடுத்துரைக்கும் என்றார். எனவே, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சங்கராலயாவின் கொள்கைகளைப் பறைச்சாற்றும் போட்டிகளை நடத்தி இளைஞர்களிடையே  இந்த சங்கராலயாவை பிரபலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எதிர்காலத்தில் உள்நாட்டினர் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலிருந்தும் புதுதில்லி வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் அருங்காட்சியமாக சங்கராலயா  திகழும் என நம்பிக்கை தெரிவித்தார்.  நவஇந்தியாவின் செல்வாக்குமிக்க சமூக மற்றும் கலாச்சார அடையாளமாகத் திகழ்பவரும், கடந்த 1875ம் ஆண்டு ஆர்ய சமாஜத்தை  நிறுவியவருமான சுவாமி தயானந்த சரஸ்வதியின்  200-வது பிறந்த தின விழா அடுத்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளதை  பிரதமர் சுட்டிக்காட்டினார். இதேபோல் ஆர்ய சமாஜத்தின் 150வது ஆண்டு விழா 2025ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளதால், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் கலாச்சார நிறுவனங்கள் சமூக சீர்திருத்தம் சார்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் தொலைநோக்குப் பார்வையை மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் நேரு அருங்காட்சியகம் மற்றும் நினைவு நூலக  அமைப்பின் உறுப்பினர்களும், நிர்வாக கவுன்சில் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888097

                                                                                                                 ------

AP/ES/RS/KPG

 



(Release ID: 1888124) Visitor Counter : 160