ஊரக வளர்ச்சி அமைச்சகம்
2022-ஆம் ஆண்டில் நில வளங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முன்முயற்சிகள்
Posted On:
22 DEC 2022 9:15AM by PIB Chennai
டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீன மயமாக்கல் திட்டம் மற்றும் பிரதமரின் வேளாண் பாசனத் திட்டத்தின் நீர்நிலை மேம்பாட்டுப் பகுதியை ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நில வளங்கள் துறை செயல்படுத்தி வருகிறது. திட்டங்கள் மற்றும் சாதனைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீன மயமாக்கல் திட்டம்:
நில ஆவணங்களின் கணினிமயமாக்கல் பணிகள் 94%க்கும் அதிகமான கிராமங்களில் நிறைவடைந்திருப்பதாக நில வளங்கள் துறை தெரிவித்தது. 29 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் 94%க்கும் மேற்பட்ட பகுதிகளில் (நாட்டில் மொத்தம் உள்ள 6,56,792 கிராமங்களில் 6,20,166 கிராமங்கள் இதில் அடங்கும்) ஆவண உரிமைகள் பணி நிறைவடைந்துள்ளது.
அதேபோல 27 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் கணினிவாயிலாக பதிவு செய்யும் முறை சுமார் 93% முடிவடைந்துள்ளது. நிலத்தின் நீளம், பகுதி மற்றும் திசையின் அடிப்படையில் நிலங்களின் வெவ்வேறு எல்லைகளை விளக்கும் ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 70% நிறைவடைந்துள்ளது.
ஒருங்கிணைந்த நில தகவலியல் மேலாண்மை அமைப்புமுறை 321 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு உள்ளிட்ட 24 மாநிலங்களில் பிரத்தியேக நில அடையாள எண் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர புதுச்சேரி உள்ளிட்ட மேலும் 8 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் சோதனை முயற்சியில் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது.
ஆவணங்களை பதிவு செய்வதற்கு ஒரே சீரான நடைமுறையை கொண்டு வருவதற்கான தேசிய பொது ஆவண பதிவு அமைப்புமுறை, நவம்பர் மாதம் வரை, 17 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நில தகராறுகளை குறைக்கவும், வழக்குகளை விரைவாக முடித்து வைக்கவும், நம்பகத்தன்மை வாய்ந்த முதல்தர தகவல்களை நீதிமன்றங்களுக்கு அளிப்பதற்கு ஏதுவாக நில ஆவணங்கள் மற்றும் பதிவுகளின் தரவுகளோடு மின்னணு நீதிமன்றங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வேளாண் பாசன திட்டத்தின் நீர்நிலை மேம்பாட்டுப் பகுதி:
நிலச்சீரழிவு, மண்ணரிப்பு, தண்ணீர் பற்றாக்குறை, பருவநிலை நிச்சயமற்ற தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு நீர்நிலை மேம்பாட்டுத் திட்டங்கள் மிகச் சிறந்தத் தீர்வாக விளங்குகின்றன. வேளாண் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்துதல், வறுமையை ஒழித்தல் மற்றும் ஊரகப் பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கிறது.
இத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை 2021-22 முதல் 2025- 26 வரை தொடர்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ரூ. 8134 கோடி செலவில் (மத்திய அரசின் பங்கு) 4.95 மில்லியன் ஹெக்டர் நிலங்களுக்கு நீர் பாசன வசதி செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது.
**************
(Release ID: 1885649)
Visitor Counter : 202