சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பல்லுயிர் பெருக்கம் குறித்த சிஓபி15 மாநாட்டில் தேசிய அறிக்கையை முன்வைத்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் உரையாற்றினார்

Posted On: 17 DEC 2022 9:20AM by PIB Chennai

கனடாவின் மான்ட்ரீலில் பல்லுயிர் பெருக்கம் குறித்த சிஓபி15 மாநாட்டில் இந்தியாவின் தேசிய அறிக்கையை முன்வைத்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை  மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் உரையாற்றினார்.

“ தலைவர் அவர்களே, மேன்மைதங்கியவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட உலகளாவிய அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள நம்பகமான செயல்பாடே பலமாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.  உலக மக்கள்தொகையில் 17 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளபோதும் அதன் 2.4  சதவீத நிலப்பரப்பையும், 4 சதவீத நீராதாரங்களையும் மட்டுமே எங்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.

எங்களின் வனம் மற்றும் மரங்கள் வளர்ப்புப் பகுதியும் அத்துடன் இணைந்து வன விலங்குகளின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருகிறது. வரலாற்றுச் சின்னமான சிறுத்தையை இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவர உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட சதுப்புநிலப் பகுதிகளின் எண்ணிக்கையை இந்தியா தற்போது 75 ஆக உயர்த்தியுள்ளது. வளர்ந்துவரும் பெரிய நாடு என்ற முறையில், எங்களின் வனக் கொள்கையை அமலாக்குவது சவாலாக இருப்பினும், எங்களின் வன அளவீடுகள் அதன் வெற்றிக்கு சான்றாக உள்ளன.

அதேபோல் மற்ற வளரும் நாடுகளைப்போலவே  எங்களின் விவசாயமும், பல லட்சம் பேரின் வாழ்வாதாரமாகவும் கலாச்சாரமாகவும்  உள்ளது. இதில் உள்ள நலிந்த பிரிவினருக்கான இந்த அத்தியாவசிய உதவியை நீக்கவும் இதனை மானியம் என்று அழைக்கவும் முடியாது; இதனைச் சீரமைக்கலாம். ஆக்கபூர்வ முதலீட்டின் மூலமே பல்லுயிர் பெருக்கம் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளைக் குறைக்க உலகளாவிய எண்ணிக்கை இலக்கு தேவையற்றதாகும். இதனை நாடுகள் முடிவுசெய்ய விட்டுவிட வேண்டும். தேவையான அடிப்படையும் பொருத்தமான அறிவியல் ஆதாரமும் இல்லாமல் எண்ணிக்கை இலக்கு என்பது சத்தியம் இல்லை.

மேன்மைதங்கியவர்களே,

 

உலகளாவிய பல்லுயிர் பெருக்கக்  கட்டமைப்பை  அறிவியல் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலும்   பல்லுயிர் பெருக்க மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளபடி, நாடுகளின் வளங்கள் மீதான இறையாண்மை உரிமை அடிப்படையிலும் கட்டமைக்க வேண்டும். பல்லுயிர் பெருக்கத்துடன் காலநிலை  ஆழமாக இணைக்கப்பட்டிருந்தால், சமத்துவ மற்றும் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் அந்தந்த திறன்கள் என்ற கோட்பாடு, பல்லுயிர் பெருக்கத்திற்கும்  சமமாகப்  பொருத்தப்பட வேண்டும்.

மனித குலத்திற்கான பல்லுயிர் பெருக்கத்தின் மதிப்பு கலாச்சாரம்  மற்றும் சமூகத்துடன் அதன் பொருளாதார பரிமாணத்திலும் உள்ளது. பாதுகாப்பு மற்றும் மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுடன் நீடித்த பயன்பாடு, அணுகுதல் மற்றும் பலன் பகிர்வு ஆகியவை பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமானவையாகும்.

மேன்மைதங்கியவர்களே,

நமது முன்னோர்களும் பாரம்பரியங்களும் நமக்கு வழங்கிய  இயற்கைப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் பயனுள்ள விவாதங்களை இந்தியா எதிர்நோக்குகிறது. நாம் பூமியின் பாதுகாவலர் மட்டுமே, பூமித் தாயின்  வளமான பல்லுயிர் பெருக்கத்தை  மேலும் செழுமைப்படுத்தி, அதன் பழமையான பெருமையை மீட்டெடுத்து, மனிதகுலம், இயற்கை மற்றும் அனைத்து உயிரினங்களின் நலனுக்காக  அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்பதே நமது  கடமையாகும்.

மனம்போன போக்கிலான மற்றும் அழிவுகரமான நுகர்வுக்குப் பதிலாக சிந்தித்து தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்தும் மனப்பான்மை இன்றையத் தேவை என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தச் சூழலில்தான் நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கை முறையை நோக்கிய வெகுஜன இயக்கமான மிஷன் லைஃப் திட்டத்தைத் தொடங்கினார்.

 இதைத் தழுவி, பல்லுயிர் பெருக்க மாநாட்டின் அடிப்படைக் கொள்கைகளை முழுமையான உணர்வுடன் செயல்படுத்துவதன் மூலம் சமமான மற்றும் நீடிக்கவல்ல உலகத்தை நோக்கி முன்னேறுவோம்.  இந்த உணர்வுதான் ஒரே உலகம், ஒரே குடும்பம் அல்லது வசுதைவ குடும்பகம் என்பதற்கு அழைப்பு விடுக்கும் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவ இலச்சினையில் மெய்யாகவே படம் பிடிக்கப்பட்டுள்ளது.”

**************

AP/SMB/DL



(Release ID: 1884378) Visitor Counter : 434