பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் தொடக்கத்தையொட்டி மாநிலங்களவையில் பிரதமர் உரை


மேலவைக்கு குடியரசு துணைத் தலைவரை வரவேற்றார்

“ஆயுதப்படை கொடி தினத்தை முன்னிட்டு அவை உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக ஆயுதப்படையினருக்கு மரியாதை செலுத்துகிறேன்.”

“நமது குடியரசு துணைத் தலைவர் ஒரு விவசாயி மகன், அவர் சைனிக் பள்ளியில் படித்தவர். அவர் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்”

"இந்த அமிர்த காலப் பயணத்தில் நமது ஜனநாயகம், நமது நாடாளுமன்றம் மற்றும் நமது நாடாளுமன்ற அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கும்"

“சொந்த ஆற்றலை மட்டும் வைத்து ஒருவர் எதையும் சாதித்துவிட முடியாது, அதேசமயம் பயிற்சியும், முயற்சியும் அதற்கு முக்கியம் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே சான்றாகும்”

“முன்னிருந்து வழிநடத்துவதே தலைமைத்துவத்தின் உண்மையான வரையறை; மாநிலங்களவையை பொறுத்தவரை இது மிகவும் முக்கியமானது”

"அவையில் ஜனநாயக ரீதியான விவாதங்களே, ஜனநாயகத்தின் தாய் என்ற நமது பெருமைக்கு மேலும் பலத்தை அளிக்கும்"

Posted On: 07 DEC 2022 1:22PM by PIB Chennai

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் தொடக்கத்தையொட்டி இன்று மாநிலங்களவையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் குடியரசு துணைத் தலைவரை மேலவைக்கு வரவேற்றார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் அனைத்து குடிமக்கள் சார்பாக இந்திய குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு. ஜக்தீப் தன்கருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் தனது உரையைத் தொடங்கினார். குடியரசு துணைத் தலைவர் எனும் மதிப்புமிக்கப் பதவியின் முக்கியத்துவத்தைப் பட்டியலிட்ட பிரதமர், அந்த இருக்கையே கோடிக்கணக்கானோருக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தொடர் தொடங்கும் இன்றைய தினம் ஆயுதப்படையின் கொடி தினத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், அனைத்து உறுப்பினர்களின் சார்பாக ஆயுதப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். குடியரசு துணைத் தலைவரின் பிறப்பிடமான ஜுன்ஜுனுவைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், தேசத்தின் சேவையில் ஜுன்ஜுனுவின் ஏராளமான குடும்பங்களின் பங்களிப்புகளைக் குறிப்பிட்டார். ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளுடன் குடியரசு துணைத் தலைவருக்கு இருக்கும் மிக நெருங்கியத் தொடர்பை பற்றி கூறுகையில், “நமது குடியரசு துணைத் தலைவர் ஒரு விவசாயி மகன், அவர் சைனிக் பள்ளியில் படித்தவர். அவர் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளுடன் நெருங்கியத் தொடர்புடையவர்”, என்று தெரிவித்தார்.

இந்தியா இரண்டு மகத்தான நிகழ்வுகளைக் கண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மதிப்பிற்குரிய குடியரசு துணைத் தலைவரை நாடாளுமன்ற மேலவை வரவேற்கிறது என்று பிரதமர் கூறினார். சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் இந்தியா நுழைந்துள்ளதுடன், ஜி-20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கும் தலைமை தாங்குவதற்குமான மதிப்புமிக்க வாய்ப்பைப் பெற்றுள்ளது என்பதை திரு மோடி சுட்டிக்காட்டினார். புதிய இந்தியாவுக்கான வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதோடு, வரும் காலங்களின் உலகம் செல்லும் பாதையை நிர்ணயிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் மேலும் கூறினார். இந்தப் பயணத்தில் நமது ஜனநாயகம், நமது நாடாளுமன்றம் மற்றும் நமது நாடாளுமன்ற அமைப்பு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும்" என்றும் அவர் கூறினார்.

மாநிலங்களவைத் தலைவராக குடியரசு துணைத் தலைவரின் பதவிக்காலம் இன்று முறையாகத் தொடங்குகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், மேலவையின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளப் பொறுப்பு சாமானியர்களின் கவலைகளுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார். “இந்தக் காலகட்டத்தில் இந்தியா தனது பொறுப்புகளை புரிந்துகொண்டு அதை நிறைவேற்ற பணிபுரிகறது” என்று அவர் மேலும் கூறினார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வடிவில் இந்தியாவின் மதிப்புமிக்க பழங்குடி சமூகம் இந்த முக்கியமானத் தருணத்தில் தேசத்தை வழிநடத்தி வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து நாட்டின் உச்ச நிலையை அடைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.

அவைத் தலைவரின் நாற்காலியை மரியாதையுடன் நோக்கிய பிரதமர், “ சொந்த ஆற்றலை மட்டும் வைத்து ஒருவர் எதையும் சாதித்துவிட முடியாது, அதேசமயம் பயிற்சியும், முயற்சியும் அதற்கு முக்கியம் என்பதற்கு உங்கள் வாழ்க்கையே சான்றாகும்” என்றார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூத்த வழக்கறிஞர் என்ற குடியரசு துணைத் தலைவரின் அனுபவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர்,   இந்த  அவைக்கு வருவதை அவர் தவறவிடமாட்டார். ஏனெனில் மாநிலங்களவையில் உள்ள பலர் அவரை உச்சநீதிமன்றத்தில் சந்தித்திருப்பார்கள் என நகைச்சுவையுடன் பிரதமர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “எம்.எல்.ஏ-விலிருந்து எம்.பி. வரை, மத்திய அமைச்சரிலிருந்து கவர்னர் வரை என நீங்களும் பணியாற்றியிருக்கிறீர்கள்” என்று கூறினார். இந்த அனைத்துப் பதவிகளிலும் பொதுவான ஒன்று நாட்டின் வளர்ச்சி மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான நமது அர்ப்பணிப்பாகும் என்று அவர் மேலும் கூறினார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அவர் பெற்ற 75% வாக்குகள் அவருக்குள்ள அனைவரின் ஆதரவை எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் கூறினார். “முன்னிருந்து வழிநடத்துவதே தலைமைத்துவத்தின் உண்மையான வரையறை. மாநிலங்களவையை பொறுத்தவரை இது மிகவும் முக்கியமானது, ஏனெனில், ஜனநாயக ரீதியிலான முடிவுகளை மிகவும் செம்மையான முறையில் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இந்த அவைக்கு உள்ளது”, என்று கூறினார்.

இந்த அவையின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அதன் உறுப்பினர்களுக்கு உள்ள பொறுப்புகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்த அவையானது மாபெரும் நாட்டின் ஜனநாயகப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதுடன் அதன் பலமாகவும் திகழ்வதாகத் தெரிவித்தார். பல முன்னாள் பிரதமர்கள் ஒரு கட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக பணியாற்றியதை அவர் எடுத்துரைத்தார். குடியரசு துணைத் தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த அவை அதன் மரபு மற்றும் கண்ணியத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று பிரதமர் உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார். "சபையில் தீவிர ஜனநாயக விவாதங்கள் ஜனநாயகத்தின் தாய் என்ற நமது பெருமைக்கு மேலும் பலத்தை அளிக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

உரையை நிறைவு செய்யும் போது, பிரதமர் கடந்த அமர்வை நினைவு கூர்ந்தார். அதில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் மற்றும் அவைத் தலைவரின் சொற்றொடர்கள் மற்றும் கவிதை நயப் பேச்சுக்கள் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியது, என்று கூறினார். "அதே போல் இயற்கையான உங்கள் நகைச்சுவை உணர்வு இந்த அவையின் நடவடிக்கையில் எந்தக் குறையையும் வைக்காமல்,  அவையின் நன்மைக்கு வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று பிரதமர் கூறி தனது உரையை முடித்தார்.

**************

AP/SRI/IDS


(Release ID: 1881388) Visitor Counter : 210