பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பிரதமர் உரையின் மொழியாக்கம்

Posted On: 07 DEC 2022 11:30AM by PIB Chennai

வணக்கம் நண்பர்களே,

இன்று (நாடாளுமன்ற) குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளாகும். ஆகஸ்ட் 15-க்கு முன்பு நாம் சந்தித்ததால் இந்த கூட்டத் தொடர் முக்கியமானதாகும். ஆகஸ்ட் 15 அன்று  நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்தன. நாம் இன்று அமிர்தகாலப் பயணத்தை நோக்கி நடைபோட்டு வருகிறோம். இந்தியா ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் நாம் இன்று கூடியுள்ளோம். உலக சமுதாயத்தில் இந்தியா படைத்துள்ள வெளி, இந்தியா மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், உலகத்தளங்களின் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வரும் சூழலில் ஜி-20 தலைமைத்துவத்தை நாம் பெற்றிருப்பது மிகப்பெரிய வாய்ப்பாகும்.

ஜி20 உச்சிமாநாடு வெறும் தூதரக ரீதியிலான நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல் இந்தியாவின் திறனை உலக அரங்கில் முழுமையாக காட்சிப்படுத்தும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது. ஜனநாயகத்தின் தாயாக, ஏராளமான வேற்றுமைகொண்ட, அதிக ஆற்றலும், வாய்ப்பும் மிக்க, மிகப்பெரிய நாடான இந்தியாவைப் பற்றி, உலகம் அறிந்து கொள்ளவும், உலகம் முழுவதிலும் இந்தியா தனது ஆற்றலை பறைசாற்றவும் இது பெரிய வாய்ப்பாகும்.

அண்மையில் நான் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் மிகவும் இணக்கமான சூழலில் விவாதித்தேன். அதனுடைய பிரதிபலிப்பு அவையிலும் நிச்சயமாக இருக்கும் என்பதை காணலாம். இந்தியாவின் ஆற்றலை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்கு அதே உணர்வு நாடாளுமன்றத்திலும் காணப்படுவது பயனுள்ளதாக இருக்கும். இந்த அமர்வில் மிகமுக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தற்போதைய உலக சூழலுக்கிடையே நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல புதிய வாய்ப்புகளையும், வளர்ச்சியின் புதிய உச்சத்தை அடைவதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்படும்.  அனைத்து அரசியல் கட்சிகளும் மதிப்புமிக்க விவாதத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து விவாதத்துக்கு புதிய வலுசேர்ப்பதுடன், நமது பாதையை மிகவும் தெளிவாக தேர்வு செய்ய உதவும் என நான் நம்புகிறேன். நாடாளுமன்றத்தின் இந்த அமர்வில் எஞ்சிய காலத்திற்கு, அவைக்கு முதல் முதலாக புதிதாக வந்துள்ளவர்களுக்கு, புதிய எம்பிக்களுக்கு, இளம் எம்பிக்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க, அனைத்துக்கட்சித்தலைவர்களும், கட்சிகளின் அவைத் தலைவர்களும் முன் வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். விவாதங்களில் அவர்கள் அதிகமாக பங்கேற்பது அவர்களது பிரகாசமான எதிர்காலத்திற்கு உதவுவதுடன், ஜனநாயகத்தின் எதிர்கால தலைமுறை தயாராவதற்கும் வழிவகுக்கும்.

கடந்த காலங்களில் சாதாரண முறையிலான சந்திப்புகளின்போது, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் சந்திக்கும் போது, அவை (நாடாளுமன்றம்) நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படும் போதும், ஒத்திவைப்பு  நடக்கும் போதும் அவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவதாக ஒருமித்த குரலாகக் கூறினர். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் மிகப் பெரிய ஒரு அங்கமாகும் என்றும், அவை (நாடாளுமன்றம்) நடவடிக்கைகள் மற்றும் பயனுள்ள விவாதங்கள் நடைபெறாமல் இருக்கும் போது, தாங்கள் பெருமளவு பாதிப்படைவதாக இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதங்கள் மூலம் தெரியப்படுத்தி அதற்குத் தீர்வு காண்பதற்கான வழி ஏற்படாமல் போகும் நிலை ஏற்படுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் நடைபெற வேண்டியது முக்கியமானதாகும். இந்தக் கருத்தை பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே குரலாக வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற விவாதங்களில் தங்களுக்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது என்று எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்மிடம் கூறுகின்றனர். அவை நடவடிக்கைகளில் அடிக்கடி இடையூறு ஏற்படும் பொழுதும் ஒத்திவைப்பு நடவடிக்கைகள் மூலமும் தாங்கள் அதிகளவில் பாதிப்படைவதாக அவர்கள் கூறுகின்றனர். அனைத்துக் கட்சித் தலைவர்களும், அவைத் தலைவர்களும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலியை உணர வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளை விவாதம் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற அவர்களது வாதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் ஆக்கப்பூர்வமான விவாதங்களின் மூலமே மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதுடன், கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

மாநிலங்களவையில் சபாநாயகராக பொறுப்பேற்கும் குடியரசு துணைத் தலைவருக்கு இன்றைய முதல் நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பழங்குடியினப் பெருமைகளை பறைசாற்றும் வகையில் செயலாற்றி வருகிறார். அதை போலவே விவசாயி மகனான குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவையின் சபாநாயகருமான அவர், இந்தியாவை பெருமை கொள்ளும் வகையில் செயல்படுவதோடு, மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர் செயல்படுவார் என்றும் நான் நம்புகிறேன். அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி நண்பர்களே

நமஸ்காரம்!

**************

SRI/PKV/AG/GS/RR/IDS


(Release ID: 1881356) Visitor Counter : 225