தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும்: மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் நம்பிக்கை

Posted On: 06 DEC 2022 5:15PM by PIB Chennai

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் வகையில் 2023-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 1 லட்சம் ட்ரோன் பைலைட்டுகளை தயார்ப்படுத்த வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னைக்கு அருகே தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் கருடா ஏரோஸ்பேஸ் ஆய்வுக்கூடம் மற்றும் ட்ரோன் பயிற்சி ஆய்வகத்தை இன்று தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், ட்ரோன் தொழில்நுட்பம் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் உருவானது என்றார்.

ட்ரோன் தொழில்நுட்பம் அனைத்து துறையிலும், மாற்றாக உருவெடுத்து வருகிறது என்று கூறிய அவர், விவசாயத்துறையில் இதன் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது என்றார். விவசாயத்துறையில் பூச்சிமருந்து தெளித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

கிசான் ட்ரோன் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டில் 740 மாவட்டங்களில் 75 ட்ரோன் வேன்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்லூரியின் முன்முயற்சி பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார்.

பிரதமரின் கனவை நனவாக்க இளம் தொழில்நுட்ப நிபுணர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், இளம் பொறியாளர்கள் இதனை சாதித்துக் காட்டுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

வேளாண்துறையில் ட்ரோன் தொழில்நுட்பப் பயன்பாடு உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் பிரதமரின் கனவை நிறைவேற்ற வகைசெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகளை நாடு முழுவதும் கொண்டு சென்று விநியோகித்ததில் ட்ரோன்கள் பெரும் பங்குவகித்ததாகத் தெரிவித்தார். ட்ரோன் தொழில்நுட்பம் சிறந்த நிர்வாகத்திற்கும் அதன் மூலம் எளிதாக வாழ்வதற்கும் வகைசெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயத்துறைக்கு மட்டுமல்லாமல் பாதுகாப்பு, சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் இது இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் தமது சொந்த மாநிலமான இமாச்சலப்பிரதேசத்தில் ட்ரோன்கள் விவசாய இடுபொருட்களை பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சேர்த்ததை சுட்டிக்காட்டினார். ஹரியானா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ட்ரோன்கள் மூலம் தம் மீது ரோஜா இதழ்களை தூவியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

 ட்ரோன் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் 2021-ம் ஆண்டு மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக கொள்கை வகுத்ததையும், உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை செயல்படுத்தியதையும், 12 அமைச்சகங்கள் இந்த இலக்கை எட்டுவதற்கு அமர்த்தப்பட்டிருப்பதையும், நவீன  ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் 3 அம்ச அணுகுமுறை கொண்டு வரப்பட்டிருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ட்ரோன் பைலைட்டுகள் வேலைவாய்ப்பின் மூலம் நல்ல ஊதியம் ஈட்டும் வாய்ப்பு இருப்பதால், இவர்களது பணிமூலம் விவசாயத்துறையில் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் கோடி அளவுக்கு 4 மடங்கு சேமிக்க முடியும் என்றும் அவர் கூறினார். சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுப்பதற்கும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படும் என்றும் அவர் கூறினார். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்று கூறிய அமைச்சர், இதன் மூலம் திறன் வாய்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்வதையும் தடுக்க முடியும் என்று கூறினார். இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதுடன், நாட்டையும் முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல முயற்சிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த 25 ஆண்டுகளில் இளைஞர்கள் தங்களது தொழிலை தேர்ந்தெடுத்து நாட்டை முன்னேற்ற உதவ வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

ட்ரோன் தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறிய அமைச்சர், இந்தியாவை உலகின் ட்ரோன் மையமாக உருவாக்கும் மத்திய அரசின் முயற்சியில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாட்டைப் பாதுகாக்கும் வீரர்கள், நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளுடன் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான விஞ்ஞானமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

அடல்பிகாரி வாஜ்பாய் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தகவல் தொழில்நுட்ப முன்முயற்சியால் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்று அவர் கூறினார். தற்போது திறமைவாய்ந்த இளைஞர்களின் சக்தி இந்தியாவில் உள்ளது என்றும் இதன் மூலம் இந்தியா உலகிலேயே பெரும் சக்தியாக உருவெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்-கள் ட்ரோன் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது என்று கூறிய அவர், இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரித்து லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்காக உருவாக்கும் என்று தெரிவித்தார்.

பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து நவீன ட்ரோன் தொழில்நுட்பச் சூழல், அமிர்த காலத்தில் தன்னிறைவு கொண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார். இளைஞர்களுக்கு இந்தத் துறையில் திறன் பயிற்சி அளிப்பதில் முதலீடு செய்ய மத்திய அரசு தொடர்ந்து முனைப்புக் காட்டி வருவதாகக் கூறிய அமைச்சர், உலகிலேயே ட்ரோன் தொழில்நுட்ப மையமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது எனவும் தெரிவித்தார்.

**************

AP/PKV/AG/IDS

 



(Release ID: 1881172) Visitor Counter : 591