குடியரசுத் தலைவர் செயலகம்
2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு வழங்கினார்
Posted On:
03 DEC 2022 2:16PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று (டிசம்பர் 3, 2022) நடைபெற்ற விழாவில், 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான சிறந்த மாற்றுத்திறனாளி தேசிய விருதுகளை வழங்கினார்.
விழாவில் உரையாற்றிய அவர், ஐ.நா வின் புள்ளிவிவரங்கள்படி, உலகில் 1 பில்லியன் (100 கோடி) பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர் என்றார். அதாவது, நம்மில் 8ல் ஒருவர் ஏதாவது ஒருவகையில் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார் என்று கூறினார். இந்தியாவின் மக்கள்தொகையில், மொத்தம் 2 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதால், அவர்கள் யாரையும் சார்ந்திராமல், கவுரமாக வாழும் சூழலை உறுதிசெய்ய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல், சிறந்த கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமாகச் செயல்படுதல், சமமான வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமை என்றும் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் பொதுஅறிவை வளர்த்துக்கொள்வதற்கும், அறிவாற்றலால் சாதனை படைப்பதற்கும், இந்தியாவின் கலாச்சாரமோ, பண்பாடோ தடையாக இருக்கக்கூடாது என குறிப்பிட்ட அவர், மாற்றுத்திறனாளிகள் தெய்வீகக் குணங்களை வரமாகப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். துணிவு, திறமை, திட்டமிடல் மூலம் தங்கள் இலக்கை எட்டி சாதனை படைத்த எண்ணிலா மாற்றுத்திறனாளி சகோதர-சகோதரிகளை உதாரணமாகக் கூற முடியும் என்ற திரௌபதி முர்மு, அவர்கள் ஒவ்வொரு துறையிலும், சாதிக்க உகந்த சூழலையும், போதுமான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தனிநபர் அனைவரும் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த அவர், மாற்றுத்திறனாளி குழந்தைகளும் தரமானக் கல்வியைப் பெறுவதில், சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020 வலியுறுத்துவதையும் சுட்டிக்காட்டினார்.
தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலமே மாற்றுத்திறனாளிகளை அதிகாரமிக்கவர்களாக, தற்சார்பு பெற்றவர்களாக மாற்ற முடியும் என்றும், அவர்கள் மற்ற நபர்களைவிட, அசாத்தியத் திறமை கொண்டவர்களாகத் திகழ்வதாகவும் திரௌபதி முர்மு கூறினார்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், மாற்றுத்திறனாளிகள் துறையும் இணைந்து, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில், தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு, ஆண்டுதோறும் மாற்றுதிறனாளி விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டவர்களுக்கும் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
******
AP/ES/DL
(Release ID: 1880659)
Visitor Counter : 260