பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அருணாச்சலப்பிரதேசத்தில் தோன்யி போலோ விமான நிலைய திறப்பு விழா மற்றும் இதர வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 19 NOV 2022 2:47PM by PIB Chennai

ஜெய்ஹிந்த்!

ஜெய்ஹிந்த்!

பாரத் மாதாகி ஜே!

பாரத் மாதாகி ஜே!

அருணாச்சலப்பிரதேச ஆளுநர் திரு பி டி மிஸ்ரா அவர்களே, இளம் முதலமைச்சர் திரு  பெமா காண்டு அவர்களே, எனது அமைச்சரவை தோழர் திரு கிரண் ரிஜிஜூ அவர்களே, துணை முதலமைச்சர்  திரு சோனா மெய்ன் அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, மாநிலத்தின் சகோதரிகளே, சகோதரர்களே அனைவருக்கும் வணக்கம்!

சகோதர, சகோதரிகளே!

அருணாச்சலப் பிரதேச மக்கள் தங்கள் மாநிலத்தின் வளர்ச்சியில் காட்டும் அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. மாநில மக்கள் மகிழ்ச்சியான, ஒழுக்கமான பண்புகளை கொண்டுள்ளனர். அடிக்கல் நாட்டும் திட்டங்களை நானே நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பாரம்பரியத்தை நடத்திக் காட்டி வருகிறேன். மாறுபட்ட பணி கலாச்சாரமே இதற்கு காரணம். விமான நிலையம் அடிக்கல் நாட்டப்பட்ட போது, இது ஒரு தேர்தல் நேர தந்திரம் என்று விமர்சித்தவர்களுக்கு இந்த விமான நிலையம் திறப்பு மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் விமர்சகர்கள் புதிய சிந்தனையுடன் எதையும் அணுக வேண்டும், மாநிலத்தின் வளர்ச்சியை அரசியல் ஆதாயங்களைக் கொண்டு பார்ப்பதை நிறுத்த வேண்டும். மாநிலத்தில் இப்போது தேர்தல் நடக்கவில்லை. மாநிலத்தில் எதிர்காலத் தேர்தல் எதுவும் இல்லை. மாநிலத்தின் வளர்ச்சியே அரசின் முன்னுரிமை. நான் சூரியன் உதிக்கும் மாநிலத்தில் இன்றைய நாளைத் தொடங்குகிறேன், இந்தியாவில் சூரியன் மறையும் போது டாமனில் இருப்பேன், இடையில் காசிக்கும் செல்கிறேன்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் வடகிழக்கு பிராந்தியம் புறக்கணிக்கப்பட்டு வந்த்து. அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசுதான் இப்பகுதியில் கவனம் செலுத்தி வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது. பின்னர், அந்த வேகம் தடைபட்டது, ஆனால் 2014-க்குப் பிறகு, வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கியது. முன்பு, தொலைதூர எல்லை கிராமங்கள் கடைசி கிராமமாக கருதப்பட்டன. ஆனால், எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாகக் கருதி எங்கள் அரசு செயல்பட்டது. இது வடகிழக்கின் வளர்ச்சியை அரசாங்கத்தின் முன்னுரிமையாக மாற்றுவதற்கு வழிவகுத்துள்ளது. சுற்றுலா, வர்த்தகம், தொலைத்தொடர்பு, ஜவுளி என எந்த துறையாக இருந்தாலும் வடகிழக்கு தற்போது முதலிடம் பெறுகிறது. ட்ரோன் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து மூலம் விவசாய உற்பத்தியை எளிதாக்கி ஊக்குவிக்கும் கிரிஷி உடான் திட்டம், விமான நிலைய இணைப்பு, துறைமுக இணைப்பு என எதுவாக இருந்தாலும், வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இந்தியாவின் மிக நீளமான பாலம், மிக நீளமான ரயில் பாலம், ரயில் பாதை இணைப்பு, நெடுஞ்சாலைகளின் சாதனை கட்டுமானம் ஆகியவை உதாரணங்கள். இது எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளின் புதிய சகாப்தம். இந்தியாவின் புதிய அணுகுமுறைக்கு இன்றைய நிகழ்ச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

 தோன்யி போலோ விமான நிலையம் அருணாச்சலப் பிரதேசத்தின் நான்காவது செயல்பாட்டு விமான நிலையமாக இருக்கும். இதன் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 1947 முதல் 2014 வரை வடகிழக்கு பகுதியில் 9 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. கடந்த எட்டு வருடங்களில் மட்டும் இப்பகுதியில் 7 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள விமான நிலையங்களின் விரைவான வளர்ச்சி, வடகிழக்கில் இணைப்பை மேம்படுத்துவதில் பிரதமரின் சிறப்பு முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. வடகிழக்கு இந்தியாவை இணைக்கும் விமானங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. "தோன்யி போலோ விமான நிலையம் அருணாச்சல பிரதேசத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு சாட்சியாக மாறி வருகிறது. ‘தோன்யி’ என்றால் சூரியன் என்றும், ‘போலோ’ என்றால் சந்திரன். சூரியன் மற்றும் சந்திரனின் ஒளியைப் போல மாநிலத்தின் வளர்ச்சி உள்ளது. ஏழைகளின் வளர்ச்சியைப் போலவே விமான நிலையத்தின் வளர்ச்சியும் முக்கியமானது.

நண்பர்களே!

 தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு அருணாச்சலப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு கண்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் இயற்கை அழகு, சுற்றுலாவுக்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 85 சதவீத கிராமங்கள் பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. புதிய விமான நிலைய உள்கட்டமைப்பு, மேம்பாட்டுடன் சரக்கு சேவைத் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கும். இதன் விளைவாக, மாநில விவசாயிகள் இப்போது தங்கள் விளைபொருட்களை பெரிய சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்க முடியும். மாநிலத்தில் பிரதமர் கிசான் நிதியின் பலனை விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர்.

அருணாச்சலப் பிரதேச மக்கள் மூங்கில் அறுவடை செய்வதைத் தடை செய்த காலனித்துவச் சட்டத்தை ரத்து செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. மூங்கில் மாநிலத்தின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். அதை சாகுபடி செய்து, இந்தியாவில் மட்டுல்லாமல், உலகம் முழுவதும் மூங்கில் பொருட்களை ஏற்றுமதி செய்ய இப்பகுதி மக்களுக்கு அரசின் நடவடிக்கை உதவுகிறது. இப்போது நீங்கள் மற்ற பயிர்களைப் போலவே மூங்கில் பயிரிடலாம், அறுவடை செய்யலாம், விற்கலாம்.

சகோதர, சகோதரிகளே!

 ஏழைகள் அருமையான வாழ்க்கையை நடத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமை. மலையகப் பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதாரம் வழங்குவதில் முந்தைய அரசுகள் மெத்தனம் காட்டிவந்தன. தற்போதைய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. பிரதமரின் வீட்டு வசதி திட்டம், ஏக்லவ்யா மாதிரி பள்ளிகள், அருணாச்சலப் பிரதேச ஸ்டார்ட்அப் கொள்கை ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளன. 2014 இல் தொடங்கப்பட்ட அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் சௌபாக்யா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக பல கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது.

மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும், வீட்டுக்கும் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பணி முறையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எல்லைக் கிராமத் திட்டத்தின் கீழ் அனைத்து எல்லைக் கிராமங்களையும் மேம்படுத்துவதற்காக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இது சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதுடன், பிராந்தியத்தில் இடம்பெயர்ந்து செல்வதைக் குறைக்கும். அனைவரது முயற்சியுடன் இணைந்த மாநிலத்தின் இரட்டை எந்திர அரசு அருணாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது.

நன்றி!

***


(Release ID: 1877251)

Sri/PKV/AG/RR



(Release ID: 1878170) Visitor Counter : 141