பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான 'பயங்கரவாதத்திற்கு நிதி வழங்க கூடாது' என்ற 3-வது அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார்

“ஒரு தாக்குதலைக் கூட மிக அதிகமானதாக தான் கருதுகிறோம். ஒரு உயிரை இழந்தால்கூட அதை அதிகமானதாகத்தான் கருதுகிறோம். எனவே, தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் வரை ஓய மாட்டோம்."
"நல்ல பயங்கரவாதம் மற்றும் மோசமான பயங்கரவாதம் என எதுவும் இல்லை. பயங்கரவாதம் என்பது மனித நேயம், சுதந்திரம் மற்றும் நாகரீகத்தின் மீதான தாக்குதல். அதற்கு எல்லையே கிடையாது”
"ஒரு சீரான, ஒருங்கிணைந்த மற்றும் சமரசம் அற்ற அணுகுமுறையால் மட்டுமே பயங்கரவாதத்தை வீழ்த்த முடியும்"
"பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது தடைகள் விதிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்"
"புதிய நிதி தொழில்நுட்பங்கள் பற்றி ஒரே மாதிரியான புரிதல் தேவை"
“தீவிரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் எந்த நாட்டிலும் இடமில்லை என்ற நிலை ஏற்பட வேண்டும்"

Posted On: 18 NOV 2022 11:09AM by PIB Chennai

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் எந்தவிதமான தெளிவற்ற தன்மையையும் தவிர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பயங்கரவாதத்தை வெளியுறவுக் கொள்கையாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கு எதிராகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இன்று புதுதில்லியில் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான, 'பயங்கரவாதத்திற்கு நிதி வழங்க கூடாது' (NMFT) என்ற அமைச்சர்கள் நிலையிலான மூன்றாவது மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

இந்த மாநாட்டிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசிய பிரதமர், இந்தியாவில் நடைபெறும் இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். உலகம் தீவிரமாகக் கவனிக்கும் முன்பே பயங்கரவாதத்தின் இருண்ட முகத்தை இந்திய தேசம் கண்டதை நினைவு கூர்ந்தார். பத்தாண்டுகளாக, பயங்கரவாதம், பல்வேறு பெயர்களிலும் பல வடிவங்களிலும், இந்தியாவை காயப்படுத்த முயன்றது என்று பிரதமர் கூறினார். பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருந்தாலும், பயங்கரவாதத்தை இந்தியா துணிச்சலாக எதிர்த்துப் போராடியது என்றும் அவர் கூறினார். பயங்கரவாதத்தை முறியடிப்பதில் உறுதியாக இருக்கும் இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் மாநாட்டுக்கு வந்துள்ள பிரதிநிதிகள் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு இது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். “ஒரு தாக்குதலை கூட மிக அதிகமானதாகத்தான் நாங்கள் கருதுகிறோம் என்றும், இழந்த ஒரு உயிரை கூட அதிகமானதாகத்தான் பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார். எனவே, பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர் பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் பாதிக்கும் என்பதால் இந்த மாநாட்டை அமைச்சர்கள் நிலையிலான மாநாடாக மட்டும் கருதக் கூடாது என்று கூறினார். பயங்கரவாதத்தின் நீண்டகால தாக்கம் ஏழைகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தின் மீது கடுமையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். சுற்றுலாவாக இருந்தாலும் சரி, வர்த்தகமாக இருந்தாலும் சரி தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்று அவர் கூறினார். பயங்கரவாதத்தின் விளைவாக மக்களின் வாழ்வாதாரம் பறிபோவதாகவும் அவர் குறிப்பிட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதன் வேரை தாக்கி அழிப்பது மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.

பயங்காரவாதத்தை கையாள்வதில் எந்த தெளிவற்ற தன்மையும் இருக்கக் கூடாது என்று பிரதமர் எச்சரித்தார். பயங்கரவாதம் பற்றி தவறான புரிதல்கள் குறித்துப் பேசிய பிரதமர், வெவ்வேறு தாக்குதல்களுக்கான எதிர்வினையின் தீவிரம் அதன் இடத்தைப் பொறுத்து மாறுபடாது என்று கூறினார். அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுமே சமமான எதிர் நடவடிக்கைகளுக்கு உரியவை என்று அவர் தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் சில நேரங்களில் பயங்கரவாதத்துக்கு ஆதரவான கருத்துகள் மறைமுகமாக முன்வைக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். உலகளாவிய அச்சுறுத்தலை கையாளும்போது தெளிவற்ற அணுகுமுறைக்கு இடமே இல்லை என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். பயங்கரவாதத்தில் நல்ல பயங்கரவாதம், மோசமான பயங்கரவாதம் என பாகுபாடு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதம் என்பது மனிதநேயம், சுதந்திரம் மற்றும் நாகரீகத்தின் மீதான தாக்குதல் என்று அவர் எடுத்துரைத்தார். அதற்கு எல்லைகள் எதுவும் கிடையாது என்று அவர் தெரிவித்தார். சீரான, ஒருங்கிணைந்த சமரச அணுகுமுறையால் மட்டுமே பயங்கரவாதத்தை வீழ்த்த முடியும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட நபராக உள்ள பயங்கரவாதியை எதிர்த்து போரிடுவதற்கும், பயங்கரவாதத்தை  எதிர்த்து போரிடுவதற்கும்  உள்ள வேறுபாட்டை பிரதமர் எடுத்துரைத்தார்.  ஆயுதங்கள் மற்றும் உடனடி நடவடிக்கைகள் மூலம் தனிப்பட்ட பயங்கரவாதியை வீழ்த்த முடியும் என்றும், ஆனால், இந்த உடனடி செயல்பாடுகள் பெரிய யுக்தி ஏதுமின்றி அமையும் என்பதால் பயங்கரவாதத்துக்கான நிதியை அது தடுக்காது என்றும் பெரிய பலனின்றி அது முடியும் என்றும் தெரிவித்தார். பயங்கரவாதி என்பவர் தனிநபர் என்றும், பயங்கரவாதம் என்பது ஒரு வலைப்பின்னல் கட்டமைப்பு என்றும் அவர் கூறினார்.  தாக்குதல் என்பது தற்காப்புக்கான சிறந்த வடிவம் என்று கூறிய அவர், பயங்கரவாதத்தை வேரோடு களைய பெரிய, செயலூக்கம் மிக்க அமைப்பு ரீதியான பதில் நடவடிக்கைகள் தேவை என்று தெரிவித்தார். நாம் பயங்கரவாதம் தொடர்பாக கண்காணிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கான ஆதரவு கட்டமைப்பை உடைத்து நிதி வழங்கப்படுவதை தடுத்து நமது மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

பயங்கரவாதத்திற்கு அரசியல், சித்தாந்த மற்றும் நிதி ஆதரவுக்கான முக்கிய ஆதாரமாக சில அரசு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சில நாடுகள் தீவிரவாதிகளை தங்களது வெளியுறவுக்கொள்கையின் ஒருபகுதியாகவே வைத்துள்ளன என்று பிரதமர் விமர்சித்தார். பயங்கரவாதிகளை கொண்டு பிற நாடுகளுக்கு எதிராக நடத்தப்படும் போர்கள் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்து பயங்கரவாதிகளுக்கு அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமைப்புகளும், தனிநபர்களும் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். இதுபோன்ற விவகாரங்களில் எவ்விதமான கேள்விகளுக்கோ, சந்தேகங்களுக்கோ இடமளிக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தின் அனைத்து வெளிப்படை மற்றும் மறைமுக ஆதரவுக்கு எதிராக உலகம் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

பயங்கரவாத நிதியுதவியின் மற்றொரு ஆதாரமாக திட்டமிட்ட குற்றங்கள் திகழ்கின்றன என்று அவர் கூறினார். குற்றங்களை செய்யும் கும்பல்களுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் மிக முக்கியமானவை என்று அவர் தெரிவித்தார். சில நேரங்களில் பணமோசடி, நிதி தொடர்பான குற்றங்கள் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதற்காக நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று கூறிய அவர், இவற்றை எதிர்த்து போராட உலகளாவிய ஒத்துழைப்புத் தேவை என்றார்.

சிக்கலான சூழலை எடுத்துரைத்த பிரதமர், ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிதி நடவடிக்கைகள் செயல்திட்டக் குழு, நிதி புலனாய்வு அமைப்புகள், எக்மாண்ட் குழு போன்றவை சட்டவிரோத பணப்புழக்கத்தை கண்டறிதல், தடுத்தல் மற்றும் வழக்கு தொடர்தல் போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமைப்புகள் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவியுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் பயங்கரவாத்திற்கு நிதி அளிப்பதன் அபாயங்களை புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் வாயிலாக பயங்கரவாதம் வளர்ந்து வருவது குறித்து பேசிய பிரதமர், புதிய வகையிலான தொழில்நுட்பங்கள் தீவிரவாதத்திற்கு நிதி அளித்தல் மற்றும் ஆள்சேர்ப்புக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். டார்க்நெட் எனப்படும் பிரத்யேக இணையம் மற்றும் தனிப்பட்ட கரன்சிகள் மூலம் பல சவால்கள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். புதிய நிதி தொழில்நுட்பங்கள் குறித்து ஒரே சீரான புரிதல் தேவை என்று அவர் தெரிவித்தார். இந்த முயற்சிகளில் தனியார் துறையை ஈடுபடுத்த வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார். பயங்கரவாதத்தை கண்காணித்து, கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அதேநேரத்தில், தொழில்நுட்பத்தை அச்சுறுத்தல் அம்சமாக மாற்றி விடக் கூடாது என்று அவர் எச்சரித்தார். 

நேரடி மற்றும் மெய்நிகர் ஒத்துழைப்புகள் அவசியம் என்று வலியுறுத்திய பிரதமர், இணையதள பயங்கரவாதம் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார். சில அமைப்புகள் தொலைதூரப் பகுதிகளிலுள்ள தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க இணையதளங்களை பயன்படுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தகவல் தொடர்பு, பயணம், சரக்குப் போக்குவரத்து என ஒவ்வொரு நாட்டிலும் பலவிதமான தொடர்பு சங்கிலிகள் உள்ளதை அவர் எடுத்துரைத்தார். ஒவ்வொரு நாடும் இந்த சங்கிலி பகுதிகளில் தாங்கள் அணுகக் கூடிய எல்லைக்குள் தீவிரவாதத்திற்கு எதிராக செயலாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பல்வேறு நாடுகளில் உள்ள சட்ட கோட்பாடுகள், நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடுகளை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.  அரசுகளுக்கிடையே ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் புரிதல் மூலம் இதை தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். கூட்டு நடவடிக்கைகள், உளவுத்துறை ஒருங்கிணைப்பு, குற்றம் இழைத்தவர்களை நாடு கடத்துதல் போன்றவை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உதவுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத பிரச்சினைகளை கூட்டாக எதிர்கொண்டு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். தீவிரவாதத்தை ஆதரிக்கும் எந்த நபருக்கும் எந்த நாட்டிலும் இடமில்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா அண்மையில் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் பிரதமர் விளக்கினார். பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பரிமாணங்கள் குறித்து நடைபெற்ற பல மாநாடுகள் தொடர்பாகவும் அவர் எடுத்துரைத்தார்.   புதுதில்லியில் நடைபெற்ற இன்டர்போல் மாநாடு, மும்பையில் நடைபெற்ற ஐநா தீவிரவாத எதிர்ப்புக் குழுவின் சிறப்பு அமர்வு போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது நடைபெற்று வரும் ”பயங்கரவாதத்துக்கு நிதி வழங்க கூடாது” என்ற இந்த மாநாட்டின் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதற்கு எதிரான உலகளாவிய உத்வேகத்தை வலுப்படுத்த இந்தியா உதவுவதாகவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, உள்துறை இணையமைச்சர் திரு.நித்யானந்த ராய், உள்துறை செயலாளர் திரு.அஜய்குமார் பல்லா, தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் திரு.தினகர் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி:

நவம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு நாள் மாநாட்டில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான நிதியுதவி மற்றும் அதிகரிக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். தற்போதைய சர்வதேச செயல்திறனைப் பற்றி விவாதிக்க, பங்கேற்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்கும். இந்த மாநாடு முந்தைய இரண்டு மாநாடுகளின் மூலம் (ஏப்ரல் 2018-ல் பாரிஸில் நடந்த மாநாடு மற்றும் நவம்பர் 2019- ல் மெல்போர்னில் நடந்த மாநாடு) பெற்ற பலன்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் நடத்தப்படும். பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதை தடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட அதிகார வரம்புப் பகுதிகளை அணுகுவதற்கான உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலான செயல்பாடுகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும். அமைச்சர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழு பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 450 பிரதிநிதிகள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.

இந்த மாநாட்டின் போது, 'பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய போக்குகள்', 'பயங்கரவாதத்திற்கான முறையான மற்றும் முறைசாரா நிதிகளின் பயன்பாடு', 'வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதி' ‘பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை தடுப்பது தொடர்பான சவால்களில் சர்வதேச ஒத்துழைப்பு’ ஆகிய நான்கு அமர்வுகள் நடைபெறவுள்ளன.

**************

MSV/PLM/KG/KRS

(Release ID: 1876923)



(Release ID: 1877029) Visitor Counter : 608