பிரதமர் அலுவலகம்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் ஆகியவற்றை பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
Posted On:
11 NOV 2022 12:20PM by PIB Chennai
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் ஆகியவற்றை பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.11.2022) கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
க்ரந்திவீரா சங்கோலி ராயண்ணா (கேஎஸ்ஆர்) ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கும் நடைமேடை – 7-க்கு வருகை தந்த பிரதமர், சென்னை –மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை விளக்கு சமிக்ஞையை அளித்தார். இது நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயிலாகவும், தென்னிந்தியாவிற்கு இவ்வகையில் முதலாவது ரயிலாகவும் இருக்கும். இந்த ரயில் தொழில்துறை மையமான சென்னை, தொழில்நுட்ப மற்றும் புத்தொழில் மையமான பெங்களூரு, சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற மைசூரு நகரம் ஆகியவற்றுக்கு இடையே போக்குவரத்துத் தொடர்பை அதிகரிக்கும்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“சென்னை – மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போக்குவரத்துத் தொடர்பையும் வர்த்தக நடவடிக்கைகளையும் அதிகரிக்கும். மேலும், இது வாழ்க்கையை எளிதாக்குவதையும், விரிவுபடுத்தும். பெங்களூருவிலிருந்து இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”.
இதைத் தொடர்ந்து பாரத் கௌரவ் காசி யாத்திரை ரயிலுக்கு பச்சை விளக்கு சமிக்ஞையை அளித்து கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நடைமேடை-8-க்கு வருகை தந்தார். பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் இந்த ரயில் போக்குவரத்தை மேற்கொள்ளும் முதலாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது. கர்நாடகாவிலிருந்து காசிக்கு யாத்ரீகர்களை அனுப்பி வைக்க கர்நாடக அரசும், மத்திய ரயில்வே அமைச்சகமும் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. யாத்ரீகர்கள் தங்குவதற்கு வசதி செய்து தரப்படுவதோடு காசி, அயோத்தியா, பிரயாக்ராஜ் ஆகியவற்றுக்கு பயணம் செய்வதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
பிரதமர் ட்வி.ட்டரில் கூறியிருப்பதாவது:
“பாரத் கௌரவ் காசி யாத்திரை ரயில் பயணத்தை தொடங்கும் முதலாவது மாநிலமாக இருப்பதற்காக கர்நாடகாவுக்கு நான் வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ரயில், காசியையும், கர்நாடகாவையும் நெருக்கமாக கொண்டு வருகிறது. யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் இதன் மூலம் காசி, அயோத்தியா, பிரயாக்ராஜூக்கு எளிதாக பயணம் செய்ய முடியும்”.
பிரதமருடன், கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், மத்திய அமைச்சர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ், திரு பிரஹ்லாத் ஜோஷி ஆகியோர் இருந்தனர்.
பின்னணி
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 என்பது விமானம் போன்ற பயண அனுபவங்களை தரக்கூடியது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரயில் வண்டிகள் மோதுவதைத் தடுக்கும் அமைப்பான கவச் உட்பட நவீன பாதுகாப்பு அம்சங்களை இது கொண்டுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.0 என்பது வெறும் 52 நொடிகளில் மணிக்கு 0-விலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை அடைவது மணிக்கு அதிகபட்சம் 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வது உட்பட மேம்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்களும் கொண்டிருக்கும். ஏற்கெனவே உள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எடை 430 டன் என்பதோடு ஒப்பிடுகையில், மேம்படுத்தப்பட்ட ரயிலின் எடை 392 டன்னாக இருக்கும். இதில் தேவைப்படும் போது பயன்படுத்தும் வைஃபை வசதி உள்ளது. அதே போல் முந்தைய வந்தே பாரத் ரயில் வண்டியில் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் திரையின் அளவு 24 அங்குலம் என்பதோடு ஒப்பிடுகையில் தற்போதைய ரயில் ஒவ்வொரு பெட்டியிலும் 32 அங்குலத் திரை பொருத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக குளிர்சாதன பெட்டிகள் அதிகபட்ச அளவாக 15 சதவீத எரிசக்தித் திறனை பெற்றுள்ளன.
இழுவை இயந்திரத்தில் மாசற்ற தூய்மையான காற்று குளிர்விப்பான் வசதி இருப்பதால் பயணம் மிகவும் வசதியாக இருக்கும். முன்பு உயர்நிலை வகுப்புக்கான பெட்டிகளில் மட்டுமே இருந்த சாய்ந்து கொள்ளும் இருக்கை வசதி இப்போது அனைத்து வகுப்புகளிலும் கிடைக்கும். உயர்நிலை வகுப்புக்கான பெட்டிகள் 180 டிகிரி சுழலும் இருக்கைகளை கொண்டுள்ளன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் புதிய வடிவமைப்பில், காற்று தூய்மைக்காக ஆர்எம்பியூ சாதனம் பொறுத்தப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள மத்திய அறிவியல் சாதனங்கள் அமைப்பின் பரிந்துரைப்படி இது வடிவமைக்கப்பட்டு இருமுனைகளிலும் நிறுவப்பட்டுள்ளன. இது காற்றை வடிகட்டி தூய்மை செய்வதால் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சில் கிருமிகள், வைரஸ் போன்றவை இருக்காது.
பாரத் கௌரவ் ரயில்கள்
2021 நவம்பர் மாதத்தில் இந்திய ரயில்வே பாரத் கௌரவ் ரயில் இயக்கத்தை தொடங்கியது. இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் பிரமாண்டமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இந்திய மக்களுக்கும், உலக மக்களுக்கும் காண்பிப்பது இந்த ரயில் மூலமான பயணத்தின் மையப் பொருளாகும். இத்தகைய ரயில்கள் இயக்கத்தின் நோக்கம் இந்தியாவில் பெருமளவில் உள்ள சுற்றுலா வாய்ப்பை பயன்படுத்தி சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவதாகும்.
**************
AP/SMB/KPG/IDS
(Release ID: 1875213)
Visitor Counter : 522
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam