பிரதமர் அலுவலகம்

புதுதில்லியின் கல்காஜியில் குடிசை வாழ் மக்களின் மறுவாழ்விற்காக புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 02 NOV 2022 6:51PM by PIB Chennai

நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை நண்பர் திரு ஹர்தீப் சிங் புரி அவர்களே, இணை அமைச்சர்கள் திரு கௌசல் கிஷோர் மற்றும் திருமதி மீனாட்சி லேகி அவர்களே, தில்லி துணைநிலை ஆளுநர் திரு விநய் குமார் சக்சேனா அவர்களே, தில்லி நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே!

தில்லியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கும், நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கும் இன்று ஓர் முக்கிய நாள். பல ஆண்டுகளாக தில்லியின் குடிசை பகுதிகளில் வசித்து வந்த குடும்பங்களின் வாழ்வில் புதிய அத்தியாயத்தை உருவாக்குவது போல இந்த முயற்சி அமைந்துள்ளது. ஏழை சகோதர, சகோதரிகளின் வியர்வை மற்றும் கடின உழைப்பு தான் தில்லி போன்ற பெரு நகரங்கள் முன்னேறுவதற்கும், உச்சத்தை அடைவதற்கும் அடித்தளமாக உள்ளன. இருந்த போதும் நகரின் ஒரு சில பகுதிகள் மிக செழிப்பாகவும், மறுபுறம் அதே நகரின் பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளுக்கும் கூட போராடி வருகின்றனர். எனவே விடுதலையின் அமிர்த காலத்தில் “அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சிகளுடன்’ என்ற தாரக மந்திரத்துடன் வளர்ச்சிக்காக நாடு பாடுபடுகிறது.

 

நண்பர்களே,

இன்று தில்லியில் வசிக்கும் ஏழை மக்களும் அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைகிறார்கள். தில்லியில் உள்ள ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகளும், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களும் பீம்-யு.பி.ஐ வசதியைப் பெற்றுள்ளனர். தங்களது செல்பேசியிலிருந்து நேரடியாக பணத்தைப் பெற்று, அதன் மூலமே கட்டணங்களையும் செலுத்துகிறார்கள். இது அவர்களுக்கு மிகப்பெரிய நிதி பாதுகாப்பாகும். பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தினால் தில்லியில் உள்ள சுமார் 50,000 சாலையோர வியாபாரிகள் பயனடைந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தவிர முத்ரா திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ரூ. 30000 கோடி, உத்தரவாதம் இல்லாமல் வழங்கப்பட்டிருப்பது, இங்கு வசிக்கும் சிறு தொழில்முனைவோருக்கு பேருதவியாக உள்ளது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தினால் கொரோனா பெருந்தொற்றின் போது தில்லியின் ஏழை மக்கள் பெரிதும் பயனடைந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தில்லியில் உள்ள ஏழை மக்களுக்காக இலவச ரேஷன் பொருட்களை அரசு வழங்கி வருகிறது. தில்லியில் மட்டும் இந்த திட்டத்திற்காக சுமார் ரூ. 2500 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளது. 40 லட்சத்திற்கும் அதிகமான ஏழைகளுக்கு காப்பீட்டு திட்டத்தையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. தில்லி மற்றும் நாட்டின் வளர்ச்சியில் நீங்கள் தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்குவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

************



(Release ID: 1873898) Visitor Counter : 108