பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

“குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தின் தராடில் ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்”

“மோர்பியில் ஏற்பட்ட சோக சம்பவத்தில் பலர் உயிரிழந்ததற்கு ஒட்டுமொத்த தேசமும் வருந்துகிறது”
“வளர்ச்சியின் வரலாற்றில் பனஸ்கந்தா இன்று தனது சொந்த அத்தியாயத்தை எழுதுகிறது”
“ஒவ்வொரு பணியும் தேசத்தின், குஜராத்தின் பெருமையை அதிகரிக்கிறது, இது இரட்டை எஞ்சின் அரசின் உறுதிப்பாடாகும்”

Posted On: 31 OCT 2022 5:47PM by PIB Chennai

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள  தராடில் ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (31.10.2022) அடிக்கல் நாட்டினார்.

மோர்பியில் நேற்று ஏற்பட்ட சோக சம்பவத்தில் பலர் உயிரிழந்ததையடுத்து ஒட்டுமொத்த தேசமும் வருந்தத்தில் ஆழ்ந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த சோகமான தருணத்தில் பலியானவர்களின்  குடும்பங்களுக்கு ஆதரவாக நாம் அனைவரும் இருக்கிறோம். உதவிப் பணிகளில் முதலமைச்சரும், அவரது அமைச்சர்களும் முழு  மனதோடு ஈடுபடுகிறார்கள். “நேற்றிரவு கெவாடியாவிலிருந்து மோர்பிக்கு நேரடியாகச் சென்ற பூபேந்தரபாய் நிவாரணப் பணிகளின் பொறுப்பை ஏற்றார். நான் அவரோடும்  நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளோடும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். தேசிய பேரிடர் நிவாரணப்படை அணியினரும், ஊழியர்களும் அங்கு சென்றுள்ளனர். இந்த நிவாரண  பணியில் எந்த குறைபாடும் இருக்காது என அம்பாஜியின் பூமியிலிருந்து குஜராத் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யலாமா வேண்டாமா என ஊசலாட்டத்தில் தாம் இருந்ததாகவும் ஆனால், பனஸ்கந்தாவில் குடிநீர் விநியோகத் திட்டங்களின் முக்கியத்துவத்தையும் மக்களின் அன்பையும் அறிந்ததால் பெற்ற உணர்வு அளித்த தைரியத்தை அடுத்து, ரூ.8,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள இந்தத் திட்டங்களை தொடங்கிவைக்க முன்வந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் பனஸ்கந்தா உள்ளிட்ட 6 மாவட்டங்கள் பாசன வசதிகள் பெற உதவி செய்யும் என்பதை அவர் கோடிட்டுக் காட்டினார். கடந்த காலத்தில் இந்த மாநிலம் எதிர்கொண்ட சவாலான தருணங்களை நினைவு கூர்ந்த பிரதமர், எந்தவித துயரங்களையும் கையாளும் பலத்தை குஜராத் மக்களின் நிலையான உணர்வு வழங்குகிறது என்றார்.

இந்த பூமியின் சேவகனாக நான் மாறியதிலிருந்து எங்களின் அரசு பல்வேறு பகுதிகளின் பிரச்னைகளை அடையாளம் கண்டு  அவற்றுக்கு தீர்வு காண  அர்ப்பணிப்போடும், நேர்மையாகவும் பணியாற்றி வருகிறது. தண்ணீர் சேமிப்பில், கவனம் செலுத்தும் நாங்கள் தடுப்பணைகளைக் கட்டி, குளங்களை ஏற்படுத்துகிறோம் என்று திரு மோடி கூறினார்.

ஒரு பக்கம் பனஸ் பால்பண்ணையையும் மறுபக்கம் 100 மெகாவாட் சூரியமின்சக்தித் திட்டத்தையும் கொண்டிருப்பதால் இந்தப் பகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் என்ற இலக்கு பூர்த்தி செய்யப்படும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். சொட்டு நீர் பாசன, நுண்ணீர் பாசன தொழில்நுட்பங்கள், ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் பனஸ்கந்தா நோக்கி திருப்புவது மட்டுமின்றி  உலகளவிலான அங்கீகாரத்திற்கும் வழிவகுத்துள்ளது என்று பிரதமர் கூறினார். வளர்ச்சியின் வரலாற்றில் பனஸ்கந்தா இன்று தனது சொந்த அத்தியாயத்தை எழுதுகிறது என்று அவர் தெரிவித்தார்.

ஒருவருக்கு தண்ணீர் வழங்குவது புண்ணியச் செயலாக கருதப்படுகிறது. தண்ணீரை பெறுகின்றவர் அமிர்தத்தை பெற்றவராகிறார். அந்த அமிர்தம் ஒருவரை வாழவைக்கிறது. தண்ணீர் தந்தவருக்கு வணக்கம் தெரிவித்து வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார். இப்படித்தான் நமது வாழ்க்கையில் தண்ணீர் என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று பிரதமர் விவரித்தார். இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் பற்றியும் எடுத்துரைத்த அவர், வேளாண்மையிலும், கால்நடை பராமரிப்பிலும் உள்ள புதிய வாய்ப்புகளை உதாரணங்களுடன் கூறினார்.

ஒவ்வொரு பணியும் தேசத்தின், குஜராத்தின் பெருமையை அதிகரிக்கிறது,  இது இரட்டை எஞ்சின் அரசின் உறுதிப்பாடாகும். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்பதில்தான் நமது பலம் உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு பிரபாத்பாய் படேல், திரு பரத்சிங் தாபி, திரு தினேஷ்பாய் அனவைத்யா, குஜராத் அமைச்சர் திரு ருஷிகேஷ் படேல், திரு ஜித்துபாய் சவுத்ரி, க்ரித்சிங் வஹேலா, திரு கஜேந்திர சிங் பார்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

*************

(Release ID: 1872341)

SM/SMB/KPG/KRS

 


(Release ID: 1872452) Visitor Counter : 144