பிரதமர் அலுவலகம்

வதோதராவில் விமான உற்பத்தி ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை

Posted On: 30 OCT 2022 6:57PM by PIB Chennai

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, குஜராத் முதல்வர் திரு புபேந்திரபாய் பட்டேல் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு ராஜநாத் சிங் அவர்களே, திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அவர்களே, ஏர்பஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அவர்களே, பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

வணக்கம்!

உலகின் மிகப்பெரிய உற்பத்தி முனையமாக இந்தியாவை மாற்றுவதில் இன்று முக்கிய முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம். இன்று இந்தியா தனக்குரிய போர் விமானங்களைத் தயாரிக்கிறது. நீர் மூழ்கிக் கப்பல்களையும், டாங்கிகளையும் உற்பத்தி செய்கிறது. இது தவிர, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளும், தடுப்பூசிகளும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை இன்று காப்பாற்றி வருகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள், செல்பேசிகள், கார்கள் போன்றவை பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை வதோதராவில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டம் பெற்றுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு விமான துறையில் முதன்முறையாக இத்தகைய அபரிமிதமான முதலீடு செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் விமானம் நமது ராணுவத்திற்கு வலு சேர்ப்பதோடு விமான உற்பத்திக்கான புதிய சூழலியலையும் உருவாக்கும். விமானத்தின் சிறிய பாகங்களை இந்தியா ஏற்கனவே ஏற்றுமதி செய்து வந்த போதிலும், தற்போது ராணுவ போக்குவரத்து விமானங்கள் முதன்முறையாக நாட்டில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக நான் அறிகிறேன். எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான விண்ணப்பங்களும் பெறப்படும்.

நண்பர்களே,

இன்று நாம் சேவை துறையில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகிறோம். முதலீட்டுக்கு உகந்த கொள்கைகளை அரசு உருவாக்கி வருவதால் அந்நிய நேரடி முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில் 160க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. பொருளாதாரத்தின் 60 துறைகளையும், 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இந்த முதலீடுகள் சென்றடைந்துள்ளன. விமானப் போக்குவரத்துத் துறையில் மட்டுமே 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகள்தான் வருங்காலத்தில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மிகப்பெரிய தூண்களாக செயல்படவிருக்கின்றன.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள முதலீட்டு நம்பிக்கையை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழில்துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்தோடு நாம் முன்னேற வேண்டும்.

மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1872049

**************



(Release ID: 1872219) Visitor Counter : 159