இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தூய்மை இந்தியா 2022-ன் கீழ் இந்தியா முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கத்தை சாந்தினி சதுக்கத்திலிருந்து மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று தொடங்கி வைத்தார்
Posted On:
19 OCT 2022 2:39PM by PIB Chennai
தூய்மை இந்தியா 2022-ன் கீழ் இந்தியா முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கத்தை புதுதில்லியில் உள்ள சாந்தினி சதுக்கத்திலிருந்து மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தூய்மை உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இளைஞர் நலன், விளையாட்டுக்கள் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் மற்றும் அமைச்சகத்தின் இதர அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதேபோன்ற தூய்மை இயக்கங்கள் நாடுமுழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், கிராமங்களிலும் 2022 அக்டோபர் 19 அன்று மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு தாக்கூர், தூய்மை இந்தியா என்பது வெறும் நிகழ்ச்சியல்ல, சாமானிய மக்களின் உண்மையான கவலையையும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற அவர்களின் உறுதியையும் இது பிரதிபலிக்கிறது என்றார். மக்களின் பங்கேற்பே மக்களின் இயக்கம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி எப்போதும் வலியுறுத்தி கூறுவதை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர், எந்தவொரு இயக்கமும் இளைஞர்களின் பங்கேற்பு இல்லாமல் பூர்த்தி அடையாது என்றார். தூய்மை இந்தியா கனவு நிறைவேறாமல் புதிய இந்தியா கனவும், வளர்ச்சியடைந்த இந்தியா கனவும் நிறைவேறாது என்று அவர் மேலும் கூறினார்.
ஒருமாத காலத்தில் ஒருகோடி கிலோகிராம் கழிவுகளை சேகரிப்பது என இந்த இயக்கம் தொடங்கப்பட்டபோது, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 18 நாட்களில் 84 லட்சம் கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய நாட்களில் இலக்கு விஞ்சப்படும் என்று திரு தாக்கூர் கூறினார்.
ஒரு மாதத்திற்கு நாடுமுழுவதும் நடத்தப்படும் தூய்மை இந்தியா 2022 இயக்கம் அக்டோபர் 1 அன்று உத்தரப்பிரதேசத்தில் பிரயாக்ராஜில் திரு அனுராக் சிங் தாக்கூரால் தொடங்கப்பட்டது. நேரு யுவகேந்திரா சங்கதனில் இணைக்கப்பட்டுள்ள இளையோர் சங்கங்கள், நாட்டு நலப்பணித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள அமைப்புகள் மூலம் நாடுமுழுவதும் 742 மாவட்டங்களில் ஆறு லட்சம் கிராமங்களில் இந்த இயக்கம் நடைபெறுகிறது.
**************
(Release ID: 1869245)
Visitor Counter : 178