பிரதமர் அலுவலகம்

கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு பிரதமர் அக்டோபர் 21-ந் தேதி செல்கிறார்

Posted On: 18 OCT 2022 8:46PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி உத்தராகண்ட் மாநிலத்திற்கு அக்டோபர் 21-ந் தேதி அன்று செல்ல உள்ளார். அங்கு கேதார்நாத்தில் காலை 8.30 மணியளவில் கேதார்நாத் கோயிலில் தரிசனம் செய்து பூஜையில் ஈடுபட உள்ளார். 9 மணியளவில் கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். அதன் பிறகு ஆதிகுரு சங்கராச்சாரியா நினைவிடத்திற்கு செல்ல உள்ளார். காலை 9.25 மணியளவில் மந்தகினி மற்றும் சரஸ்வதி அஸ்தபத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார்.

அதன் பிறகு 11.30 மணியளவில் பத்ரிநாத் செல்லும் பிரதமர், பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்து பூஜையில் ஈடுபட உள்ளார். நண்பகல் 12 மணியளவில் அங்குள்ள ஆற்றங்கரையில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார். தொடர்ந்து 12.30 மணியளவில் மனா கிராமத்தில் சாலை மற்றும் ரோப் கார் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பின்னர் பிற்பகல் 2 மணியளவில் ஏரிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

கவுரிகுண்ட் முதல் கேதார்நாத் வரை 9.7 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட உள்ள ரோப் கார் மூலம் தற்போதுள்ள 6 முதல் 7 மணி நேரம் வரையிலான பயண நேரம் 30 நிமிடங்களாக குறையும். கோவிந்த்கட் முதல் ஹேம்குண்ட் சாகிப் வரை 12.4 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட உள்ள ரோப் கார் மூலம் இதுவரை 1 நாளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட பயண நேரம் இனி 45 நிமிடங்களாக குறையும்.

இந்த ரோப் கார் திட்டங்கள் சுமார் 2430 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தாக இருப்பதுடன் பாதுகாப்பான போக்குவரத்து முறையாகவும் அமையும்.

மனாவிலிருந்து மனா கணவாய் வரையும் மற்றும் ஜோஷிமத் முதல் மலாரி வரையிலான சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

**************

(Release ID: 1868972)

IR/Sri/RR/SHA

 



(Release ID: 1869111) Visitor Counter : 133