இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

காந்தி ஜெயந்தி அன்று உடல் தகுதி இந்தியா சுதந்திர ஓட்டம் 3.0 -ஐ திரு கிரண் ரிஜிஜும் திரு அனுராக் சிங் தாக்கூரும் தொடங்கி வைத்தனர்

Posted On: 02 OCT 2022 3:23PM by PIB Chennai

காந்தி ஜெயந்தி நாளான இன்று காலை புதுதில்லியில் உள்ள மேஜர் தியான்ந்த் தேசிய விளையாட்டு அரங்கில் உடல் தகுதி இந்தியா சுதந்திர ஓட்டம் 3.0  தொடங்கப்பட்டது.  2020ல் கொவிட் -19 பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது மத்திய அரசால் தொடங்கப்பட்ட தேசம் தழுவிய மிகப்பெரிய இயக்கங்களில்  ஒன்றாக இது இருந்தது.  இதன் மூன்றாவது கட்டத்தை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு  கிரண் ரிஜிஜும்  மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரும்  கூட்டாகத் தொடங்கிவைத்தனர்.  காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2 அன்று தொடங்கியுள்ள இந்த ஓட்டம் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 வரை தொடரும்.

 

முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் கோயல், விளையாட்டுக்கள் துறை செயலாளர் திருமதி சுஜாதா சதுர்வேதி, இந்திய விளையாட்டுக்கள் ஆணையத்தின் தலைமை இயக்குனர் திரு சன்தீப்  பிரதான்,  உடல் தகுதி  இந்தியாவின் தூதர் ரிப்பு தமன் பேவ்லி,  விளையாட்டுக்கள் அமைச்சகம்,  இந்திய விளையாட்டுக்கள் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

 

"2019-ல் உடல் தகுதி இந்தியா இயக்கத்தை திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தபோது தேசம் முழுவதையும் உடல் தகுதி கொண்டதாக மாற்றுவது அவரது தொலைநோக்குப் பார்வையாக இருந்தது.  இந்த இயக்கம் கடந்த சில ஆண்டுகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தில் இணைவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ஒவ்வொரு நாளும் மிகுந்த ஆர்வத்துடன் உடல் தகுதி இந்தியாவின் மொபைல் செயலி பதிவிறக்கம் செய்யப்படுகிறது" என  திரு கிரண் ரிஜிஜு  தெரிவித்தார்.

 

இதே உணர்வைப் பிரதிபலித்த திரு அனுராக் சிங் தாக்கூர், "சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து அமிர்த காலம் வரை பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நோக்கி நாம் பணியாற்றுவது இந்தியாவை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்லும்.   அந்த இலக்கை எட்டுவதற்கான முதல் வழியாக நமது உடல் தகுதியைப் புதிய நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்" என்றார்.  இந்த சுதந்திர ஓட்டத்தில் சாதனை அளவாகப்   பங்கேற்பு இருப்பதை சுட்டிக்காட்டிய திரு தாக்கூர்,  இந்த மூன்றாவது ஓட்டத்தை காந்தி ஜெயந்தி அன்று வெற்றிகரமாக தொடங்கி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஒற்றுமை தினத்தில் முடிவது சிறப்பானது என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு மொத்தம் ஒன்பது கோடியே 30 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் தற்போது இந்த எண்ணிக்கையை இரு மடங்காக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

 

உடல் தகுதி இந்தியா சுதந்திர ஓட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லைப் பாதுகாப்பு படை,  இந்தியா-திபெத் எல்லைக் காவல் படை,  மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட இந்திய ராணுவப் படைப் பிரிவினரும், இந்திய ரயில்வே,  சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் மற்றும் இளைஞர் நல அமைச்சகத்தின் பிரிவுகளான நேரு யுவ கேந்திரா,  நாட்டு நலப்பணித்  திட்டம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.

 

****



(Release ID: 1864511) Visitor Counter : 151