பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


Posted On: 30 SEP 2022 3:20PM by PIB Chennai

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பாதையை அகமதாபாத் கல்வி சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.  அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை கொடியசைத்து துவக்கிவைத்த பிரதமர், கலுப்பூர் நிலையத்தில் இருந்து தூர்தர்ஷன் கேந்திரா மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.  காந்தி நகர் ரயில் நிலையத்தில், காந்தி நகருக்கும் மும்பைக்கும் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் கொடியசைத்து துவக்கி வைத்த அவர், கலுப்பூர் ரயில் நிலையம் வரை ரயிலில் பயணம் செய்தார்.

 நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், "இன்று 21 ஆம் நூற்றாண்டின் இந்தியா, நகர்ப்புற இணைப்பு மற்றும் தற்சார்ப்பு இந்தியா ஆகியவற்றிற்கு ஒரு பொன்னாள்" என்று கூறினார். வந்தே பாரத் ரயில், அகமதாபாத் மெட்ரோ ரயில் ஆகியவற்றில் மேற்கொண்ட பயணம் குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உள்ளே ஒலி புகாத  அமைப்பை பாராட்டிய பிரதமர், விமானத்திற்குள் காணப்படும் ஒலியுடன் ஒப்பிடுகையில் நூறில் ஒரு மடங்காக இந்த ரயிலில்  ஒலி குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குறித்து தனிப்பட்ட முறையில், கருத்து தெரிவித்த பிரதமர், இன்று அகமதாபாத்துக்கு நான் தலைவணங்கப் போவதில்லை, ஏனெனில் அகமதாபாத் எனது இதயத்தை வென்று விட்டது என்று உணர்ச்சி மேலிட கூறினார்.

"21 ஆம் நூற்றாண்டின் இந்தியா நாட்டின் நகரங்களிலிருந்து புதிய வேகத்தைப் பெறப் போகிறது" என்று குறிப்பிட்ட பிரதமர்,“மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நமது நகரங்களை, தேவைக்கேற்ப தொடர்ந்து நவீனப்படுத்திக் கொண்டே இருப்பது அவசியம்” எனக் கூறினார்.

 நகரத்தின் போக்குவரத்து முறை நவீன மயமாகவும், தடையற்ற இணைப்புடனும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த கருத்தின் அடிப்படையில் நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 24-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. சில நகரங்களில் அது நிறைவுறும் நிலையில் உள்ளது. உடான் திட்டத்தின் கீழ் பல சிறு நகரங்கள்  விமான போக்குவரத்து சேவை உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே போல ரயில் நிலையங்கள் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளன. “இன்று காந்தி நகர் ரயில் நிலையம் உலகின் எந்த ஒரு விமான நிலையத்திற்கும் குறையாத தரத்துடன் உள்ளது” என்றார் அவர். அகமதாபாத் ரயில் நிலையத்தையும் நவீனப்படுத்த அரசு முடிவெடுத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

 அகமதாபாத்- காந்தி நகரின் வெற்றியை பற்றி கூறிய பிரதமர், அந்த இரட்டை நகரின் மேம்பாட்டு வெற்றி  குறித்து  விளக்கினார்.  ஆனந்த்- நாடியாட்,  பரூச்- அங்கலேஷ்வர், வல்சாத்- வாபி, சூரத்- நவ்சாரி, வதோதரா- ஹலோல் கலோல், மோர்வி- வங்கனெர், மெக்ஷானா காடி போன்ற ஏராளமான இரட்டை நகரங்கள் குஜராத்தின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தவிருக்கின்றன.

அகமதாபாத், சூரத், வதோதரா, போபால், இந்தூர், ஜெய்பூர் போன்ற நகரங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அந்தஸ்தை உறுதி செய்யவிருப்பதாக திரு மோடி சுட்டிக்காட்டினார். பழைய நகரங்களை மேம்படுத்தி, விரிவுபடுத்துவதில் மேற்கொள்ளப்படும் கவனத்துடன் புதிய நகரங்கள் உலக வர்த்தக தேவைக்கேற்ப மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். கிப்ட் நகரங்கள் இந்தவகை நகரங்களுக்கு நல்ல உதாரணங்கள் என்று அவர் தெரிவித்தார்.

"நாட்டின் மெட்ரோ வரலாற்றில் முதன்முறையாக 32 கிமீ நீளம் கொண்ட ஒரு பாதை ஒரே நேரத்தில் இயக்கப்பட்டுள்ளது" என பிரதமர் கூறினார். ரயில்வே லைனுக்கு மேலே மெட்ரோ பாதையை அமைப்பதில் எதிர்கொள்ளப்பட்ட சவால்களுக்கு இடையில் இத்திட்டம் வெகுவேகமாக முடிக்கப்பட்டுள்ளதை  அவர் சுட்டிக்காட்டினார்.

 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றி கூறிய பிரதமர், அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய 2 பெரிய நகரங்களுக்கு இடையிலான பயண தூரமும், நேரமும் வெகுவாக குறையும் என்று தெரிவித்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பையை அடைய ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தோராயமாக 7 முதல் 8 மணி நேரத்தை எடுத்துக்கொள்ளும்.  அதே சமயம் சதாப்தி ரயில் 6.30 மணி முதல் 7 மணி நேரத்தில் செல்லும். ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகபட்சமாக 5.30 மணி நேரத்தில் காந்தி நகரில் இருந்து மும்பையை சென்றடையும் என பிரதமர் கூறினார்.  மற்ற ரயில்களை விட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வந்தே பாரத் பெட்டிகளை வடிவமைத்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வியலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.  காசி ரயில் நிலையத்தில் தாம் மேற்கொண்ட கலந்துரையாடல் பற்றி  நினைவுகூர்ந்த பிரதமர், வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டினார்.  இரட்டை என்ஜின் அரசின் பயனாக   மெட்ரோ திட்டங்களுக்கு மிக விரைவாக அனுமதி கிடைப்பதுடன், விரைவாக திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று பிரதமர் விளக்கினார். மெட்ரோவுக்கான பாதை திட்டம்  ஏழை எளிய மக்களின் தேவையை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுவதாகவும், கலுப்பூர் பன்னோக்கு போக்குவரத்து மையமாக  உருவாகி வருகிறது என்றும் அவர் கூறினார்.

 மின் பேருந்துகளை உற்பத்தி செய்து இயக்கும் பேம் (எப்ஏம்இ) திட்டம் அரசால் தொடங்கப்பட்டுள்ளதை பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் ஏழை எளிய நடுத்தரப்பிரிவு மக்கள் பேருந்துகள் வெளியிடும் புகையால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதாக தெரிவித்தார். நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  திரு மோடி கூறினார்.  இந்த மின்சார பேருந்துகளுக்காக மத்திய அரசு ரூ.3500 கோடி செலவழித்துள்ளதாக கூறிய பிரதமர், குஜராத் மாநிலத்தில் 850 மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இதில் ஏற்கனவே 100 பேருந்துகள் இயக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 கடந்த கால மத்திய அரசுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், நகரங்களில் போக்குவரத்து நெரிசல்களை தடுக்க அவை தவறிவிட்டதாக தெரிவித்தார். 21-ம் நூற்றாண்டில் விரைவான வளர்ச்சி மிக முக்கிய அம்சமாகும் என்று  கூறிய அவர், தேசிய விரைவு சக்தி பெருந்திட்டமும், தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கையும்  இதற்கு முக்கிய உதாரணங்கள் என்றார். நமது ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த பிரதமர், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.  வெறும் 52 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை வந்தே பாரத் ரயில் எட்டும் என்பது அதன் முக்கிய அம்சமாகும் என்றார் அவர்.

 ரயில்வே கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துப் பேசிய பிரதமர், நாட்டின் ரயில்வே கட்டமைப்பின் பெரும்பகுதி ஆளில்லா ரயில்வே கேட்டுகளில்  இருந்து விடுவிக்கப்பட்டதை எடுத்துரைத்தார். "கிழக்கு மற்றும் மேற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்கள் தயாரானதும், சரக்கு ரயில்களின் வேகமும் அதிகரிக்கும், பயணிகள் ரயில்களின் தாமதமும் குறைக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு பற்றிய சிந்தனை செயல்முறையில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றங்களையும், வேகம் உந்து காரணியாக இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். “கடந்த 8 ஆண்டுகளில், நாங்கள் மக்களின் விருப்பங்களுடன் உள்கட்டமைப்பை இணைத்துள்ளோம்” என்று திரு மோடி தொடர்ந்தார், “ஒரு காலத்தில் உள்கட்டமைப்பு தொடர்பான அறிவிப்புகள் தேர்தல் லாபம் மற்றும் நஷ்டங்களை மட்டுமே மனதில் கொண்டு வெளியிடப்பட்டன. வரி செலுத்துவோரின் வருமானம் அரசியல் நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இரட்டை இயந்திர அரசாங்கம் இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது"  என்று மாற்றங்களை எடுத்துரைத்த பிரதமர், நிலையான முன்னேற்றத்தின் அடிப்படையானது வலுவான மற்றும் தொலைநோக்கு சிந்தனையுடன் கட்டப்பட்ட உள்கட்டமைப்பு என்றும், இன்று செய்யப்படும் பணிகள் இந்த சிந்தனையுடன் ஒத்துப்போகின்றன என்றும் கூறினார்.

 பள்ளிகள் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், நிலத்தடி மற்றும் நிலத்தடி மெட்ரோ கட்டுமானப் பணிகள் மற்றும் அதில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் வகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்தார். இது நாட்டின் முன்னேற்றத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, அவர்களுக்குள் உரிமை உணர்வையும் உருவாக்கும். இதன் மூலம் பொதுச் சொத்துக்களுக்கு ஒருபோதும் தீங்கு விளைவிக்காத ஒரு தலைமுறை உருவாகும் என்றார் அவர்.

 உரையின் முடிவில், வளர்ந்த இந்தியாவை விடுதலையின் அமிர்த காலத்தில் கட்டியெழுப்புவதற்கும் நவீன உள்கட்டமைப்பைக் உருவாக்கவும் அதிக வேகமும், சக்தியும் தேவை என்று பிரதமர் வலியுறுத்தினார். “குஜராத் மாநிலத்தில் உள்ள இரட்டை இயந்திர அரசும் இதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொருவரின் முயற்சியின் மூலம் இந்தப் பணி நிறைவேறும் என்று நம்புவதாக பிரதமர் கூறினார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், ஆளுனர் திரு ஆச்சார்யா தேவ்விரத்,   ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி ஆர் பாட்டீல்,  ரயில்வே இணையமைச்சர் திருமதி. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

*****


(Release ID: 1863866) Visitor Counter : 141