பிரதமர் அலுவலகம்

அகமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் துவக்கிவைத்தார்

Posted On: 29 SEP 2022 8:42PM by PIB Chennai

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது தேசாரில் உலகத்தரம் வாய்ந்த ஸ்வர்ணிம் குஜராத் விளையாட்டு பல்கலைக்கழகத்தையும்அவர் திறந்து வைத்தார். நாடு முழுவதிலும் இருந்து தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களிடமும் பிரதமர் கலந்துரையாடினார்.

 விழாவில் பேசிய பிரதமர், தேசிய விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில் காணப்படும் உற்சாகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று கூறினார். முன் எப்போதும் இல்லாத வகையில் 7000-க்கும் அதிகமான தடகள வீரர்கள், சுமார் 15,000 பங்கேற்பாளர்கள், 35,000  கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள், இவற்றைத் தவிர்த்து ஏறத்தாழ 50 லட்சம் மாணவர்கள் நேரடியாக இணைந்துள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகள் பிரமிக்க வைப்பதாக அவர் குறிப்பிட்டார். வீரர்களின் முகங்களில் காணப்படும் நம்பிக்கை ஒளி, வரவிருக்கும் இந்திய விளையாட்டின் பொற்காலத்தின் முன்னோட்டமாக அமைந்துள்ளது என்றார் அவர்.

 அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான ட்ரோன் விழாவை நினைவுகூர்ந்த பிரதமர், இது போன்ற கண்கவர் நிகழ்வைக் கண்டு அனைவரும் பெருமிதமும், ஆச்சரியமும் அடைந்ததாகத் தெரிவித்தார். இதுபோன்ற தொழில்நுட்பத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு, குஜராத் மாநிலத்தையும், இந்தியாவையும் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும்”, என்று அவர் மேலும் கூறினார். மைதானத்தின் தனித்துவம் பற்றி பேசுகையில், இதர வளாகங்கள் ஒரு சில விளையாட்டுகளுக்கான வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும் வேளையில், கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, குத்துச் சண்டை, லான் டென்னிஸ் உள்ளிட்ட ஏராளமான போட்டிகளை நடத்துவதற்கான வசதியை சர்தார் பட்டேல் விளையாட்டு வளாகம் பெற்றிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

 தேசிய அளவில் விளையாட்டின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். ஆடுகளத்தில் வீரர்களின் வெற்றி, அவர்களது வலிமையான செயல்திறன் முதலியவை இதர துறைகளில் நாடு சாதனை புரிவதற்கும் வழிவகை செய்கிறது. விளையாட்டின் மென்மையான ஆற்றல் நாட்டின் அடையாளத்தையும், கண்ணோட்டத்தையும் பெரும் மடங்கு அதிகரிக்கிறது. ஒரு செயலிலிருந்து வெற்றி துவங்குகிறது என்று விளையாட்டு சம்பந்தமான எனது நண்பர்களிடம் நான் அடிக்கடி கூறுவேன். அதாவது ஒரு செயலை நீங்கள் தொடங்கும் போது அந்த நொடியே வெற்றியும் ஆரம்பிக்கிறது. முன்னேறும் முயற்சியை நீங்கள் கைவிடாமல் இருந்தால் வெற்றியும் உங்களை துரத்திக் கொண்டே வரும்”, என்று பிரதமர் தெரிவித்தார்.

 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருந்தது என்றும், அதற்கு மாறாக தற்போது 300-க்கும் அதிகமான விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். “8 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வீரர்கள் 20- 25 விளையாட்டுகளில் பங்கேற்பார்கள். தற்போது அவர்கள் சுமார் 40 வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். பதக்கங்களின் எண்ணிக்கையும் இந்தியாவின் பெருமையும் இன்று உயர்கிறது”, என்றார் அவர்.

 இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு புபேந்திர பட்டேல், மாநில ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், மத்திய இளைஞர் விகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி. ஆர். பாட்டில், குஜராத் உள்துறை அமைச்சர் திரு ஹார்ஸ் சங்வி, அகமதாபாத் மேயர் திரு கிரித் பர்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

**************

(Release ID: 1863511)



(Release ID: 1863674) Visitor Counter : 196