பிரதமர் அலுவலகம்
தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை வெளியிட்டார் பிரதமர்
Posted On:
17 SEP 2022 7:41PM by PIB Chennai
புதுதில்லியின் விக்யான் பவனில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் லட்சியத்தை நிறைவேற்றுவதில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையின் அறிமுகம் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமையும் என்று கூறினார். “கடைசி மைல் வரை விரைவான விநியோகத்தை உறுதி செய்வது, போக்குவரத்து சம்பந்தமான சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, நேரத்தை சேமிப்பது, உற்பத்தியாளர்களின் செலவை குறைப்பது மற்றும் வேளாண் பொருட்கள் வீணாவதை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதுபோன்ற நடவடிக்கைகளுள் ஒன்றுதான் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை”, என்று அவர் தெரிவித்தார்.
உலகளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி அடைந்துள்ள இந்தியாவில் சூழ்நிலை வேகமாக மாறி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். “மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா என்ற எதிரொலி எங்கும் ஒலிக்கிறது. மிகப்பெரிய ஏற்றுமதி இலக்குகளை இந்தியா நிர்ணயிப்பதோடு, அவற்றை நிறைவேற்றியும் வருகிறது. உற்பத்தி மையமாக இந்தியா வளர்ச்சி பெறுவது என்பது உலக நாடுகளின் மத்தியில் நிலைத்தன்மையை ஏற்படுத்தி வருகிறது. உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தை நாம் ஆய்வு செய்தால், உலக நாடுகள் அதனை ஏற்றுக் கொள்வதை நம்மால் அறிய முடியும்”, என்றார் அவர்.
இதுபோன்ற சூழலில் தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை அனைத்துத் துறைகளிலும் புதிய ஆற்றலை ஏற்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். சாகர்மாலா, பாரத்மாலா போன்ற திட்டங்கள் முறையான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான சரக்குப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரத்தியேக சரக்கு வழித்தடங்களின் பாதைகளை விரைவுபடுத்தியதாக பிரதமர் எடுத்துரைத்தார். இந்திய துறைமுகங்களின் மொத்த கொள்ளளவு கணிசமாக அதிகரித்துள்ளதையும், சரக்குக் கப்பல்கள் திரும்பும் நேரம் சராசரியாக 44 மணி நேரத்தில் இருந்து 26 மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருப்பதையும் திரு மோடி சுட்டிக்காட்டினார். ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக 40 விமான சரக்கு முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 30 விமான நிலையங்களில் குளிர் பதப்படுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. “நீர்வழி வாயிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் மலிவான போக்குவரத்து வசதிகளை அளிக்க முடியும் என்பதால் நாட்டில் பல்வேறு புதிய நீர்வழி போக்குவரத்து சேவைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன”, என்று பிரதமர் மேலும் கூறினார்.
“உள்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தகத்தின் விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையில் அபரிமிதமான சாத்தியம் உள்ளது. இந்த வாய்ப்புகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயன்படுத்த வேண்டும்”, என்று கேட்டுக்கொண்டு பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860192
***********
(Release ID: 1860348)
Visitor Counter : 364
Read this release in:
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam