பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு நிலை குறித்து ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு

Posted On: 08 SEP 2022 10:27AM by PIB Chennai

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு யாசுகசு ஹமடாவுடன் இன்று இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்த பல்வேறு அம்சங்களை இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். தடையற்ற, வெளிப்படையான, விதிமுறைகள் அடிப்படையிலான இந்தோ-பிசிபிக் பிராந்தியத்தின் முக்கிய பங்கு குறித்தும், இந்திய- ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும்,  அவர்கள் ஆய்வு நடத்தியதுடன், இதன் அவசியம் பற்றி வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது திரு ராஜ்நாத் சிங், இந்தோ- ஜப்பான் இருதரப்பு பாதுகாப்பு  பயிற்சிகளில் அதிகரித்து வரும் சிக்கல்களை, சுட்டிக்காட்டினார். இருநாடுகளுக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த பயிற்சி அவசியம் என்று  அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தளவாடம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, துறைகளின் கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தினார். மத்திய அரசால் பாதுகாப்பு தொழிலின் வளர்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ள இணக்கமான சூழலை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் பாதுகாப்பு வழித்தடங்களில் ஜப்பான் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தியா-ஜப்பானுக்கிடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஜப்பான் பயணம், முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நேற்றிரவு ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்த திரு ராஜ்நாத் சிங்குக்கு, பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை  அமைச்சர் டாக்டர்  ஜெயசங்கருடன் இரண்டாவது இந்தியா-ஜப்பான் டூ பிளஸ் டூ அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் இன்று பங்கேற்கிறார். ஜப்பான் தரப்பில், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு யாசுகசு ஹமடா, வெளியுறவுத்துறை அமைச்சர் திரு யோஷிமசா  ஹயாஷி ஆகியோர்  கலந்துகொள்கிறார்கள். டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்து செல்வது குறித்து ஆய்வு செய்யும்.

**************

(Release ID: 1857706)



(Release ID: 1857732) Visitor Counter : 208