குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஐஏஎஸ் அதிகாரிகள் ஆர்வத்துடனும் தன்முனைப்புடனும் பணியாற்றுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டு இந்தியாவை மிகவும் வளமானதாகவும், வலிமையானதாகவும் மாற்றமுடியும்; குடியரசு தலைவர் முர்மு

Posted On: 25 AUG 2022 1:33PM by PIB Chennai

பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் 2020 ஆம் ஆண்டின் 175 ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர், இன்று குடியரசு தலைவர் மாளிகையில், குடியரசு தலைவர் திருமதி  திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

அதிகாரிகளிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர், அரசு ஊழியர்கள் என்ற வகையில், அறிவு, விநியோகச் சங்கிலி, கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பல்வேறு துறைகளின் உலகளாவிய மையமாக இந்தியா உருவாவதில் அவர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றார். அதே சமயம், சமூகம் உள்ளடக்கிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான வளர்ச்சி ஆகிய துறைகளில் இந்தியா எடுத்துள்ள தலைமை நிலையை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

2047 ஆம் ஆண்டிற்குள், 2020 ஆம் ஆண்டு குழுவின் அதிகாரிகள் மிகவும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்களாக இருப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டிய குடியரசு தலைவர், ஆர்வத்துடனும் தன் முனைப்புடனும் பணியாற்றுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டு இந்தியா மிகவும் வளமானதாகவும், வலுவாகவும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறினார்.  2047 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அளவுருக்களுக்கு,  நவீன மற்றும் சேவை சார்ந்த மனநிலையுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். கர்மயோகி இயக்கம் நமது அரசு ஊழியர்களை அவர்களின் அணுகுமுறையில் மிகவும் நவீனமாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும், உணர்திறன் மிக்கவர்களாகவும் மாற்றுவதற்கான ஒரு முக்கிய முயற்சி என்று அவர் குறிப்பிட்டார்.

உட்கட்டமைப்பில் அபரிமிதமான வளர்ச்சியுடன், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வது இலகுவாகியுள்ளதாக குடியரசு தலைவர் தெரிவித்தார். அரசு ஊழியர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள கடைசி நபர் அல்லது மிகவும் பின்தங்கிய நபரை தொடர்பு கொண்டு அவரது வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார். எந்தவொரு பொதுநல முயற்சியும் அதன் பலன்களும் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் நமது சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்களைச் சென்றடைந்தால் மட்டுமே உண்மையான வெற்றியைப் பெற முடியும் என்பதை அவர்  நினைவூட்டினார். இதுபோன்ற தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடைய அரசு ஊழியர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும், ஆதரவற்ற மக்கள் உதவிக்காக அவர்களை அணுகுவதில் சிரமப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுச் சேவையில் அர்ப்பணிப்பு, நலிந்த பிரிவினரிடம் அனுதாபம் மற்றும் இரக்கம், நேர்மை மற்றும் நன்னடத்தை, பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றின் உயர் தரத்தைப் பேணுவதன் மூலம் அரசு ஊழியர்கள் வழிநடத்தப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் கூறினார்.

மனித வளர்ச்சி குறியீடுகளின் அடிப்படையில் தங்கள் பிரதேசத்தை முதலாவதாக மாற்ற வேண்டும் என்ற பேரார்வத்துடன்  அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டுமென குடியரசு தலைவர் வலியுறுத்தினார். மேலும் தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் அவர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். அவர்கள் சேவை செய்யக் கடமைப்பட்ட மக்களிடம் உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். முழு உலகமும் ஒரு பெரிய குடும்பம் என்பது  சிறந்த இந்திய நெறிமுறையின் ஒரு பகுதி என்று கூறிய குடியரசு தலைவர், அகில இந்தியாவே எனது குடும்பம் என்பது  அகில இந்திய குடிமைப்பணி  அதிகாரிகளின் ஒருங்கிணைந்த நெறிமுறையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

***************

(Release ID: 1854323)


(Release ID: 1854376) Visitor Counter : 199