பிரதமர் அலுவலகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சியாக மின்துறையின் சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை ஜூலை 30 அன்று பிரதமர் தொடங்கிவைக்கவுள்ளார்

திட்டத்தின் ஐந்து ஆண்டு ஒதுக்கீடு: ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக

மின்சாரத்துறைகள் மற்றும் மின்விநியோக அமைப்புகளில் செயல்திறன்கள் மற்றும் நீடிக்கவல்ல நிதி மேம்பாட்டை நோக்கமாக கொண்டது இந்த திட்டம்

‘ஒளிமயமான இந்தியா, ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ என்பதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்

ரூ.5200 கோடிக்கும் அதிகமதிப்புள்ள என்பிடிசியின் பல்வேறு பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி அர்ப்பணிப்பார்

தேசிய மாடிப்பகுதி சூரியசக்தி இணையப்பக்கத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார்

Posted On: 29 JUL 2022 2:18PM by PIB Chennai

 ஜூலை 30 அன்று பிற்பகல் 12.30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ‘ஒளிமயமான இந்தியா ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ என்பதன் நிறைவு நிகழ்வில் காணொலி காட்சி மூலம் பங்கேற்பார். இந்த நிகழ்வில் சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். தேசிய அனல்மின் கழகத்தின் பல்வேறு பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அர்ப்பணிப்பார். தேசிய மாடிப்பகுதி சூரிய மின்சக்தி இணையப்பக்கத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

 பிரதமர் தலைமையின் கீழ் மின்சாரத்துறையில் பல்வேறு புதுமையான முன்முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.  இந்த சீர்திருத்தங்கள் அனைவருக்கும் கட்டுப்படியான செலவில் மின்சாரம் கிடைப்பதை நோக்கமாக கொண்டு  மின்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தொலைதூரப்பகுதிகளுக்கும்  மின்சாரத்தை உறுதிசெய்யும் அரசின் உறுதிப்பாட்டை குறிக்கும் வகையில் ஏற்கனவே மின்சாரம் கிடைக்காத 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டுசெல்லப்படுகிறது.

  மின்சாரத்துறைகள்  மற்றும் மின் விநியோக கழகங்களின் செயல்பாட்டுத்திறன்கள்  மற்றும் நீடித்த நிதி ஆதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு  மின்சார அமைச்சகத்தின்  வரலாற்றுச்சிறப்புமிக்க முன்முயற்சியான சீரமைக்கப்பட்ட விநியோகப்பிரிவு திட்டத்தை பிரதமர் தொடங்கிவைப்பார். நிதி ஆண்டு 2021-22 முதல், நிதி ஆண்டு 2025-26 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடனான இந்தத் திட்டம், விநியோகப்பிரிவில் நவீன மயம் மற்றும் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கம் கொண்டது. கடைக்கோடி வாடிக்கையாளர்களுக்கும் நம்பகமான, தரமான விநியோகத்தை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தும். மேலும் இது தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியாக ஒருங்கிணைந்த இழப்பை 12-15 சதவீதமாக இந்திய அளவில்  குறைப்பதையும், மின்சாரத்துறைகள் மற்றும் அனைத்து மாநில மின்விநியோக அமைப்புகளின் செயல்திறன்களையும், நீடிக்கவல்ல நிதியையும் மேம்படுத்துவதன் மூலம் விநியோகத்தின் சராசரி செலவு – சராசரி வருவாய் இடையேயான இடைவெளியை 2024-25-க்குள் முற்றிலுமாக நீக்குவதையும் நோக்கமாக கொண்டது.

  இந்த நிகழ்வின் போது தேசிய அனல்மின் கழகத்தின்  ரூ.5200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் அடிக்கல் நாட்டி அர்ப்பணிப்பார். தெலங்கானாவில் 100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ராமகுண்டம் மிதவை சூரியமின்சக்தி திட்டத்தையும், கேரளாவில் 92 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காயங்குளம் மிதவை சூரியமின்சக்தி திட்டத்தையும் அவர் தொடங்கிவைப்பார். ராஜஸ்தானில் 735 மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட நோக் சூரியமின்சக்தி திட்டம், லேயில் போக்குவரத்துக்கான பசுமை ஹைட்ரஜன் திட்டம் குஜராத்தில் இயற்கை எரிவாயு திட்டத்துடன் கவாஸ் பசுமை ஹைட்ரஜன் கலத்தல் திட்டம் ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.

  ராமகுண்டம் திட்டம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4.5 லட்சம் சூரிய மின்சக்தி தகடுகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரியசக்தி திட்டமாக உள்ளது. காயங்குளம் திட்டம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 லட்சம் சூரிய மின்சக்தி தகடுகளுடன் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய மிதவை சூரியசக்தி திட்டமாகும்.

  தேசிய மாடிப்பகுதி சூரிய சக்தி இணையப்பக்கத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இது மாடிப்பகுதி சூரிய சக்தி திட்டங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இணையம் வழியாக அறிந்துகொள்ள உதவும். அதாவது இந்த திட்டத்தை நிறுவுதல் மற்றும் ஆய்வு செய்த பின் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகளில் மானியம் விடுவிப்பது வரை இணையம் வழியாக அறிந்துகொள்ளலாம்.

 ‘சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப்பெருவிழா’வின் பகுதியாக ஜூலை 25 முதல் 30 வரை ‘ஒளிமயமான இந்தியா, ஒளிமயமான எதிர்காலம்- மின்சாரம்@2047’ நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு கடந்த 8 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை வெளிப்படுத்துகிறது. குடிமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலம் மின்சாரம் தொடர்பான அரசின் பல்வேறு முன்முயற்சிகள், திட்டங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்க செய்வது இதன் நோக்கமாகும்.

***************

(Release ID: 1846120)



(Release ID: 1846217) Visitor Counter : 423