பிரதமர் அலுவலகம்

சபர்கந்தாவின் சபர் பால்பண்ணையில் பல்வேறு திட்டங்களின் துவக்க நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

Posted On: 28 JUL 2022 5:26PM by PIB Chennai

குஜராத் முதல்வர் திரு புபேந்திர பாய் பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற நண்பரும் குஜராத் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான திரு சி.ஆர். பாட்டில் அவர்களே, குஜராத் சட்டமன்ற துணை சபாநாயகர் திரு ஜேதாபாய் அவர்களே, அமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!

சபர் பால்பண்ணை இன்று மேலும் விரிவடைந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் இங்கு அமைக்கப்படுகின்றன. சபர் பால்பண்ணை பற்றி பேசும்போது பூராபாய் அவர்களை நினைவுகூராமல் இருக்க முடியாது. பல தசாப்தங்களுக்கு முன்பு பூராபாய் பட்டேல் மேற்கொண்ட முன்முயற்சிகள் இன்று லட்சக்கணக்கானோரின் வாழ்வை மாற்றி அமைக்க உதவுகின்றன.

நண்பர்களே,

குஜராத்தில் நீர்ப் பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் வாயிலாக விவசாயத்தில் நாம் பெருமளவு முன்னேற்றம் அடைந்ததோடு, கால்நடை பராமரிப்பும், பால் வளமும் மிகப்பெரிய சக்திகளாக உருவாகின. பால்பண்ணைகள், பொருளாதாரத்திற்கு நிலைத்தன்மை அளித்து, பாதுகாப்பை வழங்கியதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தின.

கால்நடைகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. குஜராத் மாநிலத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு முறைகளால் இன்று மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கின்றன. குஜராத்தின் பால் சந்தை தற்போது ரூ. 1 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இந்த மாநிலத்தில் 10000 வேளாண் உற்பத்தியாளர் நிறுவன அமைப்புகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் உணவு பதப்படுத்துதல், மதிப்பு சார்ந்த ஏற்றுமதி மற்றும் விநியோகச் சங்கிலி ஆகியவற்றுடன் சிறு விவசாயிகள் நேரடியாக இணைக்கப்படுவார்கள்.

சகோதர, சகோதரிகளே,

கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளால் குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. நிலம் இல்லாத விவசாயிகளும் குறைவான நிலம் கொண்ட விவசாயிகளும் மிக அதிக வருவாயை ஈட்டினார்கள். கதர் மற்றும் கிராம தொழில்கள், இதற்கு ஒரு  சிறந்த உதாரணம். கதர் மற்றும் கிராமத் தொழில்களின் வருவாய் முதன் முறையாக ரூ. 1  லட்சம் கோடியைக் கடந்தது. அதேபோல தேன் உற்பத்தி, 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்ததை விட கடந்த எட்டு ஆண்டுகளில் வெகுவாக உயர்ந்துள்ளது.

சபர்கந்தா இன்று எனக்கு வழங்கிய மரியாதையும், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசிகளும் தான் எனக்கு ஆற்றல் அளிக்கின்றன. உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

மிக்க நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***************

(Release ID: 1845889)



(Release ID: 1846077) Visitor Counter : 120