குடியரசுத் தலைவர் செயலகம்

மாண்புமிகு இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நாட்டுமக்களுக்கு விடுக்கும் விடைபெறு உரை

Posted On: 24 JUL 2022 7:32PM by PIB Chennai

பிரியமான சககுடிமக்களே,

 

வணக்கம்!

 

  1. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் என் மீது மட்டற்ற நம்பிக்கை வைத்து, உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக என்னை இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தீர்கள்.  என் பணிக்காலம் முடிவடைந்த பிறகு நான் விடைபெறும் வேளையில் உங்கள் அனைவரோடும் நான் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

  1. என்னுடைய சக குடிமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என அனைவருக்கும் என் ஆழமான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு நான் தொடங்குகிறேன்.  நாடெங்கும் நான் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களின் போது, குடிமக்களுடனான என்னுடைய இடைவினைகள் எனக்கு உத்வேகத்தையும், சக்தியையும் அளித்தன.  சின்னச்சின்ன கிராமங்களிலிருந்து வரும் விவசாயிகள்-பணியாளர்கள், இளம் மனங்களுக்கு வடிவம் கொடுக்கும் ஆசிரியர்கள், நமது மரபினை வளப்படுத்தும் கலைஞர்கள்,  நமது நாட்டின் பல்வேறு பரிமாணங்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள், தேசத்தின் பொருட்டு செல்வம் திரட்டும் வணிகர்கள், மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள்-செவிலியர்கள், தேசத்தின் உருவாக்கலில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்-பொறியாளர்கள், நாட்டின் நீதிவழங்கல் முறைக்குப் பங்களிப்பு அளிக்கும் நீதிபதிகள்-வழக்குரைஞர்கள், நிர்வாகத்தைச் சீராக இயக்கும் ஆட்சிப்பணி அதிகாரிகள், வளர்ச்சியோடு அனைத்து சமூகப் பிரிவுகளையும்  இணைக்கும் நமது சமூக சேவகர்கள், இந்திய சமூகத்தில் ஆன்மீக ஓட்டத்தை பராமரித்து வரும் சமய பிரச்சாரகர்கள்-அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கைகளின் தலைவர்கள் ஆகிய நீங்கள் அனைவரும், நான் என் கடமைகளை செவ்வனே செய்ய உதவியிருக்கின்றீர்கள்.  சுருங்கச் சொன்னால், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிடமிருந்தும் முழுமையான ஒத்துழைப்பு, ஆதரவு, ஆசிகள் ஆகியன எனக்குக் கிடைத்தன.

 

  1. நமது முப்படைகள், துணை இராணுவம், காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த தைரியமான வீரர்களை சந்திக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புகள், குறிப்பாக என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.  அவர்களிடம் இருக்கும் தேசபக்தி உணர்வு ஆச்சரியமானதாக இருப்பதோடு, கருத்தூக்கம் அளிக்கவும் வல்லது.  அயல்நாடுகளுக்கு நான் சென்ற போது, அங்கே வாழும் இந்திய வம்சாவளி உறுப்பினர்களோடு நான் பேசிய போதெல்லாம் அவர்களுக்கு தாய்நாட்டின் மீது இருந்த அன்பும் அக்கறையும் உள்ளத்தைத் தொடும் விதமாக இருந்தன.  தேசிய விருதுகளை அளிக்கும் வேளையில், சில அபூர்வமான மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.  தங்களுடைய சக இந்தியர்களுக்கு மேம்பட்ட ஒரு  வருங்காலத்தை உருவாக்குவதில் அவர்கள் விடாமுயற்சியோடும், அர்ப்பணிப்போடும் இருக்கிறார்கள்.

 

  1. நாடு என்பது அதன் குடிமக்களால் ஆனது என்ற நம்பிக்கையை இவை அனைத்தும் மீளுறுதிப்படுத்துகின்றன; நீங்கள் ஒவ்வொருவரும் இந்தியாவை மேலும் மேலும் மேம்பட்ட நாடாக ஆக்கும் முனைப்போடு இருக்கையில், தேசத்தின் மகத்தான எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறது.

 

  1. இந்த அனுபவங்கள் எனது சிறுபிராயத்தை எனக்கு நினைவூட்டுவதோடு, நமது தனிநபர் வாழ்க்கைகளை மாபெரும் வரலாற்று நிகழ்வுகள் எப்படி வடிவமைக்கின்றன என்பதையும் நினைவுபடுத்துகின்றன.

 

  1. ஒரு சிறிய கிராமத்தில் நான் வளர்ந்துவந்த காலகட்டத்தில், தேசம் அண்மையில் தான் சுதந்திரத்தை அடைந்திருந்தது.  நாட்டை மீள் கட்டமைக்க ஒரு புதிய ஆற்றல் அலை உருப்பெற்றிருந்தது; புதிய கனவுகளும் இருந்தன.  எனக்கும் கூட கனவு ஒன்று இருந்தது, அதாவது இந்த நாட்டை உருவாக்கும் செயல்பாட்டில், ஒரு அர்த்தமுள்ள முறையில் நானும் ஒரு நாள் பங்கெடுக்க முடியும் என்பதே அந்தக் கனவு.  குடியரசின் மிகவுயரிய அரசியலமைப்புப் பதவி குறித்து எல்லாம், மண் குடிசையில் வசித்து வந்த ஒரு சிறுவனுக்கு எந்த எண்ணமும் இருந்திருக்க முடியாது.  நமது கூட்டு வருங்காலத்தை உருவாக்குவதில், ஒவ்வொரு குடிமகனுக்கும் வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது தான் இந்திய ஜனநாயகத்தின் பலத்திற்குச் சான்றாக விளங்குகிறது.  பரௌங்க் Paraunkh கிராமத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் உங்களிடத்திலே உரையாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால், உயிர்ப்புடைய நமது ஜனநாயக அமைப்புகளில் இருக்கும் சக்தி தான் காரணம்.

 

  1. நான் எனது கிராமம் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால், எனது பணிக்காலத்தில் எனது இல்லத்திற்குச் சென்று, கான்பூரில் உள்ள எனது ஆசிரியர்களின் பாதம் பணிந்து அவர்களின் நல்லாசிகளைப் பெற்ற கணங்கள் என் வாழ்க்கையிலே மிகவும் நினைவில் கொள்ளத்தக்கவையாக நான் கருதுகிறேன் என்பதையும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

 

பிரியமான குடிமக்களே,

 

  1. தேசம் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது.  அடுத்த மாதம் நாம் அனைவரும் நமது சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடுவோம்.  நாம் அமிர்த காலத்திற்குள் நுழைவோம், இது நமது சுதந்திரத்தின் நூற்றாண்டை நோக்கிய 25 ஆண்டுக் காலம்.  இந்த ஆண்டுவிழாக்கள் எல்லாம் நமது குடியரசின் பயணத்தின் மைல்கற்கள்.  தனது வல்லமையைத் தெரிந்து, உலகிற்குத் தனது சிறந்த பங்களிப்பை ஆற்றக்கூடிய பயணம்.

 

  1. நவீன காலங்களில், நமது நாட்டின் மகோன்னதமான பயணம், காலனியாதிக்கத்தின் போது விழிப்படைந்த தேசியவாத உணர்வுகள், சுதந்திரப் போராட்டத் தொடக்கம் ஆகியவற்றோடு ஆரம்பமானது.  19ஆம் நூற்றாண்டு நெடுக நாட்டில் பல கிளர்ச்சிகள் நடைபெற்றன.  ஒரு புதிய விடியலுக்கான நம்பிக்கைகளை நமக்குள் ஏற்படுத்திய பல சாகஸ நாயகர்களின் பெயர்களை என்றோ நாம் மறந்து விட்டோம்.  அண்மைக்காலத்தில் தான் அவர்களில் சிலருடைய பங்களிப்புகள் பாராட்டப்பட்டிருக்கின்றன.  புதிய நூற்றாண்டு பிறக்கும் வேளையில் பல போராட்டங்கள் ஒன்றிணையத் தொடங்கி, ஒரு புதிய விழிப்புணர்வை உருவாக்கின.

 

  1. 1915ஆம் ஆண்டு காந்தியடிகள் தாய்நாடு திரும்பிய போது, தேசிய உணர்வு வேகம் பெற்றுக் கொண்டிருந்தது.  20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தின் சில தசாப்தங்களுக்கு உள்ளாகவே, அசாதாரணமான சிந்தனாசக்தி படைத்த தலைவர்கள் பலர், வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் இருந்தது ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே நான் உறுதியாக கருதி வந்திருக்கிறேன்.  நமது கலாச்சார வேர்களை நாம் கண்டுபிடிக்க, ஒரு நவீனகால ரிஷியைப் போல உதவியவர் என்றால் அது குருதேவ் ரபீந்திரநாத் தாகூர் ஆவார்.  அதே போல, பல முன்னேறிய நாடுகளிலும் கூட கேள்விப்பட்டிராத சமத்துவத்தின் தரப்பில், மும்முரமாக வாதிட்டு வந்தார் பாபாசாஹேப் பீம்ராவ் அம்பேத்கர்.  திலகர் முதல் கோகலே, பகத் சிங், நேதாஜி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, சரோஜினி நாயுடு, கமலாதேவி சட்டோபாத்யா என, மனிதகுல வரலாற்றிலே, ஒரு பொது நோக்கத்திற்காக இத்தனை மகத்தான மனிதர்கள் ஒருங்கிணைந்ததைக் காண முடியாது.

 

  1. எத்தனையோ பெயர்கள் என் மனதில் தோன்றுகின்றன, ஆனால் ஒரு சுதந்திரமான இந்தியாவிற்காக, பலவகையான கருத்துக்களைக் கொண்ட, பலவகையான பெரும் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்திலே பெரும் தியாகங்களைப் புரிந்தார்கள் என்பதையே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  விளைவை அதிக அளவுக்கு பாதித்தவர் என்றால், அது காந்தியடிகளும் அவருடைய மாற்றமேற்படுத்தும் கருத்துக்களும் தான்; அதோடு அவர் பல நபர்களின் வாழ்க்கையையே கூட மாற்றியமைத்து விட்டார்.

 

  1. நாம் இன்று பயணித்துவரும் ஜனநாயகப் பாதைக்கான முறையான வரைபடத்தை அமைத்துக் கொடுத்தது என்னவோ அரசியலமைப்பு அவை தான்.  ஹன்ஸாபென் மெஹ்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கௌர், சுசேதா கிருபளானி உள்ளிட்ட 15 குறிப்பிடத்தக்க பெண்கள் உட்பட, நாட்டின் மாபெரும் ஆளுமைகளும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள்.  அவர்கள் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம், அதில் அவர்கள் ஒவ்வொருவருடைய விலைமதிப்பில்லா பங்களிப்பு ஆகியன, நமது வழிகாட்டு விளக்காக விளங்கி வந்திருக்கின்றன.  அதில் பொதிந்திருக்கும் விழுமியங்கள் அனைத்தும் நமது இந்தியப் பாரம்பரியத்தில் காலத்தைக் கடந்து நிலைத்து வந்திருப்பவை தாம்.

 

  1. அரசியலமைப்பு அவையிலே, அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பாக, தனது நிறைவுரையில், இருவகையான ஜனநாயகங்கள் குறித்து டாக்டர். அம்பேத்கர் குறிப்பிட்டார்.  வெறும் அரசியல் ஜனநாயகத்தோடு நாம் நிறைவு கண்டுவிடக் கூடாது என்று அவர் கூறினார்.    அவரை நான் மேற்கோள் காட்டுகிறேன் – “நாம் நமது அரசியல் ஜனநாயகத்தை ஒரு சமூக ஜனநாயகமாகவும் ஆக்க வேண்டும்.   அதன் அடித்தளத்தில் சமூக ஜனநாயகம் இல்லையென்று சொன்னால், அரசியல் ஜனநாயகத்தால் நீடித்திருக்க முடியாது.  சமூக ஜனநாயகம் என்றால் என்ன?  அதாவது சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை முறையையே இது குறிக்கிறது.   சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம் என்ற இந்தக் கோட்பாடுகள், ஒரு மும்மையின் 3 தனித்தனிக் கூறுகளாகக் கருதப்படக்கூடியவை அல்ல.  இவை மும்மையின் ஒன்றுகலந்த கலவை, அதாவது இவற்றைப் பிரித்துப் பார்ப்பது என்பது, ஜனநாயகத்தின் அடிப்படைக் காரணத்தையே தோற்கடிப்பது போலாகும்” என்றார்.

 

சக குடிமக்களே,

 

  1. கோட்பாடுகளின் இந்த மும்மையானது உயர்வானது, கண்ணியம் நிறைந்தது, உயர்த்துவது.  இவற்றை வறட்டுக் கற்பனை என்று நாம் தவறாகக் கருதி விடக்கூடாது.  நமது அண்மைக்கால வரலாறும் சரி, பண்டைய வரலாறும் சரி, இவை நிஜமானவை என்றும், இவற்றை மெய்ப்பிக்க வைக்க முடியும் என்றும், பல்வேறு சகாப்தங்களில் இவை அடையவும் பட்டிருக்கின்றன என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகின்றன.  நமது மூதாதையர்களும், நமது நவீனகால தேசத்தின் நிறுவனர்களும், தங்களுடைய கடும் உழைப்பு, சேவை மனப்பான்மை வாயிலாக, சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம் ஆகியவற்றின் பொருளை சிறப்பாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள்.  நாம் அவர்களுடைய காலடித்தடங்களில் தொடர்ந்து நடந்தால் மட்டுமே போதுமானது.

 

  1. இன்றைய எளிய குடிமகனுக்கு இந்த ஆதர்சங்கள் எதைக் குறிக்கிறது?  வாழ்க்கையை வாழ்வதில் உள்ள மகிழ்வைக் கண்டுபிடிக்க உதவுவதே முக்கியமான இலக்கு என்று நான் நம்புகிறேன்.  இதன் பொருட்டு, முதன்மையாக, அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.  ஆதாரங்களின் தட்டுப்பாடுகள் என்ற நாட்களைத் தாண்டி நாம் நீண்ட தொலைவு பயணித்து விட்டோம்.  மேம்பட்ட வீட்டுவசதி, குடிநீர்-மின்சாரம் ஆகியவற்றை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொண்டு சேர்ப்பது என்ற இலக்கு நோக்கி நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.   பாரபட்சமறியா நல்லாளுகை, வேகமான வளர்ச்சி ஆகியவை வாயிலாகவே இந்த மாற்றம் சாத்தியமாகி இருக்கிறது.

 

  1. அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்ட பிறகு, தங்களுடைய திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் தீர்மானப்படி செயல்புரிய சுதந்திரமளிப்பதன் வாயிலாக, ஒவ்வொரு குடிமகனும் மகிழ்ச்சியைத் தேடிப்பெற அனுமதிக்கப்பட வேண்டும்.  இந்த நிலையில் கல்வி தான் திறவுகோலாக இருக்கிறது.  தேசியக் கல்விக் கொள்கையானது, இளம் இந்தியர்களைத் தங்களுடைய பாரம்பரியத்தோடு இணைப்பதோடு, 21ஆம் நூற்றாண்டில் அவர்கள் உறுதியாகக் கால்பதிக்க பெரிய வகையில் உதவி புரியும் என்று நான் நம்புகிறேன்.  அவர்களின் நாளைய வளமான வாழ்விற்கு, ஆரோக்கியப் பராமரிப்பு மிக அவசியம்.  பொதுமக்களுக்குப் பயனாகும் உடல்நலக் கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை, பெருந்தொற்று அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.  இந்தப் பணிக்கு அரசாங்கம் உச்சபட்ச முதன்மை அளித்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  கல்வியும், ஆரோக்கியமும் கவனித்துக் கொள்ளப்பட்டால், தங்களுடைய வாழ்க்கைக்கான சிறந்த பாதையைத் தேர்ந்தெடுக்க, பொருளாதார சீர்த்திருத்தங்கள் குடிமக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.  21ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக ஆக்குவதில் நாடு தன்னைத் தயார் செய்து கொண்டு வருகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

 

பிரியமான குடிமக்களே,

 

  1. என் பதவிக்காலத்தின் ஐந்தாண்டுகளில், என் திறமைக்கேற்ப சிறப்பான வகையில் என் பொறுப்புக்களை நான் நிறைவேற்றி இருக்கிறேன்.  டாக்டர். இராஜேந்திர பிரசாத், டாக்டர். ச. இராதாகிருஷ்ணன், டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் போன்ற மகத்தான ஆளுமைகளுக்குப் பின்னவராக நான் வந்திருக்கிறேன் என்பது குறித்து நான் விழிப்போடு இருந்திருக்கிறேன்.  குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் நுழைந்த போது, எனக்கு முன்பிருந்த பிரணவ் முகர்ஜி அவர்கள், என்னுடைய கடமைகள் குறித்து தனது அறிவார்ந்த ஆலோசனைகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள்.  இருந்த போதிலும், எனக்கு ஐயப்பாடு ஏற்பட்ட போதெல்லாம், நான் காந்தியடிகள் பாலும், அவரது பிரபலமான மந்திரச் சொற்கள் பாலும் என் சிந்தையைச் செலுத்துவேன்.  மிகவும் அடித்தட்டிலே இருக்கும் பரம ஏழையின் முகத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற அவரது அறிவுரையை மனதில் தாங்கி, நான் மேற்கொள்ளவிருக்கும் எனது நடவடிக்கை அவருக்கு ஏதாவது பயனாக இருக்குமா என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன்.  நான் மீண்டுமொரு முறை கூறுகிறேன், காந்தியடிகளின் வாழ்க்கையையும், கற்பித்தல்களையும், ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களுக்காவது நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று உங்களிடத்திலே வலியுறுத்துகிறேன்.

 

பிரியமான சக குடிமக்களே,

 

  1. இயற்கை அன்னை ஆழ்துயரில் இருக்கிறாள், நமது பூமியின் எதிர்காலத்தையே கூட பருவநிலைச் சங்கடம் ஆபத்துக்குள்ளாக்கலாம்.  நாம் நமது சுற்றுச்சூழலை, நமது நிலத்தை, காற்றை, நீரை, நமது குழந்தைகளுக்காகவாவது பாதுகாக்க வேண்டும்.  நமது அன்றாட வாழ்க்கையில், வாடிக்கையான தேர்வுகளில், நமது மரங்கள், ஆறுகள், கடல்கள், மலைகள், பிற உயிரினங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் அக்கறை காட்ட வேண்டும்.  தேசத்தின் முதல் குடிமகன் என்ற முறையில், என் சக குடிமக்களுக்கு ஆலோசனை ஒன்று நான் வழங்க வேண்டுமென்றால் அது இதுவாகவே இருக்கும்.

 

  1. எனது உரையின் நிறைவில், என் சககுடிமக்களுக்கு நான் எனது உளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   பாரத அன்னைக்கு என் வணக்கங்கள்!!  உங்கள் அனைவரின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

 

நன்றி,

ஜெய் ஹிந்த்!!

**********



(Release ID: 1844458) Visitor Counter : 336