பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜெர்மனியில் ஜி7 உச்சி மாநாட்டில் “ஒன்றாக மேலும் வலிமையடைவோம்: உணவுப் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல்” குறித்த கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 27 JUN 2022 11:59PM by PIB Chennai

மதிப்பிற்குரியவர்களே,

 

உலகளாவிய பதற்றமான சூழ்நிலையில் நாம் இன்று சந்திக்கிறோம். இந்தியா எப்போதும் அமைதிக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையிலும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக  பாதையையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த புவிசார் அரசியல் பதற்றத்தின் தாக்கம் ஐரோப்பாவில் மட்டும் அல்ல. எரிசக்தி மற்றும் உணவு தானியங்களின் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. குறிப்பாக, வளரும் நாடுகளின் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சவாலான நேரத்தில், தேவைப்படும் பல நாடுகளுக்கு இந்தியா உணவு தானியங்களை வழங்கியுள்ளது. கடந்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக சுமார் 35,000 டன் கோதுமையை அனுப்பியுள்ளோம். மேலும், அங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகும், நிவாரணப் பொருட்களை வழங்கிய முதல் நாடு இந்தியாதான். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய எங்களது  அண்டை நாடான இலங்கைக்கும் நாங்கள் உதவுகிறோம்.

 

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் என்னிடம் சில பரிந்துரைகள் உள்ளன. முதலாவதாக, உரங்கள் கிடைப்பதில் கவனம் செலுத்த வேண்டும், மேலும், உலகளவில் உரங்களின் மதிப்புச் சங்கிலியை சீராக வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் உர உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம், இது தொடர்பாக ஜி7 நாடுகளின் ஒத்துழைப்பை நாடுகிறோம். இரண்டாவதாக, ஜி7 நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விவசாய மனிதவளம் அதிகமாக உள்ளது. இந்திய விவசாயத் திறன்கள், ஜி7 உறுப்பினர்களாக உள்ள சில நாடுகளில் சீஸ் மற்றும் ஆலிவ் போன்ற பாரம்பரிய விவசாயப் பொருட்களுக்கு புத்துயிர் கொடுக்க உதவியுள்ளன. ஜி7 கூட்டமைப்பால் அதன் உறுப்பு நாடுகளில் இந்திய  வேளாண் திறமைகளைப் பரவலாகப் பயன்படுத்த ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்புமுறையை உருவாக்க முடியுமா? இந்திய விவசாயிகளின் பாரம்பரிய திறமைகளின் உதவியுடன், ஜி7 நாடுகளில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

 

அடுத்த ஆண்டை, சர்வதேச தினை ஆண்டாக உலகம் கொண்டாடுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், தினை போன்ற சத்தான மாற்று உணவினை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். உலகில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தினையால் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்க முடியும். இறுதியாக, இந்தியாவில் நடக்கும் 'இயற்கை விவசாயப்' புரட்சியின் மீது உங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க விரும்புகிறேன்.

மதிப்பிற்குரியவர்களே,

 

பாலின சமத்துவத்தைப் பொறுத்தமட்டில், இன்று, இந்தியாவின் அணுகுமுறை 'பெண்களின் வளர்ச்சி' என்பதிலிருந்து 'பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' என்பாதை நோக்கி நகர்ந்துள்ளது. முன்களப் போராளிகளாக, 6 மில்லியனுக்கும் அதிகமான இந்திய பெண்கள், பெருந்தொற்று காலத்தின் போது குடிமக்களைப் பாதுகாத்தனர். இந்தியாவில் தடுப்பூசிகள் மற்றும் சோதனைக் கருவிகளை உருவாக்குவதில் எங்களது பெண் விஞ்ஞானிகள் பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர்.  இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண் தன்னார்வலர்கள் கிராமப்புற சுகாதாரத்தை வழங்குவதில் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர், அவர்களை நாங்கள் 'ஆஷா ஊழியர்கள்’ என்று அழைக்கிறோம். கடந்த மாதம்தான், உலக சுகாதார நிறுவனம், இந்த இந்திய ஆஷா பணியாளர்களுக்கு '2022 குளோபல் லீடர்ஸ் விருதை‘ வழங்கி கவுரவித்தது.

 

இந்தியாவில் உள்ளாட்சி முதல் தேசிய அரசாங்கம் வரை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தலைவர்களையும் கணக்கிட்டால், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், மொத்த எண்ணிக்கை லட்சக் கணக்கில் இருக்கும். இந்தியப் பெண்கள் இன்று முடிவெடுப்பதில் முழு அதிகாரமும் ஈடுபாடும் கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. அடுத்த ஆண்டு, இந்தியா ஜி20க்கு தலைமை தாங்க உள்ளது. ஜி20 அமைப்பு மூலம், கொவிட் தொற்றுக்குப் பிந்தைய மீட்சி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஜி7 நாடுகளுடன் நெருக்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம்.

நன்றி.

பொறுப்பத்துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் வழங்கப்பட்டது.

 

*****


(Release ID: 1837499) Visitor Counter : 175