பிரதமர் அலுவலகம்

பெங்களுருவில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 20 JUN 2022 7:29PM by PIB Chennai

கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் அவர்களே, கர்நாடகாவின் புகழ்பெற்ற முதல்வர் பசவராஜ் அவர்களே, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களே, கர்நாடக மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, பெங்களுருவில் வாழும் எனது சகோதர, சகோதரிகளே வணக்கம்..

கர்நாடக மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்காக, துடிப்பான அரசாங்கம் அளித்த நம்பிக்கையின் சான்றுகளை இன்று பார்க்கிறோம். இன்று ரூ.27,000 கோடி மதிப்புக்கு அதிகமான  திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் வேண்டிய சேவைகளை அளிக்கும். சுருக்கமாக சொன்னால், வாழ்க்கையையும், வணிகத்தையும் இது எளிமையாக மாற்றும். 

சகோதர, சகோதரிகளே,

நான் இங்கு வருவதற்கு முன், இந்திய அறிவியல் கழகம் மற்றும் அம்பேத்கர் பொருளாதாரப் பல்கலைக் கழக மாணவர்களுடன், கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அவர்களின் ஆர்வத்தை அறிந்து கொள்ள உரையாடினேன். புதிய உத்வேகத்துடன் வெளியே வந்தேன். இந்த திட்டங்களில் ஈடுபட்டுள்ள தனியார் துறையினரையும் நான் மனதார பாராட்டுகிறேன். உற்சாகமும், முயற்சியும் இணைந்திருக்கும் உங்களோடு, நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இது பெங்களுருவில் நான் இன்று கலந்து கொள்ளும் கடைசி நிகழ்ச்சி என்பது உங்களுக்கு தெரியும். நான் இன்று மைசூருக்கு செல்கிறேன். கர்நாடகாவின் வளர்ச்சி பயணத்தை விரைவுப்படுத்தும் முயற்சிகள் தொடரும். கர்நாடகாவில் 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும், 7 ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்ட கொங்கன் ரயில்வே அதன் முக்கிய மைல்கல்லாகும். இந்த திட்டங்கள் அனைத்தும், கர்நாடகாவின் இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயப் பெருமக்கள், தொழிலாள சகோதர, சகோதரிகள், புதிய தொழில்முனைவோர் ஆகியோருக்கு அதிகளவில் வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிக்கும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக கர்நாடகா மாநிலத்துக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துகள்.

நண்பர்களே,

இளைஞர்களின் கனவு நகராமாக பெங்களுரு மாறி உள்ளது. பெங்களுரு, 'ஒரே இந்தியா, திறமையான இந்தியா' என்பதன் பிரதிபலிப்பாக உள்ளது. பெங்களுருவின் வளர்ச்சி லட்சக் கணக்கான கனவுகளின் வளர்ச்சி. எனவே, பெங்களுருவின் மேம்பாட்டுக்காக கடந்த 8 ஆண்டுகளாக அரசு தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது. பயண நேரம், போக்குவரத்து செலவை குறைப்பதன் மூலம், கனவுகளை நிறைவேற்ற துடிக்கும் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையை எளிதாகவும், வசதியாகவும் மாற்ற அரசாங்கம் தொடர்ந்து அயராது பாடுபட்டு வருகிறது. இன்றும் அதே அர்ப்பணிப்பு உணர்வை நாம் காண்கிறோம்.

நன்றி!

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835635

***************



(Release ID: 1836179) Visitor Counter : 119