பிரதமர் அலுவலகம்
நவ்சாரியில் ஏ.எம். நாயக் சுகாதார வளாகம் மற்றும் நிராளி பன்னோக்கு மருத்துவமனையை பிரதமர் திறந்துவைத்தார்
“ ஏழைகளுக்கு அதிகாரமளித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க, நவீனமயமாக்கல் மற்றும் சுகாதார சேவைகள் எளிதில் கிடைக்கச்செய்வது அவசியம்”
“குஜராத்தில் நான் பெற்ற அனுபவங்கள், நாடுமுழுவதும் உள்ள ஏழைகளுக்கு பணியாற்ற உதவியது”
“சேவையாற்றுவதை நாட்டின் வலிமையாக்கிய பாபு போன்ற தலைசிறந்த மனிதர்கள் நமக்கு ஊக்கமளிக்கின்றனர்”
Posted On:
10 JUN 2022 3:36PM by PIB Chennai
நவ்சாரியில் ஏ.எம். நாயக் சுகாதார வளாகம் மற்றும் நிராளி பன்னோக்கு மருத்துவமனையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். கரேல் கல்வி வளாகத்தையும் அவர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உள்ளுர் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே மேம்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்கள் நவ்சார் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
நிராளி அறக்கட்டளை மற்றும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தையும் வாய்ப்புகளாக மாற்றி, வேறு எந்த குடும்பத்திற்கும் அத்தகையை நிலை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்த திரு ஏ. ஏம்.நாயக் ஆகியோரை பாராட்டிய அவர், நவீன சுகாதார வளாகம் மற்றும் பன்னோக்கு மருத்துவமனை கிடைக்கப்பெற்றுள்ள மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
ஏழைகளுக்கு அதிகாரமளித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க, நவீனமயமாக்கல் மற்றும் சுகாதார சேவைகள் எளிதில் கிடைக்கச்செய்வது அவசியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். “நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கான முழுமையான அணுகுமுறை குறித்து கடந்த 8 ஆண்டுகளில் நாங்கள் கவனம் செலுத்தினோம்” என்று அவர் கூறினார். சிகிச்சை வசதிகளை நவீன மயமாக்குவதோடு, ஊட்டசத்து மற்றும் தூய்மையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். “ஏழை மற்றும் நடுத்தர மக்களை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க நாம் முயற்சித்து வருகிறோம், ஒரு வேளை, நோய் பாதிப்பு ஏற்பட்டால், சிகிச்சைக்கான செலவுகளை குறைக்கவும் நாம் முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். குஜராத்தின் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதார சேவை குறியீடுகள் மேம்பட்டிருப்பதும், நீடித்த வளர்ச்சிக்கான நித்தி ஆயோக்கின் தரவரிசை பட்டியலில் குஜராத் முதலிடம் பெற்றிருப்பதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.
தாம் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ஆரோக்கியமான குஜராத், ஒளிமயமான குஜராத், முதலமைச்சரின் அமிர்த திட்டம் போன்றவை தொடங்கப்பட்டதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். இந்த அனுபவங்கள், நாடுமுழுவதும் உள்ள ஏழைகளுக்கு பணியாற்ற உதவியதாக அவர் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், குஜராத்தில் இலவச சிகிச்சை பெற்ற 41 லட்சம் நோயாளிகளில் பெரும்பாலானோர் பெண்கள், நலிந்த பிரிவினர் மற்றும் பழங்குடியின மக்கள் ஆவர். குஜராத்தில், 7.5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் மற்றும் 600 “தீன் தயாள் மருந்தகங்கள்” அமைக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கான அதிநவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பவநகர், ஜாம்நகர், ராஜ்கோட் போன்ற பல நகரங்களில் புற்று நோய் சிகிச்சை வசதிகள் உள்ளன. அதேபோன்ற வசதிகள், இம்மாநிலத்தில் சிறுநீரக சிகிச்சைக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறியீடுகளை மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதற்கான சிரஞ்சீவி திட்டம், 14 லட்சம் தாய்மார்களுக்கு பயனளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குஜராத்தின் சிரஞ்சீவி மற்றும் கிகிலாஹட் திட்டங்கள், தேசிய அளவில் இந்திரதனுஷ் இயக்கம் மற்றும் பிரதமரின் மகப்பேறு திட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். மாநிலத்தில் மருத்துவக்கல்வியை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் பிரதமர் பட்டியலிட்டார். ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம் மாநிலத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 30-ஆகவும், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 1100-லிருந்து 5700 ஆகவும், முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 800-லிருந்து 2000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
குஜராத் மக்களின் சேவை உணர்வுக்கு மரியாதை செலுத்துவதாக கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். “குஜராத் மக்களுக்காக, சுகாதாரம் மற்றும் சேவைகளை வழங்குவதே வாழ்க்கையின் இலக்கு. சேவையாற்றுவதை நாட்டின் வலிமையாக்கிய பாபு போன்ற தலைசிறந்த மனிதர்கள் நமக்கு ஊக்கமளிக்கின்றனர். குஜராத்தின் உணர்வுகள், இப்போதும் ஆற்றல்மிக்கவை. இங்குள்ள வாழ்க்கையின் மிகவும் வெற்றியடைந்த நபர்கூட, சில சேவைகளுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். குஜராத்தின் சேவை உணர்வு, அதன் திறமைக்கு ஏற்றவாறு அதிகரிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
***************
(Release ID: 1833042)
Visitor Counter : 154
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam