சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, 4-வது மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை மத்திய குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்

Posted On: 07 JUN 2022 1:44PM by PIB Chennai

நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் பொருட்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்க, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் 4-வது மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். உணவு பாதுகாப்பு சூழலில், போட்டி மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2018-19-ம் ஆண்டில், 5 அம்சங்களை அடிப்படையாக கொண்ட உணவு பாதுகாப்பு குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுகளை வழங்குவதற்கு இந்த குறியீடு உதவி புரியும்.

உலக உணவு பாதுகாப்புதின நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மக்கள் எடுக்கும் முயற்சிகளை அங்கீரிப்பதாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் அமையும் என்றும் அவர் தெரிவித்தார். நாடும், ஊட்டச்சத்தும் ஒன்றுடன் ஒன்று ஆழமாக இணைந்துள்ளதாகவும், வளமான இந்தியா அமைய ஆரோக்கியமான குடிமக்களை கொண்ட இந்தியா உருவாக வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.

குடிமக்கள் அனைவரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசு பணியாற்றி வருவதாகவும், இதற்காக தேசிய சுகாதார மையங்களையும், மாவட்ட மருத்துவமனைகளையும் மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் டாக்டர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார். குடிமக்களுக்கு வேண்டிய ஆரோக்கியமான, மற்றும் சத்தான உணவை உறுதி செய்வதில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் முக்கியப் பங்கு வகிப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்தார். மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு நடைமுறைகளை உறுதி செய்வதில் மாநிலங்களுக்கு முக்கியமான பங்கு இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், ஆரோக்கியமான தேசத்தை உறுதிப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

2021-22-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் வெற்றி பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சர் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த ஆண்டு, தரவரிசையின் அடிப்படையில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்திலும், குஜராத் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சிறிய மாநிலங்களில் கோவா முதலிடத்திலும், அதனை தொடர்ந்து மணிப்பூர், சிக்கிம் ஆகிய மாநிலங்களும் உள்ளன. யூனியன் பிரதேசங்களில் ஜம்மு & காஷ்மீர் முதலிடத்திலும், தில்லி இரண்டாம் இடத்திலும், சண்டிகர் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டிய மாநிலங்களுக்கு அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1831794

***************


(Release ID: 1831873) Visitor Counter : 958